Sunday, December 30, 2018

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதிதாய் ஒரு ஜனனம்
புது வருடம் என பெயரிட்டு
அழைத்தேன்

எல்லா வருடமும்
மூடிய புத்தகம் போல்
பொக்கிஷத்தை
தன்னுள்
புதைத்து கொண்டு தான்
பிறக்கிறது

புதிதாய்
கற்க நினைத்தால்
திறந்து படியுங்கள்

இல்லையெனில்
ஆயிரமாயிரம் கருத்துக்கள்
உள்ளிருப்பினும்
தூசிபடிந்து
கண்களுக்கு தெரியாமல்
இதுவும் கடந்து போகலாம்

கடந்த  வருடம்
கொடுத்த வலிகளும்
அனுபவங்களும்
சந்தோஷ நினைவுகளும்
புது வருடத்திற்கு
எடுத்து செல்வோம்
நம்மை செதுக்க
அவை உதவலாம்

வாழ்த்த நாட்கள்
மீண்டும் வரப்போவதில்லை
ஆனால்
வரும் நாட்கள்
நேசத்துடனும்
பாசத்துடனும் வாழ்ந்து
நல்ல நினைவுகளை
தரட்டும்


எல்லாருக்கும் என் இதயம் கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

Friday, December 28, 2018

தொல்லை !

பகலில் உன்னை நினைக்காமல்
இருக்கமுடிவதில்லை
இரவிலோ
என்னை நெருங்காமல்
நீ இருப்பதில்லை

இரவு முழுவதும்
என் தூக்கத்தை
சூறையாடுகிறாய்

நீ முத்தம் இடுகையில்
ஏனோ
என் ரத்தம் உறிஞ்சுவதாய்
உணர்கிறேன்

நீ பெண்
நான் ஆண்
இருந்தும்
இந்த சமூகம்
நம்மை தவறாய்
நினைக்காது

உன்னுடன்
இரவை கழித்தால்
மரணம் கூட என்னை
நெருங்கலாம்

நீ இல்லா
இரவை கடக்கவே
என் மனது துடிக்கிறது

உன்னை பிரிய
செய்த சூழ்ச்சியெல்லாம்
முறியடிக்கிறாய்

என்ன செய்ய என
யோசனையில்
என் பகல் கடக்கிறது

யாரவது தெரிந்தால்
யோசனை
சொல்லுங்களேன்
இந்த கொசு தொல்லை
தாங்கலப்பா









Friday, December 21, 2018

என் ஆவல் !

சிலந்தி வலையில்
சிக்குண்ட வண்டு போல
பல நட்புகளில்
சிக்குண்டு கிடந்திருக்கிறேன்
மீள வழிதெரியாமல்

புறக்கணிப்பின்
சாராம்சம்
அர்த்தமில்லாமல்
கடத்தப்பட்ட பக்கங்களாவும்
இருக்கலாம்
இல்லை
புரட்டப்படாத
பக்கங்களாவும்
இருக்கலாம்

அர்த்தமற்றதாக
கடந்த நட்பினால்
புரட்டப்படாத
பக்கங்களை  நிராகரித்தேன்

நட்பின்பால்
உள்ள ஈர்ப்பால்
மீண்டும் தயக்கத்துடன்
துவங்கினேன்

மெல்ல மெல்ல ஈர்க்க
தொடங்கியது
என்னை தன்பால்

பலகீனங்கள்
பரஸ்பரம்
புரிந்துகொள்ளப்பட்டது

கறுப்போ
சிகப்பா
மாநிறமோ
ஆணோ
பெண்ணோ
பேதங்களற்ற
ஒர் நட்பு
கிடைத்தது

முடிவிலா
தொடர்கதையாய்
தொடரவேண்டும்
என்பதே
இப்போது
 என் ஆவல்


Thursday, December 20, 2018

சுவாரசிய நிமிடங்கள்

ஒவ்வொரு நாளிலும்
கொஞ்சம் இனிமையான
நிமிடத்தை சேமித்து வையுங்கள்

உடல்நலமில்லா வேளையில்
உண்ணும் கஷாயத்தில் கூட
மதுரம் சேர்ப்பது போல்

உங்கள் கஷ்டங்களுக்கு இடையில்
புன்னகைக்கு சிறு இடம் ஒதுக்குங்கள்

யாருமில்ல வேளையில்
சாய்வு நாற்காலியில்
அமர்ந்து யோசிக்கையில்
தேனீர் இல்லா கோப்பை
என்ன சுவாரசியத்தை
தந்துவிட போகிறது ?

