Thursday, February 28, 2019

நட்பாய் நீ !


சின்ன சின்ன சண்டையில்
சிறுக சிறுக சேமித்தோம்
நமக்கான உறவை

என் தாய் தான்
உலகமென்று
நினைத்திருந்த வேளையில்
எனக்கொரு இன்னொருமொரு
தாயானாய்
நீ

பரஸ்பரம் பகிர்ந்துகொண்டது
எதுவும் நினைவில்லை
என் நினைவே நீயாகி போனதால்

எனக்கு காய்ச்சல் வந்த
வேளையில் உனக்கு
உடல் சுட்டிருக்குமோ
மருந்தோடு  என் வாசலில்
நீ

சாலையில்
அழகிய  பெண்ணை
கண்டால் என் கண்
போகும் பார்வையின்
பின்னால் உன் பார்வை
சிரித்துக்கொண்டே
டேய் ...ம்.. ம்.. என்பாய்
நீ

நம் மனம் மட்டும் அல்ல
நம் வீட்டு வறுமையும்
நம்மை போல
பிரியாமல் சேர்ந்தே
இருக்கிறது

இரவானலும்
என்னுடன் பயணிப்பதையே
விரும்பியது உன் மனம்

ஆண், பெண்
என்பதை தவிர
நமக்குள் வேற்றுமை
நான் கண்டிலேன்

கோயிலானாலும்
தேவாலயமானாலும்
சேர்ந்தே சென்று
பிரார்த்திப்போம்
மற்றவர் நலம் காண

ஒன்றாய் அமர்ந்து
வேடிக்கையாய் பேசி
சிரிக்கையிலும்
ஒன்றாய்  அமர்ந்து
உண்ணும்போதும்
ஒன்றாய் பயணிக்கையிலும்
ஊர் சொன்னது
காதலர் என்று

எப்படி சொல்வேன்
அவர்களுக்கு
காதல் ஓர் உணர்வு தான்
ஆனால்
எங்களுடையது
உயர்வான உறவான
நட்பென்று

விதி செய்த சதி
கண் காணா தூரத்தில்
நீ
உன் நினைவுகள் மட்டும்
என்றும் என்னருகில்

தேவதை நீ
நிஜம் என்று
நிழலை பறித்து
செல்கிறாய்

உன் நினைவுகளுடன்
காகிதத்தில் நிரப்பப்படாத
வலிகளுடன்
உன்னுடன்  நட்பாய்
கைகோர்க்க
காத்திருக்கிறேன்

Thursday, February 21, 2019

எனக்கொரு கனவு !

சிறுவயதில் தாயை காக்க
வீட்டை காக்க என  படித்து
வளர்ந்து  வந்தேன்
எல்லாரையும்போல்,

காலசுழற்சியில்
தாய்நாடு மீது பாசம் வந்தது

உடல்வருத்தி பயிற்சிகொண்டு
இராணுவத்தில் இணைந்தேன்

தாய், தந்தை, சகோதரன் ,
உறவுகள் எல்லாம் விட்டு
புது உறவு கொண்டு
எல்லை காக்க
கடமைப்பட்டேன்

வருடமொருமுறை
சொந்தம் காண
உறவுகள் சூழ
சில நாட்கள்

வாலிப வயது எட்டியதால்
பெண் பார்க்கும் படலம்

கண் காணா எல்லையில்
இருக்கும் எனக்கு
பெண் கிடைக்க
என் தாயோ
வேண்டாத சாமியில்லை

தேடி தேடி
கண்டுபிடித்தாள்
தேவதை என ஒருத்தியை

என் மனம் அவளை
மணம் முடிக்க
தயங்கியது

காவலுக்கு
செல்லும் எனக்கு
ஒவ்வொரு விடியலும்
ஒரு புது பிறப்பு தான்

தினமும்
நான் செல்லும் பாதை யாவும்
என்றோ ஒருநாள்
மயானத்துக்கு செல்லும்
பாதையாகலாம்

தனித்திருத்தலின்
சுகம் பழகிய எனக்கு
தற்காலிக அன்பின்
மேல் மோகம் அற்று கிடந்தேன்

அவளுக்கோ நாட்டுக்கு
சேவை  செய்யும் என்மீது
அன்பு பிறந்தது
மணம் முடித்தேன்
அன்புமகன் பிறந்தான்

பிறந்து ஒரு வருடம் ஆனா பின்
குழந்தை காண விடுப்பு கிடைத்து
ஊர் வந்து அவனை கையில் ஏந்த
என் கண்ணில் கண்ணீர் அவன் கன்னம்
நனைத்தது

சின்னஞ்சிறு கொஞ்சலும்
என் மார்பில் எட்டி உதைக்கும்
அவன்
சின்னஞ்சிறு பாதங்களும்
பல பல ஆண்டுகள்
வாழ ஆசை கொண்டேன்
அந்நிமிடம் அவனுடன்

விடுப்பு முடிந்த நிமிடம்
மனம் மரத்து போனது
அவனை பிரிவது குழைந்தைமேல்
காட்டும் எனது குரூரம் என
உணர்ந்தேன்

பற்றியெரியும் ஒரு
பெருந்தனலின் பாதையில்
மற்றுமொரு இரவு பயணம்
தொடங்கியது

இந்நாள் விடியாமல் இருந்திருக்கலாம்
என நினைக்கையில்
திடீரென
உடன் பயணித்தவரின்
வெடித்து தெறித்த
சதைகளின் பிசுபிசுப்பு
என் உடலெங்கும்
ஆக்கிரமிக்க

கன நொடியில்
என் சுயம் மறந்தேன்
முடிவென்பது
என் மனம் நினைத்ததல்ல
மணம் முடித்தபின் நினைத்ததுமல்ல

சாத்தானின் அகோர பசியில்
இரையாகி போனோம்
கேட்டிருந்தால் நிமிர்ந்து நின்று
மார்பு பிளந்து உண் என்றிருப்பேன்
என் தாய்நாடு காக்க

அன்பின் நினைவுகளில்
சிக்குண்டு கிடந்த வேளையில்
இருளில் கோழை என
என் கனவு தகர்த்த உன்னை
என்ன பெயரிட்டு அழைக்க

மீண்டும் பிறக்க
ஆசை
என் கனவு மெய்ப்பட 

Wednesday, February 6, 2019

வா என் தேவதையே !

நிலத்தை  போர்த்தி அழகாக்கும்
பச்சைபசேல் வயல்வெளி போல்
அவள் மேனியை மேலும் அழகாக்கி
பச்சை தாவணி போர்த்தி
நடந்து வந்தாள்
தேவதை என

அவளை தீண்டிய தென்றல் காற்று
என்னையும்  தீண்டி இன்பம்
பகிர்ந்துகொண்டது

பௌர்ணமி முழு நிலவு போல்
அவள் முகம் அதில்
ஜொலிக்கும் நட்சத்திரம் போல்
அவள்  மூக்குத்தி

தமிழை உச்சரிக்கும் அவள் இதழில்
தும்பை பூவின் இனிப்பு

அருகில் வந்து
அவள் கேட்டது எதுவும்
நினைவில்லை
சிரித்தோம் ஏனோ
அறியவில்லை

நீ கடந்து வந்த பாதையெங்கும்
உன் கூந்தல் உதிர்த்த
பூக்களெல்லாம்
வாடி மடிந்தன
உனை  பிரிந்த
ஏக்கத்தில்

உன் கால் கொலுசின்
ஒலிகள் உணர்த்தியது
என் மனதில்,
காதல் வருகையின்
சமிக்ஞ்சைகள்

தனிமை இனிமை
என இருந்தேன்
அவள் ஒரு நொடி
பிரிவையும்
சகித்துக்கொள்ள
முடியாமல்
திணறும்
இக்கணம் வரை

உன்னை எண்ணி
வண்ண வண்ண
கனவுகளில்
சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது
என் மனம்

தாயின் கருவறைக்குள்
சுகமாய் இருளில்
இருக்கும் குழந்தை போல்

உன் நினைவுகளில்
நான் தினம் தினம் வாழ்கிறேன்

இதோ
இன்று
ஒற்றை ரோஜாவை
கையில் வைத்து
காதல் சொல்ல-
அதை நீ ஏற்பாயோ
என அறிய

வழிமீது விழி வைத்து
உன் வருகைக்காக 
காத்திருக்கிறேன் 

வா என் தேவதையே !