Saturday, October 21, 2017

பித்து !

பிடித்ததை எழுத யாரும் வேண்டாம்
பிடித்ததை பிடித்தது என்று சொல்ல
பிடித்தவர்கள் வேண்டும் போலும் !

படித்தவர்கள் படிக்காமல்
பிடித்தவருக்காக பதிகத்தை பிடித்தது எனும்போது
பித்துபிடித்தது போல் ஆகுவது என் மனம்

பின் பக்கமாய் ஏறி  யாரும் கோயிலில்
பிரார்த்தனை செய்வதுண்டோ நான் அறியேன்
பின்புத்தி கொண்டு யோசித்தேனானும்
பிறசொல் கேளாதவனானேன்

பிதற்றி கொண்டு எழுதினேனாயினும்
பித்து பிடிக்காமல் படித்தவர்க்கும்
படிக்காமல் பிடித்தது எண்ணுவோர்க்கும்

பித்து பிடித்தது என ஊர் சொன்னால்
பிரம்பெடுத்து என்னை அடிக்க வந்தால்
பிரடி தெறிக்க ஓட ஆயத்தமாவேன் !

தாத்தா !

தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள
பந்தம் என்றும் தெவிட்டாத இன்பம்

பிறந்து வளர்ந்து படித்து மணமுடித்து
தந்தையாகி, வளர்த்து மணமுடித்து கொடுத்து
பேரனோ பேத்தியோ பிறக்கும் வேளையில்
மீண்டும் பிறக்கிறேன் குழந்தையாய்

பிறந்த குழந்தையை வளர்த்திடும் பொறுப்பு
என்றும்  பாட்டிக்கும், தாத்தாவுக்குமானது

கொஞ்சி மழலை மொழி பேசி விளையாடி
கால்ஊன்றி யானையாகி சுமந்து  நடந்து
வளர்த்தோம்

பள்ளி செல்லும் வேளை , காலை விட்டு வருவதும்
மாலை அழைத்து வருவதும் தாத்தாவிற்கான எழுதாத வேலை

அழைத்து வருகையில் பேரனுடன் கதை பேசி
நடந்து வருவது வார்த்தையில் விவரிக்க முடியா ஆனந்தம்

வளர்ந்து விட்டான் அவன் ,  கீச்சுகளையும் , முகபுத்தகத்தையும்
பார்த்து பார்த்து இன்று தாத்தாவின் முகம் மறந்திட்டான் போலும்

இதுதான் தலைமுறையின் இடைவெளியோ
இல்லை வயதானவர்களின் தலைவிதியோ
காலமோ காளனோ  பதில் சொல்ல காத்திருக்கிறேன்!!

Sunday, October 8, 2017

தீபாவளி

தீபஒளித்திருநாள்  வருகிறது 

பிள்ளையின் கட்டளை வந்தாயிற்று 
வேலைக்கு சென்று மாலை  வீடு திரும்பும் போது 
வாங்கிவரவேண்டும் உடன் பட்டாசு 

என் பல நாள் உழைப்பு சில வினாடிகளில் 
கரியாகும் என தெரிந்தும் வாங்க வேண்டும் 
பட்டாசு ..

தன் உடல் முழுவதும் மருந்து கலந்தாலும் 
தோல் நிறம் மாறினாலும் , தன் சந்ததி உரு குலைந்தாலும் 
தனக்கு தெரிந்த தொழில் என செய்யும் அவனக்காகவேனும் 
வாங்க வேண்டும் பட்டாசு ...

மனைவியின் புத்தாடை கனவுகள் 
வேண்டுகோளும் வந்தாயிற்று 
விடுமுறை நாளில் கடைகளில் ஏறி 
இறங்க வேண்டும் அவளுடன் 
மனைவிக்காகவேனும் வாங்க வேண்டும் புத்தாடை 

வீட்டில் சர்க்கரை நோயுடன் பெற்றோர் 
இருந்தாலும் , நமக்கு இனிப்பு பிடிக்கவில்லையென்றாலும் 
பக்கத்துக்கு வீட்டுக்கு கொடுக்கவேணும் செய்யவேண்டும் 
இனிப்பு பலகாரம் 

அசுரனை அழித்து மக்களின் வாழ்க்கையில் 
ஓளியேற்றிய என் கடவுள்-  இருளில் இருக்கும் 
என் வாழ்க்கையிலும் ஒளியேற்றுவார்  என்ற 
நம்பிக்கையில் ஏற்றவேண்டும் வீட்டில் 
"தீபஒளி"


"இருளை நீங்கி எல்லார் வாழ்க்கையிலும் 
ஒளி பிறக்க கொண்டாடுவோம் தீபாவளி "

Wednesday, October 4, 2017

பட்டம் !

சின்னஞ்சிறு வயதில்
துள்ளி திரிந்த பருவத்தில்
பறவை போல் வானில்
சிறகடித்து பறக்க ஆசை கொண்டேன்

ஒரு நாள் வானில் வண்ண வண்ண நிறங்களில்
புது புது வடிவங்களில் பறவைகள் போல்
பறக்கும் பட்டம் கண்டேன்

நூல் கொண்டு காற்றில் பறக்கும் பட்டத்தை
கட்டுபடுத்தும் அழகு கண்டேன்

அதை பிடிக்க ஆசை கொண்டு சிறிது நேரம் பிடிக்க
கேட்டேன் ஒரு அண்ணனிடம் தர மறுத்தார்
சிறுவன் நீ விட்டு விடுவாய் என

அப்பாவிடம் புது பட்டம் வாங்கி தர கேட்டேன்
திட்டு தான் வீழ்ந்தது ,

அம்மா கடைக்கு அனுப்ப
மிஞ்சும் சில்லறைதனை யானை உருவ
உண்டியலில் சேமித்து வைத்தேன்

உறங்காமல் அது நிரம்பும் வரை சில நாள் உறக்கமும்
தொலைத்தேன்

ஒருவழியாய் நிரம்பிய உண்டியலை உடைத்து
சில்லறைகளை எண்ணி பார்த்தால் சிறிது பணம் குறைந்தது,
தயங்கி தயங்கி அம்மாவிடம் கெஞ்சி மீதியை
வாங்கி ஓட்டம் எடுத்தோம் பட்டம் வாங்க

என்ன வண்ண பட்டம் வேணும் கடைகாரன் கேட்க
சிகப்பு வண்ணம் கேட்டு வாங்கி நூலும் வாங்கி
பட்டதில் என் பெயரும் எழுதி , நூல் கோர்த்து
பறக்க விட்டேன் வானுயர

என் ஆசைகள் தாங்கி பறந்தது வானில் என் பட்டம்
விளையாட்டிலும் உண்டல்லோ வஞ்சம்

வஞ்சம்தனை  மனதில் வைத்து நஞ்சுதனை  நூலில் தடவி
பட்டம் விட்டான் ஒருவன்

வானுயர்ந்த  என் பட்டம் அருகில் வந்தது அவன் பட்டம்
என் நூலை உரச என் நெஞ்சம் அறுந்தது, என் நூலை போல்,
என் பட்டம் திசை மாறி பறந்தது எங்கோ விழுந்தது

அறுந்து விழுந்த பட்டம்தனை பிடிக்க ஓடியது ஒரு
வாண்டுகள் கூட்டம்

பலநாள் ஆசை தேக்கி வைத்து வாங்கிய பட்டம்
ஒரே நாளில் வானில் பறந்து விழுந்தாலும்,
கல்லூரி பட்டம் வாங்கிய பிறகும் மனதில்
என்றும் பசுமையாய் பறந்து கொண்டுதானிருக்கிறது