பிரிந்து போன காதலோ
கடந்து போன நட்போ
முறிந்து போன உறவோ
அசைபோடுகையில்
அந்நேரம் தூவிவிட்ட
இனிமை நினைவுகள்
தரக்கூடும்
உங்களுக்கு
சிறந்ததொரு
சுவாரசிய நிமிடங்கள்




மன்னிப்பு!

மன்னிப்பு
யாரிடம் கேட்பது ?

எட்டி எட்டி உதைத்து
பல பல நாள் அவள்
தூக்கம் கெடுத்தும், பின்
உடல் கிழித்து
வெளியில் வந்தும்,
இன்னல்கள் பல தந்தும்
என் பசி, என் நலம்
என மட்டும் சிந்தித்திருக்கும்
தாயிடமா ?

தான் காணா உலகத்தை
தோள் மேல் வைத்து
எனக்கு காட்டி
தான் சிறுவயதில் பட்ட
இன்னல்கள் எல்லாம்
தன்  மகன் காணாதிருக்க
தன் சுகத்தை மறைத்து
உழைக்கும்
தந்தையிடமா ?

வகுப்பு அறையில்
ஜன்னலோரம் பார்த்து
விளையாட்டாய்
நாட்களை கடத்தியும்
அணைத்து பிள்ளைக்கும்
தன் பிள்ளைபோல்
பாடம் நடத்திய
ஆசிரியர்கா ?

பார்த்த மாத்திரத்தில்
பிடித்தது என சொல்லி
தாலி வாங்கி
எனக்கு பிடித்ததை
தனக்கு பிடித்ததாய் மாற்றி
சுகம் துக்கம் கலந்து
எனக்குள் சரிபாதி
கலந்திட்ட என்
துணைவியிடமா ?

நட்பெனும் வட்டத்தில்
சில வஞ்சகர்களை
நட்பென்று ஏமாந்ததால்
பின் நட்பென்று
வருபவர்களை கண்டால்
சஞ்சலத்தில்
சந்தேக கண்கொண்டு கண்டு
விலகிய நட்பிடமா ?

சாலையில் யாரோ
தவறவிட்டு சென்ற
காகிதம் 
வண்டியின் சக்கரத்திலும்
நடப்போர் கால்பாதத்திலும்
பட்டு கிழிந்தும்
மழை வர நனைந்து
மக்கி மண்ணில் மறைந்து
போவது போல

உணர்ந்தேன்
எவரையும் அவர் அவர்
இயல்பில் ஏற்றுக்கொள்ளுதலே
வாழ்க்கை
உணர்த்தும் பாடம் என

Sunday, December 16, 2018

மனிதம்

விசித்திரமாய் தான் இருக்கிறது
ஐந்தறிவிற்கு உள்ள அன்பு
சில நேரம் ஆறறிவிற்கு
இல்லாததை காண்கையில்

நல்லவரென
சொல்லித்திரியும்
நீங்கள்
பொய் முகமூடியிட்டு
வழிநெடுக
அலைந்துகொண்டிருக்கிறீர்கள்

இதுவும் ஒரு பிம்பமாய்
ஒரு புகைப்படமாய்
ஒரு நிமிடத்தில்
உங்கள் மனதை கடந்து விடும்

நீங்கள் உதவுவீர்
என காத்திருந்தால்
ஆழியலை கூட
கரையை கடந்திருக்கும்

மற்றவர்களுக்காக
சிலுவையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
குறைந்தபட்சம்
மற்றவர்களின்
பாதைக்கு முள்ளாகமலாவது
இருக்க முயற்சியுங்கள்

மனம்
மரத்துப்போவதே
மனிதம் மரித்து போவதற்கு
தொடக்கம்

கண்மூடி
இருளென்று பயக்கும்
மனிதா,
கண் திறந்து பார்
உலகம் உனக்கானது

Monday, December 10, 2018

இதுவும் கடந்து போகும் !

