Wednesday, October 4, 2017

பட்டம் !

சின்னஞ்சிறு வயதில்
துள்ளி திரிந்த பருவத்தில்
பறவை போல் வானில்
சிறகடித்து பறக்க ஆசை கொண்டேன்

ஒரு நாள் வானில் வண்ண வண்ண நிறங்களில்
புது புது வடிவங்களில் பறவைகள் போல்
பறக்கும் பட்டம் கண்டேன்

நூல் கொண்டு காற்றில் பறக்கும் பட்டத்தை
கட்டுபடுத்தும் அழகு கண்டேன்

அதை பிடிக்க ஆசை கொண்டு சிறிது நேரம் பிடிக்க
கேட்டேன் ஒரு அண்ணனிடம் தர மறுத்தார்
சிறுவன் நீ விட்டு விடுவாய் என

அப்பாவிடம் புது பட்டம் வாங்கி தர கேட்டேன்
திட்டு தான் வீழ்ந்தது ,

அம்மா கடைக்கு அனுப்ப
மிஞ்சும் சில்லறைதனை யானை உருவ
உண்டியலில் சேமித்து வைத்தேன்

உறங்காமல் அது நிரம்பும் வரை சில நாள் உறக்கமும்
தொலைத்தேன்

ஒருவழியாய் நிரம்பிய உண்டியலை உடைத்து
சில்லறைகளை எண்ணி பார்த்தால் சிறிது பணம் குறைந்தது,
தயங்கி தயங்கி அம்மாவிடம் கெஞ்சி மீதியை
வாங்கி ஓட்டம் எடுத்தோம் பட்டம் வாங்க

என்ன வண்ண பட்டம் வேணும் கடைகாரன் கேட்க
சிகப்பு வண்ணம் கேட்டு வாங்கி நூலும் வாங்கி
பட்டதில் என் பெயரும் எழுதி , நூல் கோர்த்து
பறக்க விட்டேன் வானுயர

என் ஆசைகள் தாங்கி பறந்தது வானில் என் பட்டம்
விளையாட்டிலும் உண்டல்லோ வஞ்சம்

வஞ்சம்தனை  மனதில் வைத்து நஞ்சுதனை  நூலில் தடவி
பட்டம் விட்டான் ஒருவன்

வானுயர்ந்த  என் பட்டம் அருகில் வந்தது அவன் பட்டம்
என் நூலை உரச என் நெஞ்சம் அறுந்தது, என் நூலை போல்,
என் பட்டம் திசை மாறி பறந்தது எங்கோ விழுந்தது

அறுந்து விழுந்த பட்டம்தனை பிடிக்க ஓடியது ஒரு
வாண்டுகள் கூட்டம்

பலநாள் ஆசை தேக்கி வைத்து வாங்கிய பட்டம்
ஒரே நாளில் வானில் பறந்து விழுந்தாலும்,
கல்லூரி பட்டம் வாங்கிய பிறகும் மனதில்
என்றும் பசுமையாய் பறந்து கொண்டுதானிருக்கிறது


No comments: