Friday, June 28, 2019

மனிதனின் நிறம்


மனிதனின் நிறம்
என்றும் தண்ணீரை போல

இருக்கும் இடத்திரிக்கேற்ப
தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி
போல

சூழ்நிலைக்கேற்ப
தன் குணத்தை
மாற்றிக்கொள்வான்

தோலின் நிறம்
அவன் சுபாவத்தை
பிரதிபலிப்பதில்லை
இருந்தும்

வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்லமாட்டான்
என காலம் காலமாய்
நம்பி
பொய் பரப்பி வருகின்றனர்

கண் உள்வாங்கும்
ஒளியினூடே கடத்த படும்
நிறம்
சில நேரம் காட்சிப்பிழை
ஆகலாம்

மரபியல் சுழற்சியில்
பாரம்பரிய மாற்றத்தில்
உண்டாகும் நிறம்கொண்டு
எடைபோடாதே

பழக
தொடங்குகையில்
தோன்றும் நிறம்
பழகிய பின்
நிறமறியதாய் தோன்றலாம்

மனித
மனங்களுக்குள்
இருக்கும்
மிருகமும், மனிதமும்
அவனை
வெளிப்படுத்தும்
அகோரமாகவும்
அழகாகவும்

நிர்வாணமான
குழந்தையை
காணும் கண் கொண்டு
பார்க்க பழகி கொள்
அது உன்னில் கடத்துவது
சஞ்சலமற்ற
புன்னகை மட்டுமே

வெளி நிறம்
ஒரு மாயை
உள் நிறம் காண்
மகிழ்வாய்
வாழ்வாய்



மனதின் தவிப்பு



கண்ணும்  கண்ணும் கண்டதும்
காதல் மொழி கற்று கொள்ள
தொடங்கினேன்

கைகளில் கைகள் கோர்த்த
சமயம் காதல் புரிய
தொடங்கினேன்

பரஸ்பரம்
நிறமோ
மதமோ
வித்தியாசப்படுத்தி பார்க்கும்
திராணியின்றி
காதல் வளர்க்க
தொடங்கினேன்

உன்னை காணா
ஒவ்வொரு நொடியும்
நீ அழைப்பதாய்
தலைக்குள்
ஒரு குரல்

மனதின்
தவிப்பு
யாரிடம் சொல்ல

கண்ணுக்குள்
எப்போதும்
உன் உருவம்
புன்னகை
பூத்திடும்

பிரியாத
உன்னுடன்
பிரியத்துடன்
இவ்வுலகை
சுற்றி
ரசித்திட வேண்டும்

இருள் மெல்ல மெல்ல கண்ணுக்கு
பழகி காட்சி விரிவது போல
ஏதோ ஒரு இசை மெல்ல மெல்ல
தொடங்கி அருகில் சத்தமாய்
கேட்க தொடங்கும் நேரம்

உன் கண்களில்

தெரிந்த மிரட்சியில்
பதற்றமடைந்து
கண் விழித்து
பார்க்கிறேன்

தொலைபேசி

அழைப்பு
தொடுதிரையில்
சிரித்தபடி
உன்
புகைப்படம்

சுரீரென
உரைத்தது
உன் பிரிவு
வலி தாங்க
பழகுவதே
வாழ்க்கையின்
மிகசிறந்த
பாடம்




                                               ஒற்றை ஆலமரம்

யார் விதைத்த விதையில்
உதித்ததோ நானறியேன்
ஆனால்
சுட்டெரிக்கும் சூரியனின்
வெயிலில் இருந்து
தினம் எங்களை
காப்பாற்றும்

குடும்ப அட்டையில்
சேர்க்காத
குடும்பத்து உறுப்பினர் போல
வாழ்வியலில்
விசாலமாய்
கலந்திருக்கும்

விழுதுகள் பரப்பி
வேறூன்றி
படர்ந்திருக்கும்
அரும்மருந்தாய்
தன்னையே அர்பணித்திருக்கும்

பஞ்சாயத்து பல
கண்டிருக்கும்
சந்தைகள் பல
கூடியிருக்கும்
வாலிப வயதினரின்
ரகசியம் பல
தன்னுள்  கொண்டிருக்கும்

தலைமுறை
பல கண்டிருக்கும்
தன்னுள் பல
பேர் அறியா
ஜீவராசிக்களுக்கும்
அடைக்கலம்
கொடுத்திருக்கும்

ஊஞ்சலாட
விழுதுகள்
கொடுத்த மரம்
மரங்கொத்தி
கொத்துகையில்
வலிக்கவில்லை

மனிதா,

வெட்ட
நீ
கோடாளி கொண்டு
வருகையில்
ஏனோ
விழுதுகள்
மரத்தின்
கண்ணீர்  துளிகள்
போல தெரிகிறது

வெயிலில் நின்று
வெட்டுகையில்
இளைப்பாற
எங்கு செல்வாய் நீ
யோசித்ததுண்டா  ?

வரும்
சந்ததிக்கு
என்ன சொல்வேன்

பலன் பல தந்த
மரத்தை அழித்தோம்
சாலை எனும் ஒரு
பலன் பெற
என்றா ?!

மரத்தின்
அருமை தெரியாமல்
சாலையின் பெருமை
சொல்லும்
மூடனிடம்
என்ன சொல்ல

மழை நீர்
வேண்டினும்
வெட்டாமலிரு

நீங்காத
நினைவுகள்
தந்து
எங்கள் ஊருக்கு
என்றும்
முகவரியாய்
இருக்கும்

ஒற்றை ஆலமரம் ..

வாழ்க்கை


வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது

நம்முள்
ஒட்டிக்கொள்ளும்
உறவாய் உயிராய்
சில மனிதர்கள்

சிலரோ
நம்முள் ஒட்டிக்கொண்டிருக்கும்
உயிரை ,
கரும்பு சாறு
பிழியும் இயந்திரத்தில்
சிக்குண்டு வெளியே வரும்
சக்கை போல்  பிழிந்து எடுக்கவே
உடன் இருப்பார்
அவருக்கொரு
பெயருண்டு
முதலாளி

ஒரு சான் வாயிருக்காகவும்
சுயம் காப்பாற்றிக்கொள்ளவும்
வளைந்து  வளைந்து
கொடுத்து
முதுகெலும்பும்
வளைந்தே போயிற்று
நிமிர்ந்து நிற்க திராணியின்றி

சில நேரம் தோன்றும்
கோபமும் எரிச்சலும்,
பற்றி எரியும்
உணர்வின் கொந்தளிப்புகளும்
என்னை நம்பி வீட்டிலுருக்கும்
உறவுகளின் பசியின் கொடுமையை
எண்ணிப்பார்க்கையில்
அணைந்துவிடுகிறது
நீரூற்றாமல்

நிமிடத்தில்
வீழ்ந்து
துகள் துகளாய்
உடைந்து போய்விடும்
வாழ்விது என தெரிந்தும்

அடக்குமுறையின்
அடையாளங்கள்
அழிந்து போகும்வரை

வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது