Thursday, February 21, 2019

எனக்கொரு கனவு !

சிறுவயதில் தாயை காக்க
வீட்டை காக்க என  படித்து
வளர்ந்து  வந்தேன்
எல்லாரையும்போல்,

காலசுழற்சியில்
தாய்நாடு மீது பாசம் வந்தது

உடல்வருத்தி பயிற்சிகொண்டு
இராணுவத்தில் இணைந்தேன்

தாய், தந்தை, சகோதரன் ,
உறவுகள் எல்லாம் விட்டு
புது உறவு கொண்டு
எல்லை காக்க
கடமைப்பட்டேன்

வருடமொருமுறை
சொந்தம் காண
உறவுகள் சூழ
சில நாட்கள்

வாலிப வயது எட்டியதால்
பெண் பார்க்கும் படலம்

கண் காணா எல்லையில்
இருக்கும் எனக்கு
பெண் கிடைக்க
என் தாயோ
வேண்டாத சாமியில்லை

தேடி தேடி
கண்டுபிடித்தாள்
தேவதை என ஒருத்தியை

என் மனம் அவளை
மணம் முடிக்க
தயங்கியது

காவலுக்கு
செல்லும் எனக்கு
ஒவ்வொரு விடியலும்
ஒரு புது பிறப்பு தான்

தினமும்
நான் செல்லும் பாதை யாவும்
என்றோ ஒருநாள்
மயானத்துக்கு செல்லும்
பாதையாகலாம்

தனித்திருத்தலின்
சுகம் பழகிய எனக்கு
தற்காலிக அன்பின்
மேல் மோகம் அற்று கிடந்தேன்

அவளுக்கோ நாட்டுக்கு
சேவை  செய்யும் என்மீது
அன்பு பிறந்தது
மணம் முடித்தேன்
அன்புமகன் பிறந்தான்

பிறந்து ஒரு வருடம் ஆனா பின்
குழந்தை காண விடுப்பு கிடைத்து
ஊர் வந்து அவனை கையில் ஏந்த
என் கண்ணில் கண்ணீர் அவன் கன்னம்
நனைத்தது

சின்னஞ்சிறு கொஞ்சலும்
என் மார்பில் எட்டி உதைக்கும்
அவன்
சின்னஞ்சிறு பாதங்களும்
பல பல ஆண்டுகள்
வாழ ஆசை கொண்டேன்
அந்நிமிடம் அவனுடன்

விடுப்பு முடிந்த நிமிடம்
மனம் மரத்து போனது
அவனை பிரிவது குழைந்தைமேல்
காட்டும் எனது குரூரம் என
உணர்ந்தேன்

பற்றியெரியும் ஒரு
பெருந்தனலின் பாதையில்
மற்றுமொரு இரவு பயணம்
தொடங்கியது

இந்நாள் விடியாமல் இருந்திருக்கலாம்
என நினைக்கையில்
திடீரென
உடன் பயணித்தவரின்
வெடித்து தெறித்த
சதைகளின் பிசுபிசுப்பு
என் உடலெங்கும்
ஆக்கிரமிக்க

கன நொடியில்
என் சுயம் மறந்தேன்
முடிவென்பது
என் மனம் நினைத்ததல்ல
மணம் முடித்தபின் நினைத்ததுமல்ல

சாத்தானின் அகோர பசியில்
இரையாகி போனோம்
கேட்டிருந்தால் நிமிர்ந்து நின்று
மார்பு பிளந்து உண் என்றிருப்பேன்
என் தாய்நாடு காக்க

அன்பின் நினைவுகளில்
சிக்குண்டு கிடந்த வேளையில்
இருளில் கோழை என
என் கனவு தகர்த்த உன்னை
என்ன பெயரிட்டு அழைக்க

மீண்டும் பிறக்க
ஆசை
என் கனவு மெய்ப்பட 

No comments: