Monday, September 25, 2017

ஆசிரியர் !

ஐந்து  வயதில் என்னை வளைத்து
அழியாத கல்வியினை புகட்டிய
என் முதல் ஆசிரியை இன்றும்
மனதில் நிற்கிறார்

விளையாட்டில் மோகம் கொண்டு
சுற்றி திரிந்த வயதில் அழுது அடம்பிடித்தும்
சேர்த்து விட்டனர் பள்ளியில்

அம்மையும் அப்பனும் தான் என்னை அறிவர்
அன்பு தருவார்கள் என எண்ணிய என்னை
தன் மார்மோடு அணைத்து கல்வி அமுதம்
ஊட்டியவர் என் ஆசிரியை

பிஞ்சு மனம் அதில் அறிவு நீர்பாய்ச்சி
கை பிடித்து என் தாய் மொழி அரிச்சுவடி
எழுத கற்று தந்தவள் என் ஆசிரியை

சாதி மதம் பாராமல் ஏற்ற தாழ்வு காட்டாமல்
எல்லோருக்கும் ஒரே போல போதிப்பவள் என் ஆசிரியை

பள்ளிக்கூடம் எனும் ஓர்  இடத்தில் நீ இருந்தும்
உன்னிடம் படித்து உலகை வலம் வருகிறோம்
நாங்கள் உன்னை சுற்றி

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாணவர்கள்
எல்லோரிடவும் ஒரே போல தான் இருக்கிறது
உன் அணுகுமுறை

கொடுக்க கொடுக்க பெருகும் ஒரே செல்வம்
கல்விச்செல்வம் கொடுத்து கொண்டே இருக்கிறார்
என் ஆசிரியர்

அளவு கடந்து எங்களின் விளையாட்டுக்கள்  எல்லை மீறும் போது
எங்களை நல்வழிப்படுத்த தண்டனையும் தருவாய்

பள்ளியின் கடைசி நாள் எல்லாரிடமும் ஒரு கேள்வி கேட்டீர்கள்
படித்து முடித்து என்னவாக ஆசை என்று ?
ஒவ்வொருவரும்  கை தூக்கி  ஒவ்வொன்று சொன்னோம்
எவரும் சொல்லவில்லை உங்களை போல் ஆசிரியர் ஆவேன் என்று !!

அன்று கனத்த இதயத்துடன் நீங்கள் வீடு சென்றீர்கள் ஆனால்
காரணம் அன்று புரியவில்லை எனக்கு

இன்று புரிகிறது எவ்வளவு மகத்துவம் மிகுந்தது உங்கள் பணி
என்று

மாத பிதா குரு மூவரும் வாழும் தெய்வங்களே !!

--- என் ஆசிரியர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம் ---

Monday, September 18, 2017

கடல் அன்னையே

இரவுகள் பல சுகம் தரலாம்
பலருக்கு
இரவுகள் என்றும் நரகம் தான்
எனக்கு

எத்தனை பேர்களின் கவலைகள்
தீர்க்கும் கடல் நீ
என்னை போன்றோர்களின்
பசியையும் நீயே தீர்ப்பாய்

இன்று , என் கணவன் என்றும் போல்
வலை விரித்து மீன் பிடிக்க
புறப்பட்டான் உன்னிடம்

வைத்துக்கொண்டு வஞ்சம் செய்யாதவள் -நீ
பல நாள் எங்கள் பட்டினியை மறக்க செய்தவள் நீ

கடற்கரையில் மனிதர்களை பார்ப்பதாலோ என்னவோ
ஆர்ப்பரித்து சீறுவாய் நீ
உன் உண்மை குணம் நடுக்கடல் வந்து பார்த்தவருக்கு புரியும்
அமைதியின் இருப்பிடம் நீ என்று

எல்லைகள் உனக்கில்லை , உன்னில் எல்லைகளை
வகுத்தவனுக்கோ பகுத்தறிவுமில்லை

மீன் தேடி வலை விரித்து, இரவில்கடலில்  சென்ற என் கணவனுக்கோ
மீளா துயரத்தில் நான் விழுவேன் என்று நினைத்திருக்க வாய்ப்புமில்லை

வலை விரித்து காத்திருந்த நேரம் , எல்லை கடந்து வந்ததாய்
தாக்கியது துப்பாக்கி குண்டுகள் என் கணவனின் மார்பில்

உதவிக்கு யாருமில்லை என் கடல் அன்னையே
நீயே சரணம் என்று உன் மடியில் விழுந்தாரே !
அமைதியாய் என்றும் போல் இன்றும் உன் மடியில்
ஏற்றுக்கொண்டாய்

அவரின் சடலம் கூட நான் பார்க்கவில்லை
உன்னில் அவர் வாழ்வார் என்று நம்பிக்கையில்
இதோ நானும் வருகிறேன் உன் மடியில் விழுகிறேன்
என் கடல் அன்னையே !

Tuesday, September 5, 2017

அம்மா !

ஒன்றாய் தான் உருவானோம்
ஒன்றாய் தான் வளர்ந்தோம்
தாயின் கருவறையில்
  
ஒன்றுபோல் பாசம் காட்டினாள் தாய்
இரு மடங்கு உண்பாள் நமக்காக
இரவு பகல் தொலைத்தாள் நமக்காக
இருந்தும் இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்

ஒரு பிள்ளை இல்லை என ஏங்குவோர் பலர்
இருக்க தனக்கு இரு பிள்ளை பிறக்க போவதை
எண்ணி இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்

பிரசவம் நெருங்கும் நேரம் மருத்துவர்
நுட்பமாய்ச் சோதித்து பார்த்ததில்  ஒருவருக்கு ஊனம் 
என தெரிந்தது 

உன்னிடம் சொன்னாள் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாகலாம் 
என மறைத்தனர் தந்தை உட்பட 

எங்களுக்கு என்ன கவலை வெளியுலகம் காண
ஆவல் கொண்டு எட்டி உதைத்தோம் உன் வயிறில்

மருத்துவமனை அறுவை சிகிச்சை வாசல் வரை
தந்தை பின் உனக்கு துணை நாங்கள் மட்டும்

வலியின் உச்சம் தந்து, மரணத்தின் வாசல் தொட்டு பிறந்தோம்
சில நிமிட இடைவேளையில் பிறந்ததால் அண்ணன் தம்பி ஆனோம்
நாங்கள்

கண் திறந்து எங்களை பார்த்தாய் உன் கண்களின் ஆனந்தம்
குறையவில்லை

இதுவரை என் குறை நீ கண்டதில்லை
இதுவரை இரு வேறு முகம் காட்டியதில்லை
இதுவரை உன் அன்பு குறையவில்லை
இதுவரை என்னை வீழ அனுமதித்ததில்லை
இதுவரை எனக்கு நல்வழி காட்ட தவறியதில்லை

புரியாத புதிர்தான் நீ அம்மா
ஊனம் உடலிலோ கண்களிலோ அல்ல மனதில் என
உணர்த்தி கொண்டே இருக்கிறாய் உலகிற்கு

உன் அன்பிற்கு முன்னால்   ஊனம் கூட பலவீனம் ஆகிடும் அம்மா,
எப்பிறவியிலும் வேண்டும் நீயே
என் அம்மா !!

Saturday, September 2, 2017

***அனிதா மறைவு 01/09/2017***

இரவில்  என்னை தூங்க விடாமல் செய்த பெயர்
"அனிதா "

பெண் பிள்ளை என்றாலே கள்ளிப்பால் கொடுக்க
நினைக்கும் இச்சமூகத்தில்
கல்வி பால் கொடுத்து  வளர்த்தனர் உன் பெற்றோர்கள்

இன்னல்கள் பல கண்டும் தன் உடல் நலிந்தாலும்
நீ பிறர் உடல் நலம் காக்கும் மருத்துவராக வேண்டும்
என கனவு கண்டனர் உன் பெற்றோர்கள்

வசதி இல்லை வறுமையுண்டு துணை, இருந்தும்
கல்வியின்பால் கொண்ட உன் ஆர்வம் உயர்கல்வி
படிக்க தூண்டியது

மருத்துவர் படிப்பில் சேர வேண்டும் பணம் இல்லையேல்
மேல்நிலை பள்ளியில் நல்ல மதிப்பெண்கள்

இரண்டாவது எட்டுவது சாத்தியம்  என்று  1176/1200 எடுத்தாயிற்று
(நீட்) தடை (NEET ) உனக்கு புதியதல்ல இருந்தும் இது உன் உயிரை
குடிக்கும் என நீ அறியவில்லை

இத்தனை மதிப்பெண் எடுத்தும் நீ தேர்வாகவில்லை எனில் எத்தனை
உயரத்தில் இருக்கிறது நம் கல்வியின் தரம் ?

லட்சியம் மேல் கொண்ட உன் காதல் நீதியின் படியேற வைத்தது போராட
போராடி போராடி வாழ்க்கையே போராட்டமாய் போனதாலோ
உன்னை நீயே மாய்த்துக்கொண்டாய்

இறந்த பின்னும் சாதி பெயர் சொல்லி சண்டையிட அலைகிறது
ஒரு கூட்டம் உயிரோடிருக்கும் போது தண்ணீர் கொடுக்க கூட
முயலாத கூட்டம்

இனி ஒரு  உயிர் இழக்கும் முன் விழித்திடுமோ இச்சமூகம் ?

***அனிதா மறைவு 01/09/2017***