Monday, March 4, 2019

யானை !

புழுதிபறக்கும்
நிலத்தில்
பிளிறும் ஓசை
கேட்டால்
சுற்றி இருப்பவனுக்கு
குலை நடுங்கும்

பிணம் தின்னி கழுகுகள்
வட்டமிட தொடங்கிவிடும்

கடும்பகையோ
பேராசையோ
பெருங்கனவோ
போர் என்று வந்துவிட்டான்

நிமிடத்தில்
முடிந்துவிடும் வாழ்விது
என அறியா மானிடன்

கையில் வாள் இருப்பினும்
என் முன் வர தயங்குகிறான்
அவனை கொல்ல
விருப்பமில்லை
எனக்கும்

இருந்தும்

என்மேல் அமர்ந்திருக்கும்
என் அரசன்,
எனக்கு உணவு கொடுத்த
என் ஊர் மக்கள்
என் கிராமம் , என் நாடு
துண்டாடப்படுகையில்
சினம் என்னை ஆட்கொள்கிறது

போரில்
எங்கிருந்தோ
ஒருவன்
அம்பெய்கிறான்,

பின்னாலிருந்து
ஈட்டிக்கொண்டு
என்னை தாக்குகிறான்
இன்னொருவன்

வலி இருந்தும் 
கையில் சிக்கும்
எதிரிநாட்டு வீரனை
காற்றில் பறக்கவிட்டு
ஓடுகிறேன்

போர் முடிந்து
என் மன்னவன்
வெற்றிபெற வேண்டுமென

வெற்றி பெற்று
கோட்டையினுள்
செல்ல
மன்னவன் மேல்
மலர்தூவி
வாழ்த்தும்
மங்கையர்
நாணம் காண
வேணும்மென்ற
கனவோடு

பொன்னிற
நெற்றிப்பட்டமனிந்த
துதிக்கை வீசி
பெருங்காதுகள் கொண்ட
எனக்கொரு
பெயருண்டு

அன்புக்கு கட்டுப்பட்டு
அடங்கிநிற்கும்
வேறெதற்கும்
அடங்காத
திமிர்கொண்ட
"பட்டத்துயானை"


No comments: