Tuesday, August 29, 2017

நட்பு

ஆயிரமாயிரம் கதைகள் பேசி
தினமும் கழித்தோம் நம் நாட்களை

உனக்கும் எனக்கும் இடையேயான
அன்பின் நெருக்கத்தை (காதலின்)விளிம்பில்
நின்று வேடிக்கை பார்க்கும் இவ்வுலகம்

ஆண் பெண் நட்பென்றால் இச்சமூகம்
மூன்றாம் கண் கொண்டே நோக்கும்

இட்டுக்கதை கட்டுக்கதையில் நம்மை  சேர்த்து
மாய வலை பின்னும் இவ்வுலகம்

பேசி பேசி களைத்தாயோ என்னவோ
இப்போதெல்லாம்  உன் பேச்சு குறைந்தது

மழை நின்ற போதிலும் தென்றல் தீண்டும்போது
தூரல் போடும்  சாலையோர மரங்களை போல

நாம் பேசுவது நின்ற போதிலும் தினமும்
நடக்கும் நிகழ்வுகளில் உன் தாக்கம்
வந்து வந்து போகிறது

Tuesday, August 22, 2017

பணம் !

பகல் இரவு நேரம் பாராமல்
பசி பட்டினி மறந்திருக்க
ஒவ்வொரு நாளும் உழைத்து
அந்த முப்பது நாளும் கடந்து
கையில் சம்பளம் கிடைக்கும் நாள்
விவரிக்க வார்த்தை இல்லை என்
ஆனந்தத்திற்கு ..

வீட்டில் காத்திருப்பாள் என் மனைவி
வீட்டுக்கு தேவையான பொருள்களின்
பட்டியிலிட்டு

பிள்ளை விரும்பி தினமும் நச்சரித்து கேட்டு
சம்பள நாள் வரை காத்திரு என்று சொன்ன
அவனுக்கு பிடித்த அந்த மிட்டாய் வாங்க வேண்டும்

அந்த இரவு சுகமான இரவு
சட்டைப்பையில் பணம்
கனவுகள் கூட வண்ணங்களில் வர கூடும்

பகல் விடிந்தது சேவல் கூவியது
உன் கனவு முடிந்தது என்று,
விழித்து எழுகையில் வாசலில்
ஓர் குரல் அது பால்காரனுடையது

அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம்
கொடுத்தாயிற்று , பின்னால் நின்றிந்தனர்
செய்தித்தாள் இடுபவன் , மளிகை கடைக்காரர் ,
அவசரத்துக்கு உதவிய பக்கத்துக்கு வீட்டு மாமி


மனைவி  சொன்னாள் மறந்துடாதீங்க பிள்ளையின்
இந்த மாத பள்ளி  தவணையை

சட்டைப்பையில் கை  நுழைத்து பார்க்கையில்
காற்று கூட அகப்படவில்லை

இன்னும் முப்பது நாள் கடத்த வேண்டும்
யாரிடமேனும் கடன் வாங்கி ....

யோசிக்கையில் விடியாமல் இருந்திருக்கலாம் நேற்றிரவு !!

Wednesday, August 16, 2017

காவியமா காதலா ?

ஒரு சில நொடி தோன்றிய
மின்னல் போல் தோன்றினாள்
அவள்

கதையில்லை , எழுத வரிகளும்
தோன்றவில்லை இருந்தும் ஓராயிரம்
காவியம் சொன்னது உன் புன்னகை

மென்மையான ஓவியம் நீ
மணலில் வரைந்த ஓவியம் அல்ல !
என் மனதில் பதிந்த இனிமையான காவியம் !

ரோமியோ ஜூலியட் , அம்பிகாபதி அமராவதி 
காவியமான காதல் எல்லாம் மரணத்தில் தான்
முடியுமென்றால் எனக்கு காவிய காதல் வேண்டாம்

உன்னோடு நான் வாழ வேண்டும் பல ஆண்டுகள்
சின்ன சின்ன செல்ல சண்டைகள் இட  வேண்டும்
கொஞ்சி பேசி வளர்த்திட ஓர் குழந்தை
கொலுசு அணிந்து ஓடி விளையாட ஒரு வீடு

அம்மா செல்லமா அப்பா செல்லமா என்று கேட்க
இருவரையும் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தை

நம் பிள்ளை படித்து வளர்ந்து அவனும் மணமுடித்து
பேர பிள்ளைகள் பெற்று அதனையும் கொஞ்சி

துன்பங்கள் வந்தாலும் தேற்றி தோள் கொடுத்து
வாழ்வின் இறுதியிலும் என் விரல் இடுக்கில்
உன் விரல் கோர்த்து அந்திமாலை பொழுதில்
வீதியில் நடக்க வேண்டும்

ஈரேழு ஜென்மம் வேண்டாம்
இனி ஒரு பிறவியும் வேண்டாம்
நிறைவாய் உன்னுடன் ஓர் வாழ்க்கை
காவியமாய் இல்லையெனினும்
காதலுடன் வாழ வேண்டும் ...

