Monday, May 21, 2018

இது தான் காதல் என !


இதோ மருத்துவமனை முன்
சீனி தேடி அலையும் நேரத்தில்
வழிமறந்து திரியும் எறும்பை போல
தவித்து கொண்டிருக்கிறேன்

சிலவருடம் முன்
தூரத்து உறவு சொல்லி
உறவாக்கி  கொள்ள
அவளை பார்க்க செல்கையில்
கதவின் இடுக்கில் இருந்து இருவிழியால்
என் இதயத்தில் அம்பெய்துகொண்டிருந்தாள்

அவள் கால்கள் ஏனோ கோலம் இட்டுக்கொண்டிருக்க
என் மனதோ அலைக்கழிந்து கொண்டிருந்தது
அவள் பின்னால் ...

இதுதானோ காதல் என உணருமுன்
முகுர்த்தநாள் குறித்து  நல்ல நேரம் பார்த்து
கழுத்தில் மூணுமுடிச்சு  ஏன் என தெரியாமல் இட்டு
எனக்கு சொந்தமாக்கினேன்

எங்கள் வாழ்க்கையில்
மாதங்கள், வருடங்களாய் உருண்டோட
விசாரிப்புகள் மெல்ல எட்டி பார்த்தன

அன்பு பகிர ஓர் உறவு வேண்டுமென
அக்கரையில் சிலர் , ஆர்வத்தில் சிலர்
அனாவசியமாய்  சிலர்  கேட்க

பரிச்சியமில்லா தெய்வங்களும் கண்டு
பரிகாரமாய் சொன்னதையும் செய்து
காத்திருக்கும் வேளையில் விஞ்ஞானத்தின்
துணையும்  கொண்டு

என்னவள் அவள் வயிற்றில் கருவாய்
எங்கள் உயிர்
இதோ
கேட்கிறது எங்கள் குழந்தையின்
அழுகுரல் ஓடோடி செல்கிறேன்
அவள் இருந்த அறைக்குள்

அங்கு
குழந்தையின் கை பிடித்து
என்னவள் இருக்க
இருவர் கையும் சேர்த்து என் கை பிடிக்க
எங்கள் கண்களின் ஓரத்தில் பிறந்த
கண்ணீர் சொல்லியது
இது தான் காதல் என !!!


Tuesday, May 8, 2018

ஊடகம்


காணாத உலகை
கண்முன்னே
கொண்டுவருவான்

இவன் சொல்லி தந்து
நான் கற்றதோ ஏராளம்
ஆனால்
இன்று
தன்னையே மறந்து
நம்மையும்
திக்குத்தெரியாத
காட்டில் விட்டு
வேடிக்கை பார்க்கிறான்

இவன் வழி நடந்து
அரியாசனம் ஏறியவரும்
உண்டு
இவன்தனை நம்பி
வாழ்க்கையில்
கெட்டவருமுண்டு

உலகில் விதைத்த
விளைவுகள் யாவும்
இவன் கைவசம்.

இன்று இவனோ
எடுப்பார் கைப்பிள்ளை
போல் எடுப்பார் வசம்

இவன்
உண்மையை உரக்க சொன்ன
காலம் உண்டு
இன்று
இவன் சொல்லும் செய்திகளை
உண்மையா என்று விவாதிக்க
இவன் நண்பர்கள்
பலருண்டு

இவன் செய்த சாதனைகள் சொல்ல
ஒரு நாள் போதாது
சுதந்திரமாய் இவன் பணி செய்தால்
சுதந்திரத்தையும் நமக்கு
பரிசளிப்பான்

இவன்
பரிணாம வளர்ச்சி கண்டு
விஞ்ஞான துணை கொண்டு
உருவம் மாறி பயணித்து
கொண்டிருக்கிறான்

இவன் மேல் காதல் கொண்டு
உயிரை பணயம் வைத்து
உண்மையை உரக்க சொல்ல
உழைப்பவரும் உண்டு

இவனுக்கு சமூக பொறுப்புமுண்டு
இவனுக்கோர் சமூகத்தில் பெயருமுண்டு
அதுதான்
"ஊடகம் "


Monday, May 7, 2018

கனவே கலையாதே

எத்தனை முறை முயன்றும்
முடியாமல்
வார்த்தை வெளிவர
தயங்கி நின்றிருக்கிறேன்
உன்னிடம் சொல்ல

தெரியவில்லை
இன்று எப்படி சரளமாய் சொன்னேன்
உன்னிடம் என் காதலை
கனவே கலையாதே

அன்புக்கும் ஆசைக்குமாக
ஓர் ஆண் ஓர் பெண் குழந்தையென
மிகிழ்ச்சியின் வெளிச்சத்தில்
என் குடும்பம்
கனவே கலையாதே

மாமியாரும் மருமகளும்
அம்மாவும் மகளுமான
பாசத்தின் மிச்சம் பகிர்ந்து
திளைத்திருக்க
கனவே கலையாதே

தனிமையின் கவலை
மறந்திருக்க
தொலைபேசியும்,
இணையமுமின்றி
வீட்டில் உறவுகள்
நிறைந்திருக்க
கூட்டு குடும்பத்தின்
இன்பத்தில் நான் திளைத்திருக்க
கனவே கலையாதே

அழைக்காமல் வந்து
என்னை மகிழ்ச்சியில்
ஆழ்த்தும் என் மனதின் ஆசை
அறிந்த என்
கனவே கலையாதே


Tuesday, May 1, 2018

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

வெயிலில் வியர்வை சிந்தி
நாம் சோற்றில் கை வைக்க
சேற்றில் கால் பதித்து
உழைக்கும் விவசாயிக்கும்

மணம் தனை மறந்து
மனம் தனை  தூய்மையாக்கி
நம் சுற்றம் தூய்மையை குறிக்கோளாக்கி
உழைக்கும் துப்புரவு தொழிலாளிக்கும்

காலம் நேரம் பாராமல்
பிணி என்று யார் வந்தாலும்
முகம் மலர பணிவிடை செய்து
உழைக்கும் மருத்துவருக்கும்
அவர் தன்  துணை நிற்கும்
செவிலியர்க்கும்

தவறி தீயில் விழுந்தாலும்
தவறி கடலில் விழுந்தாலும்
இயற்கை தான் தவறி நடந்தாலும்
உயிரின் மேன்மை அறிந்து
நம் உயிரை காக்க காத்திருக்கும்
தீ மற்றும் மீட்பு குழு அன்பர்களுக்கும்

எத்தனை நாகரீக உடைகள் வந்தாலும்
தன் கை கொண்டு தறி இயக்கி நெசவு
செய்யும் என் கைத்தறி நெசவாளர்களுக்கும்

உடல் உழைப்பின்றி
குளிரூட்டபெற்ற அறையில்
இருந்தாலும் தன் மூளையை கொண்டு
உழைக்கும் மின்பொறியாளர்களுக்கும்

எந்தவகை ஆயினும்
உழைத்தால் உயர்வுண்டு என்று
நம்பி உழைக்கும்
அத்தனை உழைப்பாளர்களுக்கும்
என் இதயம் கனிந்த
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்