Friday, June 29, 2018

பெண் அழகு தான்!

எத்தனை குழந்தைகள் இருந்தாலும் உன்னை
முதலில் கையில் ஏந்துகையில்
பெண் அழகு தான்

அலுவல் கவலைகள் பல கொண்டு  வீட்டினுள்
நுழைகையில் காத்திருந்து கண்டதும் ஓடி வந்து
கட்டிக்கொள்ளும் குட்டி தேவதையாய்
பெண் அழகு தான்

தனக்கு கிடைப்பதை தன் உடன்பிறந்தவருக்காய்
விட்டுக்கொடுக்கையில்
பெண் அழகு தான்

தனக்கு பின் பிறக்கும் குழந்தைக்கு
இவள் இன்னொரு தாயாய் இருப்பதில்
பெண் அழகு தான்

இளம் பருவத்தில் தனக்கு பிடித்தவனை
பார்க்கையில் நாணம் கொள்ளுகையில்
பெண் அழகு தான்

பேசி பார்த்து அறியாத ஒருவனுக்கு
பெற்றோர் சொன்னதால் நம்பி தாலி அணிந்து
அடுத்த நிமிடம் முதல் தன் வாழ்க்கையை
அர்பணிக்கையில்
பெண் அழகு தான்

சோகமாய் இருக்க தன்  மடி சாய்த்து
நம் தலைகோதி கவலைபடாதே என சொல்கையில்
பெண் அழகு தான்

காலையில் நமக்கு முன் விழித்து
இரவில் நமக்கு பின் தூங்கி
இடைப்பட்ட நேரத்தில் இன்னல்கள்
பல கொண்டாலும்
மாலை வருகையில் புன்முறுவல் செய்யும்
பெண் அழகு தான்

தாயாய், தோழியாய் , சகோதரியாய்
மனைவியாய், மகளாய்,
உறவுகள் பல கொண்டாலும்
என்றும் எதிலும்
பெண் அழகு தான்

எதனினும் ஒப்பிட முடியாத
அற்புதமான அன்பில் என்றும்
பெண் அழகு தான்


Monday, June 25, 2018

பேர் தெரியா மரம்


என் வீட்டு பக்கத்தில் இருந்தது
பேர் தெரியா மரம் ஒன்று
யார் விதைத்த விதையில் மலர்ந்ததென்று
யாருக்கும் அறியேன்

வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்
பள்ளி சென்று திரும்புகையில் யாரையோ
தொலைத்து தேடும் குயிலின் ஓசை
எனக்கு ஒரு வரவேற்பு கவிதை தரும்

பேர் தெரியா மரத்தில் ஊஞ்சல் கட்டி
தோழர்களுடன் கொஞ்சி அதில் விளையாடிய
நாட்கள் இன்னும் நிற்காமல் ஆடுகிறது
என் நெஞ்சில்

அதனால் அதற்கு பெயர் வைத்தேன் ஊஞ்சல்மரம்,
இதுவும் காய் காய்க்கும், பழுக்கும் , தரையில் விழுந்து
அழுகும் தீண்டுவார் யாருமிலர்
அதற்காய் அமமரம் கவலைகொண்டதாய் நினைவில்லை
வெயிலுக்கு நிழலும் தரும்,
மழைக்கு குடையாயும் மாறும்

சூறாவளி காற்றில் வீட்டின் கூரைகள்
பட்டம் போல் பறந்த பின்
பலநாள் எங்களுக்கு அடைக்கலம்
கொடுத்தது இம்மரம்
எத்தனை இன்னல்கள் வந்தபின்னும்
அசராது நிலைத்து நிற்கும் வித்தையை
எங்களுக்கு கற்றுத்தந்த போதிமரம்

இதுவரை யாருக்கும் இடையூறாய்
நிற்காத இம்மரம்
சாலை விரிவாக்கத்திற்கு
இடையூறென்று சொல்லி இதோ
அதை வேரறுக்க ஒரு கூட்டம்
அதன் நிழலில் நின்று திட்டம் தீட்டுகிறது

பாலை குடித்து அதை கள்ளென்று
பிதற்றும் ஒரு மூடர்கூட்டங்கள்
எண்ணியதுண்டா?

