Saturday, December 13, 2025

வாழ்க்கை !

 பெரும்பாலும்,

ஒவ்வொரு நபரைப் பற்றியும்
மனதில் சில கருத்துக்கள்
பதிந்திருக்கலாம்

அந்த நபர்
முன்பு ஒரு முறை
என்னிடம் உரத்த குரலில்
பேசியிருக்கலாம்

ஆனால்
சில நேரங்களில்
அது ஒரு குறிப்பிட்ட
சூழ்நிலைக்கு
அவரது இயல்பான
எதிர்வினையாகும்

அதை மனதில் கொண்டு
அவரை ஒரு
கடினமான நபரைப் போல
நடத்துவது சரியல்ல

இந்த மாதிரியான
பாரபட்சத்துடன்
ஒருவரை அணுகும்போது, ​​
அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களைக் கூட
நீங்கள் சந்தேகத்துடன் பார்ப்பீர்கள்.

எனவே,
கடந்த கால
சம்பவத்தை மட்டும் வைத்து
ஒருவரை மதிப்பிட முயற்சிப்பது
தவறு.

அதற்கு பதிலாக,
அந்த நபர்
ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதைப்
புரிந்துகொண்டு, அதை மனதில் கொண்டு
முன்னேற முயற்சிக்க வேண்டும்

வாழ்க்கை
எப்போதும் நாம் விரும்பும்
வழியில் செல்ல வேண்டியதில்லை.

அப்படி நடக்கும்போது, ​​
அதைக் கையாள முடியாமலும்,
அதைப் பிடித்துக் கொள்ள முடியாமலும்
போனாலும் பரவாயில்லை
அதற்கு பதிலாக,
நாம் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு
அதைச் சமாளிக்க முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையின்
பல பிரச்சனைகள்
நமது உள்ளார்ந்த திறனை
வெளிக்கொணர வாய்ப்புகளாக இருக்கலாம்

ஒரு பெரிய தோல்வியை
நாம் ஏற்றுக்கொண்டு,
அதை வெற்றியை நோக்கிய
நமது பயணத்தின்
தொடக்கமாகக் கருத முடிந்தால்,
வெற்றி உங்கள் வசமாக
வெகு தூரமில்லை


 அரட்டை அரங்கத்தில் கிடைத்த நட்பு

ஹாய் ,வணக்கம், எப்படி இருக்கீங்க
இதை கடந்து பெரிதாய் எதுவும்
பேசியதாக நினைவில்லை

ஏனோ பரஸ்பரம்
மரியாதை மனதில்
இடம்பிடித்தது
பெயர் கேட்கவில்லை
நாமே வைத்துக்கொண்டோம்
பரஸ்பரம் ஓர் பெயர்
புகைப்படம் கேட்கவில்லை
நாமே கொடுத்துக்கொண்டோம்
நம் நட்பிற்கு ஓர்
உருவம்

சிறுக சிறுக பேச்சு
தொடர்ந்தது பரஸ்பரம்
பிடித்தது பிடிக்காதது என
அவரவர் எண்ணங்களும் தொடர
பேச்சுக்கள் எல்லையின்றி
ஓடிக்கொண்டிருக்கும் நதி போல
தொடர்ந்தது

தேக்கி வைத்திருந்து
அணையில் இருந்து
வெளியேறும் நீர் போல
ரகசியங்கள்
வெளிவந்தன

ரகசியங்கள்
பரிமாறப்பட்டன
இதயங்களுக்கு இடையில் மட்டும்
அன்றும் இன்றும் என்றும்
அவை ரகசியங்களாகவே
காக்கப்படும்

சிலை போல இருந்த வாழ்வில்
வந்தாய் நீ உளி கொண்டு
இருளாய் இருந்த வாழ்வில்
வந்தாய் நீ ஒளி கொண்டு
மெல்ல செதுக்கினாய்
தேவை படும் நேரம்
நிழலாகவும் நீ நின்றாய்

நிழலுக்கும்
குடை பிடிக்கும்
நட்பு நம்முடையது

நம் நட்பின்
துவக்கம்
நாம் விரும்பியதில்லை
நம் நட்பின் முடிவு என்றும்
ஏதுமில்லை

நண்பா
அவர் அவர் வழித்தடத்தில்
இறக்கி விடும் பேருந்தை
போல தான் சிலர்
வாழ்க்கையில்

வாழ்க்கையில்
சிறு மாற்றத்தை
ஏற்படுத்தி
அவர் அவர் திசை நோக்கி
பயணிப்பர்

இருந்தாலும்
நம் நட்பு
உயிர் உள்ளவரை பூக்கும்

தாற்காலிகம்
என தோன்றினாலும்
நல்ல உறவுகளின்
சுவாசம் அது
எப்பொழுதும்
வாழ்ந்துகொண்டே தான்
இருக்கும்

இரவில் பூக்கும் பூ !

 இரவில்

பூக்கும்
 பூ

இயற்கையான
காலசுயற்சியின்
ஓர் இரகசியம்.

தினமும்
உதித்து, மறையும்
சூரியன் போல
நம் வாழ்வில்
உழைத்து பின்
அசதியில் உறங்கி
விழித்து
செல்ல உதவும்
உணர்வு

தொட்டவுடன்
மாறுகிறது உலகம்
நிழல்கள் உயிர் பெறுகிறது
வண்ணங்கள் பேசுகின்றன
நாம் அறியாத எல்லைக்கும்
பயணிக்கிறோம்

நம் உள்ளத்தை
சுத்திகரிக்கும்
ஓர்
சுத்திகரிப்பு நிலையம்

தொழில்நுட்ப வளர்ச்சியில்
தொலைபேசியில் மூழ்கிகொண்டு
சில நேரம் இந்த பூ பூக்க
மறுக்கிறது
நம் வாழ்வில்
பூக்காத நாட்கள்
வறட்சியைப் போல்,
விழிகள் நொறுங்கும்,
நரம்புகள் கதறும்.

பூக்கும் நாட்கள்
ஒரு காதலியின்
சுவாசத்தில் உறைந்த
மௌனம் போல
நல்ல கவிதையாய்
நகரும்
நகரம் என்னும்
நரகதிலிருந்து
சிறு இடைவெளி தரும்

சில நேரம்
எதார்த்தத்தை
நமக்கு உணர்த்தும்

இது ஒரு ஓய்வு அல்ல
வாழ்வில் புதுமை தரும்
திறவுகோல்

என்றும் நம் வாழ்வின்
ஓட்டத்தில் தினமும்
பூக்கவேண்டும்
"பூ"

பலர் வாழ்வில்
தொலைத்த
இரவில் பூக்கும்
பூவின் பெயர்
உறக்கம்

விமானம் !

 தூரத்திலிருந்து இது வரும்

சப்தம் நம்மை
மகிழ்ச்சியில் ஆழ்த்தும்

செய்துக்கொண்டிருக்கும்
வேலைகளை விட்டுவிட்டு
வீட்டிலிருந்து வெளியில் வந்து
கண்கள் விண்ணை பார்க்கும்

பெரிய விமானம்
நம்மை கடக்க
அதில் பயணிப்பவர்கள் நம்மை
காண்பார்கள் என்ற
நப்பாசையில் கைகள் அசைப்போம்

இன்றும்
பலமுறை பயணித்த பின்னும்
விமானத்தின் சப்தம் கேட்டால்
தன்னால் கண்கள் விண்ணை பார்க்கிறது
குழந்தையாய் மாற்றி விடுகிறது


ஒரு சிலருக்கோ
இச்சப்தம் சப்தநாடியையும்
ஒடுக்கி விடுகிறது

வீட்டில் இருந்து
பதுங்கு குழியை நோக்கி
ஓடுகிறார்கள்

அடுத்த நிமிடம்
உயிர் இருக்குமோ என்ற
ஐயத்தில்
படபடக்கும்
இதயம்

சிறாருக்கும் ,
பெரியவர்களுக்கும்
மரண பீதியை கடத்தி
கடந்து செல்கிறது

இருவருக்கும்
வாழ்வு உள்ளவரை
அழியா நினைவுகளை தருகிறது
அது
எப்படிபட்ட நினைவுகள்
என்பது காலத்தின் கையில்

அவளுக்கு நன்றி !

 வாழ்வில் சிலருக்கு

புன்னகை என்பது
இலையின் முனையில்
பனித்துளிமின்னுவது போல
சூரிய கதிர்கள் வரும் நேரம்
மாயமாகி விடும்

பெருந்துக்கங்கள் உள்ள உள்ளத்தில்.
புன்னகை என்பது
நாடகமாய்
இதழ்களில்
தங்கிவிடும்

நினைவில் இருக்கிறதா,
நாம் ஒருகாலையில்
நிறைய வாதமிட்டு பேசிக்கொண்டோம்
ஆனால்..
இன்று ஒரு வார்த்தை கூட
பேச முடியாத அளவுக்கு
நம்மிடம் தூரம்

இந்த உலகத்தில்
மிக அபாயகரமானது
எது என்றால் அது,
ஒருவரை பற்றிய நம் கொண்டாடல்…
மேலும் நம்மை
மிகவும் விரும்பும் அந்த நபர்
நம்மிடம் காட்டும் மௌனம்

எழுதிய முடியாத
ஒரு வலியாக
மனதில்
ஓர் ஓரத்தில்
தங்கி விடும் பாரம்
 
மனிதன் மனம் மாற
நொடிகள் மட்டும் போதும்,
என்று பல மனிதர்கள்
நிரூபித்துள்ளனர்.
நம் வாழ்வில்

இழந்தது அனைத்தும்
அவளுக்காகவே மட்டுமே இருந்தது
இன்று இழப்பதற்கு எதுவுமில்லை

மலர்ந்த பூ ஒர் நாள் வாடிவிடும்
அது விட்டு சென்ற வாசனை
நம் நினைவில் என்றும் இருக்கும்

நினைவுகளையேனும்
என்னிடம் விட்டுச்சென்ற
அவளுக்கு நன்றி

தொடரும் !

 ஒளியில்லா ஜன்னலருகில்

நிழல் போல நான்,
மௌனமாக
ஒவ்வொரு நரம்பிலும்
காயமடைந்த நினைவுகள்
கிறுகிறுக்கின்றன.

சிதைந்த சுவற்றில்
கரையும் கனவுகள்
மனதில் பாதுகாக்க பட்ட
நினைவுகளின் சிறகுகள் படபடகின்றன

எங்கோ எப்போதோ
முகவரி தொலைத்த
தன்னை
வெளிகாட்டிக்கொள்ள
விரும்பாத
புன்னகை

இருளின்
மண்டபத்தின் நடுவில்
அமைதியாக அலையும்
உள்ளக் கடல்.

முடிவில்லா
கேள்விக்குறிகளைத் தூக்கி
மரணத்தை
எதிர்பார்த்து நிற்கும்
விடியல்கள்

நினைவுகளால்
வறண்ட கண்களில்
ஒளிந்திருக்கும்
பைத்தியத்தின் சிறு கனல்
சிதைந்த கனவுகளின் நுனிகள்
இதயத்தைக் குத்திச்செல்லும்.

ஒவ்வொரு மூச்சிலும்
இருட்டே நிறைந்து விடுகிறது.

பகலின் முகம் மறைந்த இரவில்,
உறங்காத விழிகளுக்கு என்ன விருந்து?

மரணத்தின் நிழல்
என்னுள் விழும் வரை
இக்காத்திருப்பு
தொடரும்

பெண்ணின் குரல் !

 நடுநிசி இரவில்

கருமைச் சுவற்றின் அமைதியில்
நிழலாய் நின்றாள் அவள்…
சாபமாய் காலம் செதுக்கிய
ஒரு பெண் உருவம்

அவள் பார்வை
சூரியன் ஒருபோதும் தழுவாத கண்கள்
மரணத்தின் மங்கிய ஒளி;
புன்னகை என்ற சொல் கூட பயப்படத்தக்க,
கருமைத் துண்டாய் உறைந்த உதடுகள்

நகரின் கழிவு நீரில்,
மலர்ந்த மலராக அல்ல
எரிந்து கரிந்த பனித்துளிபோல்,
வாடிய மணம் மட்டும் சுமந்து நிற்கும் அவள்..

பசி எனும் பேயின்
கோரப்பிடியில் சிக்குண்டு
நிற்கிறாள் திராணியின்றி
அனாதை என்ற பெயரும் சுமந்து
உடலும் உயிரும் நடுங்கி உறைகின்றன

இந்த நரகச் சந்தையில்
அவளுக்கு இடமில்லை;
தெய்வங்கள்கூட கண்களால் அவளை காண
தவிர்த்து விட்டனவோ என்னவோ

மனித மரபின் மரணச் சுவட்டின் விளிம்பில்,
அவளின் சிரிப்பு கேட்கப்படாமல் விடப்படும்;
அவளின் குரலே,
நிழலாய் தொலைந்து போகும்.

உதவிக்காய் கைநீட்டினாள் - காற்றே பதிலளித்தது.
உலகம் வீசியது கற்களையே;
வலி மட்டுமே விளைந்தது பலனாய்.

ஒரு காலத்தில்
அவளுக்கும் கனவுகள் இருந்தனோ தெரியவில்லை;
வர்ணங்களால் நிரம்பிய சிறுவயது கனவு
அன்பின் வெப்பம் நிரம்பிய நினைவுகள்…
ஆனால் இன்று
அழுகிப் போன நினைவுகள் மட்டும்
முடிவில்லா துயரத்தின் தடம் பதித்த பாதைகளே
நினைவுகளாய்

ஒவ்வொரு நட்சத்திரமும்
அவளை நோக்கி கேலியாய்
சிரிப்பதாய்
உணர்கிறாள்

அவளை தொட்டு செல்லும்
ஒவ்வொரு காற்றும்
அவளின் வேதனையை
பகிர்ந்துகொள்ள எத்தனிக்கிறதோ ?

அவள் வெறும் பெண் குழந்தையில்லை
அவள் ஒரு கேள்வி
இந்த நாகரிகத்தின்
இதயத்தில் பாய்ந்த
கூர்மையான அம்பு

மரணம் கூட
அவளிடம் கருணை காட்டாமல்
கடந்து செல்கிறது

நீங்களும்
கடந்திருக்க கூடும் அவளை,
அவளின் குரல்
நீங்கள் கேட்டிருக்கீர்களா ?
மனிதம்  புதைக்கப்பட்டிருக்கும்
இந்த மௌனச் சுடுகாட்டில்.

நாகரீகம் வளர்ந்த இந்த
நகரம் என்னும் நரகத்தில்
அப் பெண்ணின் குரல்
கேட்டிருக்கீர்களா ?