Saturday, August 5, 2017

அம்மாவின் பொய்

நிலாவை காட்டி
அது மலை மீது ஏறி மல்லிகை பூ கொண்டுவரும் என
சோறு ஊட்டியபோது சொன்னாள் பொய் ...

பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் என நான்
பொய் சொல்லாமல் இருக்க  சொன்னாள் பொய்...

எனக்கு பிடிக்கும் என்ற காரணத்தால் தனது பங்கையும்
சாப்பிடாமல் எனக்கு தருவாள் ..காரணம் கேட்டால்
பசிக்கவில்லை, பிடிக்கவில்லை என சொன்னாள் பொய் ...

ஏதாவது நினைத்து வருந்தி அழுவாள் கேட்டால்
கண்ணை துடைத்து சிரித்து ஒண்ணுமில்லை
என சொன்னாள் பொய் ...

கவிதையின் உவமையில் பொய் அழகு என்றால்
நிஜமான அன்பில் என் தாய் சொன்ன பொய்யும்
அழகு தான் ..

Tuesday, August 1, 2017

காத்திருக்கிறேன் !

என் மன எண்ணங்களை
பகிர்ந்துகொள்ள ஓர் உறவு

என் சந்தோஷ தருணங்களை
என்னுடன் கொண்டாட ஓர் உறவு

துக்கமான சமயங்களில் என் கண்ணீர்
எட்டி பார்க்கும் சமயத்தில் என்னை ஆறுதல்
படுத்த ஓர் தோள்

வாழ்வில் விழும் நேரத்தில் விழாமல்
காப்பாற்ற ஓர் கை ..

ரகசியங்களை பகிர்ந்து கொள்ள ஒரு உறவு
நம்மிடையே மனம் கசந்த சமயத்திலும்
ரகசியம் கசியாமல் காப்பாற்றும் அந்த உறவு

வார்த்தைகள் கொண்டு பேசாவிடினும்
என் மௌனத்தின் மொழி அறிந்த ஓர் உறவு

அது காதலியாக வேண்டாம்
ஒரு நல்ல தோழனோ தோழியாகவோ
கிடைக்க
காத்திருக்கிறேன்


FTC

முதல் நாள்
தயக்கத்துடன் தான் எட்டி பார்த்தேன் எனினும்
ஈர்த்து விட்டது என்னை தன் வளையத்தினுள்

பொழுது போகாமல் தான் உள்  நுழைந்தேன்
அன்று
பொழுது விடிந்தால் வர தோன்றுகிறது இங்கு
இன்று

புதியவன் என்ற எண்ணம் யார் மனதிலும்
இருப்பதாய் நான் அறியவில்லை
நட்பாய் இருக்க பல காலம் பழகிய அனுபவம்
தேவையுமில்லை

ஆறு வருடம் ஆணிவேராய் கால் பதித்த
நாட்கள் எத்தனை நட்புக்கள் , காதல்கள்
மோதல்கள் , துக்கங்கள், சங்கடங்கள்
சந்தோஷங்கள் கடந்திருக்கும்

ஒவ்வொரு விழாவிற்கும் விழா எடுத்து
கொண்டாடிய தருணங்கள்

பிறந்த நாளில் பிறந்தவரை பற்றிய
நட்புக்களின் குரல்களில் அவர்களின்
எண்ணங்கள்

பட்டிமன்றம் , விவாதங்கள் போட்டிகள்
எத்தனை எத்தனை நிகழிச்சிகள்

விளம்பரம் இல்லாமல் விரும்பியவர்கள்
பங்குபெற நடக்கிறது ....

ஆறுவருடம் ஆகாயம் எட்டும் பண்பலை
 ஆனந்தமே
எல்லைகள் இல்லா இணையம்
இணைந்திருப்போம் அறுநூறு ஆண்டுகள்
ஆனாலும்

வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துவோமே !!!