அடுத்த தலைமுறை
வெயிலுக்கு எங்கு இளைப்பாறும்
குழந்தைகள் எங்கு ஊஞ்சலாடும்
காகங்கள் எங்கு கூடு கட்டும்

இதுபோல் ஒரு மரம் வளர
எத்தனை ஆண்டுகள் ஆகுமோ

இதோ சிறுது நாட்கள் தங்கிய
காகம் இம்மரத்தின் விதையை கவ்வி
பறந்து செல்கிறது மனிதர்கள்
இல்லா இடம் நோக்கி விதைக்க

மனிதா ,இயற்கையை அழிக்கும் நீ
அதை உருவாக்குவது எப்போது ?

Thursday, June 21, 2018

நட்பை நேசிப்போம்


கவலையில் இருக்கையில் சொன்னால் உதவி விட்டு செல்பவன் உறவுக்காரன்
ஆனால் தன் தோள் கொடுத்து உடன் இருப்பவன் நண்பன்

சிறிது காலம் நீடிக்கும் ரயில் பயண நட்பு
சிறுவயதில் தொடங்கி சிறகு விரித்து திசைமாறி பறந்தாலும்
நிலைத்து நிற்கும் நம் நட்பு

ஒற்றை ரூபாய் கொடுத்து வாங்கிய மிட்டாயாயினும்
பகிர்ந்துண்ண கற்றுக்கொடுத்தது நம் நட்பு

வார விடுமுறையில் கண்டுகளித்த விஷயங்களையும்
ஆண்டு விடுமுறையில் தாத்தா பாட்டியிடம் சென்று
அவர்கள் சொன்ன கதைகளையும் உன்னை சந்தித்த மறுகணம்
பகிரவே துடித்து கொண்டிருக்கும் என் மனம்

பள்ளிமுடிந்தும் வீடு செல்லாமல் உன்னுடன்
இருக்கவே விரும்பும் என் மனம்

அடிக்கடி சண்டையிட்டு கொள்வோம்
பேசாமல் இருப்போம் இரவு கடக்கும் வரை மட்டும்
மறுநாள், புதிய நாளாய் தொடங்கும் நம் நட்பு

மதிய உணவு இடைவேளையில் உனக்கு
சோறு ஊட்டிய தாய்
அதே தாயன்புடன்  எனக்கும் ஊட்டுகையில்
கண்கலங்கியதுண்டு  நம் நட்பை எண்ணி

வெளியில் மழை பெய்கையில்
அதை ரசிக்க ஜன்னலோர இருக்கைக்கு
போட்டிபோட்டது என்றும் மலரும் நினைவுகள்
நம் வாழ்வில்

இதோ,
மழை பெய்கிறது, இருவரிடம் தனித்தனியே
குடை இருந்தும் ஒரே குடையில்
கதை பேசி நடக்கையில்
நனைகிறது மண்ணும் மனமும்


நட்பை நேசிப்போம் வாழ்க்கையை ரசிப்போம்

Monday, June 11, 2018

இரை தேடி

இதோ இரை தேடி என் தாய்
எங்கோ பறந்து செண்டிருக்கிறாள்
கூட்டில் எங்களை விட்டுவிட்டு

மனிதன் குடம் எடுத்து
வீதியில் அலைந்து கொண்டிருக்கிறான்
இதில் என் தாகம் பற்றி கவலை கொள்ள
அவனுக்கேது நேரம்

அவன் சிந்தும் சிறு துளிகள்
நீர் போதும் என் தாகம் தீர்க்க

குளத்தையும் , குட்டையையும்
அழுக்காக்கி பாசிபிடித்து
உபயோகிக்க முடியாமல்
வைத்துள்ளான்

ஏரியையையும் கரையாக்கி
வீடுகட்டி குடியேறியபின்
தண்ணீருக்காக
அலைந்துகொண்டிருக்கிறான்

மழை தரும் மேகத்தை
கொண்டுவரும் காற்றுகூட
இன்று மரங்களின்றி
அனல்காற்றாய் அறைந்துகொண்டிருக்கிறது

என் தாகம் கூடிக்கொண்டேயிருக்கிறது

இதோ ,
கருமேகம் எங்கிருந்தோ
வருகிறது
வாய் திறந்து அண்ணாந்து பார்க்கையில்
சிறு துளி என் வாயில் பட்டு
தெறிக்கிறது

துளிகள் கூட கூட
என் தாகமும் தீர
உடலும் மனமும்
குளிர்ந்தது

சிறகுகள் விரிய
பறக்க தோன்றியது
மழை வரும் திசை நோக்கி
இதோ
மெல்ல மெல்ல
எழுகிறேன் மேலே