Saturday, December 13, 2025

விமானம் !

 தூரத்திலிருந்து இது வரும்

சப்தம் நம்மை
மகிழ்ச்சியில் ஆழ்த்தும்

செய்துக்கொண்டிருக்கும்
வேலைகளை விட்டுவிட்டு
வீட்டிலிருந்து வெளியில் வந்து
கண்கள் விண்ணை பார்க்கும்

பெரிய விமானம்
நம்மை கடக்க
அதில் பயணிப்பவர்கள் நம்மை
காண்பார்கள் என்ற
நப்பாசையில் கைகள் அசைப்போம்

இன்றும்
பலமுறை பயணித்த பின்னும்
விமானத்தின் சப்தம் கேட்டால்
தன்னால் கண்கள் விண்ணை பார்க்கிறது
குழந்தையாய் மாற்றி விடுகிறது


ஒரு சிலருக்கோ
இச்சப்தம் சப்தநாடியையும்
ஒடுக்கி விடுகிறது

வீட்டில் இருந்து
பதுங்கு குழியை நோக்கி
ஓடுகிறார்கள்

அடுத்த நிமிடம்
உயிர் இருக்குமோ என்ற
ஐயத்தில்
படபடக்கும்
இதயம்

சிறாருக்கும் ,
பெரியவர்களுக்கும்
மரண பீதியை கடத்தி
கடந்து செல்கிறது

இருவருக்கும்
வாழ்வு உள்ளவரை
அழியா நினைவுகளை தருகிறது
அது
எப்படிபட்ட நினைவுகள்
என்பது காலத்தின் கையில்

No comments: