Monday, July 8, 2019

சிக்குண்டு தான் கிடக்கிறது என் இதயம்

இரு இதயங்கள்
சிக்குண்டு
கிடப்பதே
காதல்
எனில்

உன் சாயலை
உணர்த்தும் எதுவும்
உன்னிடம் சிக்குண்ட
காதலை
உணர்த்திக்கொண்டிருக்கும்
எனக்கு

சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
சிக்குண்ட காரணம்
தெரியுமுன்
பிரிவென்பது
உயிர்பிரியும் வலி தரும்

காதலிக்கையில்
உன் மௌனம் கூட
புரிந்தது எனக்கு
இன்றோ

இனி
பேசிப்பயனில்லை என்று
மௌனமான உன்
நிசப்தத்தின் அர்த்தம்
தெரியாமல்
திக்கு தெரியாமல்
அலைகிறேன்

இவ்வளவு தான்
காதல் என்று
உணர்ந்தாயோ

இல்லை
இது காதல் அல்ல
என்று
உணர்ந்தாயோ

அன்பின்
தீவிரத்தை
உணர்த்திவிட்டு
செல்கிறாய்

நடுநிசியில்
உறக்கம்
கலைகிறேன்
பின்பு
கனவில் உன்னை
தொலைத்ததாய்
வருந்துகிறேன்
விழித்ததை எண்ணி

எத்தனை யோசித்தும்
பிடிபடாத ரகசியம்
நான் கண்டது
கனவா ?
இல்லை
உன்னை நினைத்து
வாழும் வாழ்க்கை
தான் கனவா?


எதுவாயினும்
உன்னிடம்
சிக்குண்டு
தான்
கிடக்கிறது
என் இதயம் !!!

Little Heart

சின்னஞ்சிறு வயது
மனதில்
எண்ணிலடங்கா ஆசை

எப்படி கேட்பது
கேட்டால் சம்மதம்
கிடைக்குமோ

இதயம்
வேகமாய்
படபட
என்று அடிக்கிறது

வானில் தெரியும்
மேகங்கள் எல்லாம்
இதயம் வடிவில்
தெரிகிறது
இது மனப்பிழையா
இல்லை
ஆசையின் மோகமோ

பார்க்கும் திசை எங்கும்
இதயம் வடிவில்
தெரிகிறது
சாவிக்கொத்து முதல்
சாய்ந்து அமர்ந்திருக்கும்
நாற்காலி வரை

பார்ப்பதெல்லாம்
மஞ்சளாய் தெரியுமாம்
மஞ்சல்காமாலை
நோய் உள்ளவனுக்கு

இதுவும் ஒரு வகை நோயோ ?

இன்று
எப்படியும் கேட்டுவிட வேண்டும்
அடுக்களையில் வேலையாய்
இருந்த
அம்மாவிடம் கெஞ்சி சொன்னேன்
விஷயத்தை

சரி
அப்பாவிடம் சொல்லாதே
என்று
கடுகு டப்பாவில் இருந்து
எடுத்து தந்தாள் 10 ரூபாய்

குஷியாய்
ஓடினேன்
அருகில் இருக்கும்
அண்ணாச்சி கடைக்கு

நெடுநாள்
ஆசை கொண்ட
இதய வடிவ
"Little Hearts" biscuit
வாங்க

Wednesday, July 3, 2019

மட்டைப்பந்து !



இந்த நாள் எப்போ வருமோ
என்று தான் காத்திருந்தேன்

இன்று
வீட்டில் அம்மா இல்லை
விருப்பம் போல
மட்டைப்பந்து
விளையாடலாம்

யோசிக்கும்போதே
ஆனந்தம் ஒட்டிக்கொள்கிறது

பக்கத்துக்கு வீட்டிலிருக்கும்
என் நண்பனையும்
அழைத்தேன்

ஒரு அணி தேர்வு செய்து
டாஸ் போடப்பட்டது
அதிர்ஷ்டமான நாள்
நான் வென்றேன்

முதலில்
நாங்கள் விளையாடுவதாய்
தேர்வு செய்து
நானே முதலில் இறங்குவதாய்
முடிவு செய்தேன்

எவ்வளவு நாட்கள்
ஆயிற்று விளையாடி
இந்த அம்மா ஏனோ
என்னை விளையாடவே
விடமாட்டேன்கிறாள்

சரி
மட்டையை பிடித்து
நிற்க
எதிரணியின் பந்துவீச்சாளர்
ஓடி வருகிறார் முதல் பந்தை எறிய

விளையாடி ரொம்ப
நாட்களாகிவிட்டதால்
கைகள் நடுங்கியது
ரன் அடிக்கமுடியவில்லை

சுற்றமும் என்னையே
பார்ப்பதாய்
உணர்ந்தேன்

ஐந்து பந்தும்
வீணடித்தேன்
கடைசி பந்து
வேகமாய் எறியபட்ட பந்து
என்னைநோக்கி வர

மட்டையை சுழற்றினேன்
பந்து மேலே சென்றது
4 ஆ 6 ஆ
இல்லை
எல்லை கோட்டை
நெருங்கும் நேரம்
பிடித்து விடுவானோ
குழப்பத்தில் இருக்க

முதுகில் "டப் " என்று
ஒரு அடி
பின்னால் திரும்பினால்
நிற்பது
என் அம்மா

" டேய் எத்தனை முறை
சொல்லிருக்கேன்
என் தொலைபேசி எடுத்து
விளையாடாதே என்று"
நீயாவது புத்திமதி சொல்லக்கூடாதா
உன் நண்பனுக்கு என்று
நண்பனுக்கும்  சேர்ந்தே கிடைத்தது
என் அம்மாவின் திட்டு

இனி எப்போ வருமோ
இது போல ஒரு நாள்
காத்திருக்கிறேன்