 இதுவும் கடந்து போகும்

என் தாய்,
தந்தையை விட்டு
எங்கள் கை பிடித்து
வீட்டை கடந்து போகையில்
இதுவும் கடந்து போக வேண்டிவரும்
என நினைத்திருக்கவில்லை

கொஞ்சி மகிழ்ந்து
இருந்த பெற்றோர்
பிரிய காரணம்
நான் அறிந்திலேன்

இறகுகளை உதிர்த்து
பறக்கும் பறவை போல்
எங்களை பிரிந்து பறக்க
நினைக்கும் இவர்களின்
தூரம்தான்
நானறியேன்

சிலநேரம்
சுயநலமான முடிவுகளில்
சிறு தவறுகளில்
சிக்குண்டிருக்கும்
அவிழ்க்கமுடியாத
பெருங்குற்றங்களின்
முடிச்சுகள்

குழந்தைகளின்
அன்பை உதறி
நீங்கள் சொல்லும்
காரணங்கள் யாவும்
ரணங்களாய் காயப்படுத்தும்
வாழ்நாள் முழுவதும்
என்பதை அறிவீரோ ?

புலன்விசாரணையாய்
காலமெல்லாம்
இச்சமூகம் கேட்கும்
கேள்விக்கணைகளை
இதயத்தில்
உங்களுடன் நாங்களும்
தாங்கிதான் வாழவேண்டுமோ ?!

உறவுகளுக்குள்
சுவர்கள் எழுப்பி
சிநேகம் வளர்த்திட
முயலும் பெற்றோர்

துக்கம் பீறிட்டு வரும்
எங்கள் அழுகை சத்தம்
சாத்தானுக்கு பெரும்சிரிப்பை
வரவைத்திருக்குமெனில்
நாங்கள் கடவுளென
நினைக்கும் உங்கள்
உணர்வு
நானறியேன்

விசித்திரமான விஷயங்களை
செய்வதே வாழ்க்கையின்
வேடிக்கையாய் போனது
மனிதர்களுக்கு ...
இது
நாங்கள் வாங்கி வந்த
வரமா இல்லை சாபமா ?


Thursday, December 6, 2018

சிரிக்கும் புத்தன் சிலை !



வறுமை
பாய் போட்டு
படுத்திருக்கும்
வீட்டில்
ஒருவன்

யாரோ சொன்னார் என
ஆசை கொண்டு
வாங்கி வந்தான்
சின்ன சிறிய
சிரிக்கும் புத்தன்
சிலை

அவர் சிரிப்பை கண்டால்
வறுமை மாறும் செழுமை
பொங்கும் என நினைத்து
தினம் தினம் கண்விழித்தான்
சிலையின் முன்

நாட்கள் செல்ல செல்ல
சிரிக்கும் புத்தன் சிலையும்
அழுவதாகவே
தோன்றுகிறது
அவனுக்கு

புரியாமல் யோசித்தான்
இது புத்தனின் குற்றமா ?
இல்லை
இவன் ஆசையின்
குற்றமா ?


Tuesday, December 4, 2018

மழை !

அதோ கார்மேகங்கள்
வானத்தை சூழ்ந்துகொண்டிருக்கிறது
இதோ தும்பிகள் ரீங்காரம்
என் காதில் விழுகிறது

சில்லென்று மழை துளிகள்
மண்ணை நனைக்கிறது

மண்ணின் வாசனை
மெல்ல மேல் எழும்புகிறது

இடியின் சத்தம்
என்னை அதிர்ச்சியுடன்
ஆச்சரியபடுத்துகிறது

இதோ நனைய நான்
ஆசை கொண்டு
வெளியில் வருகிறேன்

கால் தடுக்கி
மழை நீரில் விழுகிறேன்
நண்பன் தோளில் தட்டி
எழுப்புகிறான்

விழித்தேன்
வறண்டபூமியில்
கனவிலேனும்
மழையை ரசிக்க விடாமல்
எழுப்பிய நண்பனை
திட்டியபடி

Monday, December 3, 2018


அப்பட்டமான சுயநலத்தில்
உறவுகளை பகையென
கொள்ளும் இவ்வுலகில்

மற்ற ஜீவராசிகளை
ஜீவனுள்ளதாக
மனதில் கொள்ளவே
மனதில்லை
இம்மனிதனுக்கு

சிட்டுக்குருவிகளின்
கீச் கீச் சத்தத்தை
தன் கீச்சுகளின் மூலம்
பதிவிட்டு மனநிறைவு
கொள்கிறான்

தன் ஜனன காரணத்தையே
அறியா மானிடன்
பிற உயிரன்களின் பிறப்பின்
ரகசியம் எவ்வாறு
அறிவான் ?

நமது சுகவாசி
வாழ்வியலில்
மறுத்து மரித்து
போகிறது
அக்கறையும்
அன்பும்

உயிரில்லா
தொலைபேசியையும்
மடிக்கணினியையும்
கையிலும், மடியிலும்
தவழ விடும் நாம்
கொஞ்ச நேரம்
சிந்திப்போம்
உயிருள்ள ஜீவராசிகளை பற்றி

நாம் சிந்தும்
நீரும்,
உன்கையில் சிதறும்
சில பருக்கை சோறும்
போதும் அவை பசி ஆற

ஒற்றுமையாய் அமர்ந்து
உண்பதை காண்கயில்
உணர்த்துகிறது
இது படம் அல்ல
பாடமென ....

Saturday, December 1, 2018

தேடுகிறேன் !

முகமூடி பார்த்து
பழகிடும் காலத்தில்
அது அகற்றப்படும் நேரம்
இதயம் அதை
தாங்கும் திராணியின்றி
நிகழப்படுகின்றன
நட்பின் மரணம்

கானல் நீர் போல
வெறும் பொய் வார்த்தைகளால்
கட்டி வைத்த பிம்பம் ஒன்று
உண்மையின் நிழலில்
சாய்ந்து விழுகிறது

பறக்கும் நேரம் பறவை அறியாமல்
உதிர்ந்து போகும் இறகினை போல்
சிலநேரம்
தெரியாமல் காயப்படுத்தும்
நட்பில்
காயம்பட்டதும் அறியாமல்
அஸ்தமனமாகிறது
நட்பு

தாயின் கருவறையிலுருந்து
வெளிவர துடித்து
பின், ஒருநாள்
தாயின் கருவரையிலேயே
இருந்திருக்கலாமோ
என்று என்னும் நேரம்
வாழ்வின் விளிம்பில்
நிற்கும் நேரம்

பொக்கிஷம் என
சேமித்து வைத்தேன்
மண்பானையில்
அது
ஓட்டையாகி
வீணாகி போனதை
நானறிந்திலேன்

இரவின் நிசப்தத்தில்
என் மனதில் எழும்
பேரலை சப்தத்தை
யாரறிவாரோ ?

அன்பின்
புதைகுழியில்
சிக்குண்டு தேடுகிறேன்
பிம்பமில்லா அன்பு
எங்குண்டு  என ?!



அன்பு

அழும் குழந்தைக்கு
ஊமை தாய் எப்படி
ஆரிராரோ தாலாட்டு பாடி
தூங்க வைத்திடுவாள் ?

உலகம் காண முடியா தாய்
எப்படி தன்  குழந்தைக்கு
நிலவை காட்டி
சோறூட்டிடுவாள் ?

காது கேட்கா தாய்
எப்படி
இடி இடிக்கும் பொழுதில்
தன் குழந்தையின்
காதை மூடிடுவாள் ?

நினைக்க நினைக்க
நித்தம் ஒரு கவலை
மனமெங்கும்
குழப்பம்

யார் செய்த தவறென
யார் மீது பழி போட

தாய் சேய் பந்தம்
பற்றி சிந்தித்தது
என் மனம்

வெளிச்சத்தில்
கண்மூடி இருக்க
யாரும் அறியாது என எண்ணி
பாலை ருசித்திடும்
பூனை போல

எல்லாம் சரியாய் இருந்தும்
இதெற்கெல்லாம் காரணம்
அன்பு ஒன்றென
அறியாமல் வளர்கிறோம்

அன்புக்காக ஏங்கும் ஒரு கூட்டம்
ஒருபுறம் அனாதை இல்லத்தில்
அன்பை காட்ட ஆளில்லாமல்
ஒரு கூட்டம் முதியோர் இல்லத்தில்

முரண்பட்ட இதயங்களை
படைப்பதே இறைவனின்
வேலையாயிற்றோ ?

இரவின் மடியில்
சாய்ந்திருக்கும் நேரம்
கைபேசியின் ஒளியால்
ஒளிர்ப்பிக்காமல்
கொஞ்சம் தாயின் மடியில்
தலை சாய்த்து கேளுங்கள்
உங்களிடம் சொல்ல
அவள் சேர்த்துவைத்திருக்கும்
அன்பின் பொக்கிஷ கதைகளை

காலம் கடந்தபின்
ஏங்கி
கிடைக்காமல்
நிற்கதியாய் நிற்கையில்
வருந்தி பயனில்லை

அன்பு,
அது காற்றுக்கும்
இலைகளைக்கும்
இடையில் இருக்கும் பந்தம் போல
உணரத்தான் முடியுமெனில்
உணருங்கள்
உணர்த்துங்கள்
தோழர்களே !