Thursday, August 16, 2018

என் காதல் தேவதை
















இந்த கடல்தாண்டி நீ  இருந்த பொழுதில்
என் இதயத்தில் இடம் பிடித்தவள் நீ

பார்த்துக்கொண்டதில்லை நாம்
இணையம் வழி இணைந்த உறவு
இது

தனிமையே துணை என இருந்தவனை
உன் நினைவுகளே துணை என
மாற்றியவள் நீ

தென்றல் காற்று மெல்ல வந்து
சில்லென்று தொடுகிறது
உன்னை நினைக்கையில்

மென்மையான உன் உரையாடல்
இரவில் ராஜாவின் மெலடி கேட்ட
இன்பம் தரும்

உன்னுடன் செல்ல செல்ல
சண்டைகளிட்ட போதெல்லாம்
இந்த கடல் அலையிடம் தான் வந்து
என் சோகம் பகிர்வேன்

என் சோகமெல்லாம் உள்வாங்கி
மன அமைதியை திருப்பித்தரும்
மீண்டும் உன்னிடம் பேச வைக்கும்

உன்னை பார்க்காத அந்நாட்களில்
இந்த நிலவை காண்பேன் அது
காணாத உன்முகத்தை பிரதிபலிக்கும்

இதோ
கடல்தாண்டி வந்து உன் கரம்
பிடித்தேன்

விரல்களின் இடைவெளியில்
உன் விரல்கோர்த்து
கடற்கரை மணலில் நம் கால்தடம்
பதித்து அமர்கிறோம்

உன் உதடு சிரித்தாலும்
உன் மனதின் சஞ்சலம்
நானறிவேன் அன்பே
பெற்றோரை பிரிந்து
கடல்தாண்டி என் கரம் பிடித்து வந்த
உன் சோகம்

சீறிப்பாய்ந்து வந்த கடல் அலை
நம் அருகே  வந்து பவ்வியமாய் கால் வருட
உனக்கும் சொல்லியிருக்கும் ஒரு சேதி
இருக பற்றிய உன் கைகள் எனக்கும் உணர்த்தியது அதை

இயற்கை என்னும் தேவதைகளுடன்
என் கைகள் பற்றிய என் காதல் தேவதை
என் வாழ்க்கைக்கு  அழகாய்
வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறது


Tuesday, August 14, 2018

சுதந்திரம் !



பள்ளி பருவத்தில்
இனிப்பு கிடைக்கும் என்று
விடுமுறை தினமாய்
இருந்தாலும் பள்ளிக்கு சென்றேன்
மகிழ்ச்சியாய்   இதயத்தில்
தேசிய கொடி குத்திக்கொண்டு

தொலைக்காட்சியில்
பட்டிமன்றமும் , திரைப்படமுமாய்
கழிந்தது பொழுது

விவரம் தெரிந்த வயதில்
காந்தியும், பகத்சிங்கும் ,
சுபாஷ் சந்திர போஸும்
ரத்தம் சிந்தி வாங்கி தந்ததாய்
சொன்னார்கள்

எதற்கு என்றேன்
வெள்ளையனிடம் அடிமையாய்
இருந்தோம் என்றார்கள்

72 வருடத்திற்கு பிறகும்
மனதில் கேள்வி மறையவில்லை
இன்று சுதந்திரமாய் நாம்
இருக்கிறோமா என்று ?!

பிஞ்சு குழந்தைக்கும்
சுதந்திரமாய் விளையாட
முடிவதில்லை எனில்
யாரிடம் எங்கு பறிகொடுத்தோம்
நம் சுதந்திரத்தை ?!

வெள்ளை சட்டை அணிந்த
அரசியல்வாதியிடம்
அடகு வைத்து விட்டோமோ

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
இன்றும் ஏன் கை ஏந்துகிறோம்
வெளிநாட்டில்

கற்பை போல காத்த சுதந்திரம்
இன்று காற்றில் கரைய பார்க்கிறதே

மூவர்ண கொடி
அது நம் முன்னோர்களின்
மூச்சிருக்கும் கொடி
தொப்புள்கொடி உறவு போல்
நம் மரணம் கடந்தும் தொடரும்

அடுத்தவரிடம்
தேடும்வரை எங்கும் காண கிடைக்காது
சுதந்திரம்

உன் வீட்டில் இருந்து
தொடங்கு..
பெண்ணை சுதந்திரமாய்
வளர்த்து
சொல்லிக்கொடுங்கள்
உன் முன்னோர்கள்
வீரர்கள் என்று

நாளைய தலைமுறையேனும்
சுவாசிக்கட்டும்
சுதந்திர காற்றை

மண்ணை தொட்டு
விண்ணை எட்டும் வரை
உரக்க சொல்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம் ....

ஜெய்ஹிந்த் !