எல்லா பெண்ணையும் போல் தான்
என்கனவும் சிறகடித்து பறந்தது
கன்னி பெண் வயதில்
மன்னனின் மகளும் அல்ல
அரண்மனை இளவரசியும் அல்ல
அது என் தவறும் அல்ல
தினம் உழைத்து தின கூலி வாங்கி
தினம் தினம் செத்து பிழைக்கும்
நாடோடியாய் வாழ்வது தான்
நான் வாங்கி வந்த வரமா ?
எந்த கவலையும் இல்லை
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
இந்த சூரியன் மட்டும் தினம்
உதிக்க வேண்டும் என்பதை தவிர
வெள்ளரி பிஞ்சுகளை கூடையில் விற்று
கிடைத்த காசு என் மடியில் உண்டு
என் கை பிடித்து நடக்கும் என் குட்டி
மகள் உடன் உண்டு
ஒரு வாரமாய் பெய்த மழையில்
பசி மறந்து தண்ணீரே மருந்தென்று
இருந்தோம்
மழையில் காணாமல் போன சூரியனும்
இதோ இன்று தான் உதித்திருந்தான்
இன்று என் மகளுக்கும், கணவனுக்கும்
பிடித்த உணவு சமைத்து
இரவு வரும் நிலவின் ஒளியில் அமர்ந்து
சாப்பிட வேண்டும்
கட்டாந்தரையில் பாய் விரித்து
மகளுக்கு நிலவை காட்டி
தாலாட்டு பாடிட
மகளும்,, என் கணவனும்
என் மடியில் தூங்கிட வேண்டும்
இன்பம் என்றும் இது போதும்
இரவு இது நீண்டிட வேண்டும் என்று தான்
இதோ
இந்த சூரியனை கூடைக்குள் இட்டு
ஒளித்து வைக்க இடம் தேடி ஓடுகிறேன்
நீங்களும் சொல்லிடாதீங்க
சூரியனை காணாளனு பிராது
ஏதும் குடுத்திடாதீங்க
No comments:
Post a Comment