Monday, December 10, 2018

இதுவும் கடந்து போகும் !

 இதுவும் கடந்து போகும்

என் தாய்,
தந்தையை விட்டு
எங்கள் கை பிடித்து
வீட்டை கடந்து போகையில்
இதுவும் கடந்து போக வேண்டிவரும்
என நினைத்திருக்கவில்லை

கொஞ்சி மகிழ்ந்து
இருந்த பெற்றோர்
பிரிய காரணம்
நான் அறிந்திலேன்

இறகுகளை உதிர்த்து
பறக்கும் பறவை போல்
எங்களை பிரிந்து பறக்க
நினைக்கும் இவர்களின்
தூரம்தான்
நானறியேன்

சிலநேரம்
சுயநலமான முடிவுகளில்
சிறு தவறுகளில்
சிக்குண்டிருக்கும்
அவிழ்க்கமுடியாத
பெருங்குற்றங்களின்
முடிச்சுகள்

குழந்தைகளின்
அன்பை உதறி
நீங்கள் சொல்லும்
காரணங்கள் யாவும்
ரணங்களாய் காயப்படுத்தும்
வாழ்நாள் முழுவதும்
என்பதை அறிவீரோ ?

புலன்விசாரணையாய்
காலமெல்லாம்
இச்சமூகம் கேட்கும்
கேள்விக்கணைகளை
இதயத்தில்
உங்களுடன் நாங்களும்
தாங்கிதான் வாழவேண்டுமோ ?!

உறவுகளுக்குள்
சுவர்கள் எழுப்பி
சிநேகம் வளர்த்திட
முயலும் பெற்றோர்

துக்கம் பீறிட்டு வரும்
எங்கள் அழுகை சத்தம்
சாத்தானுக்கு பெரும்சிரிப்பை
வரவைத்திருக்குமெனில்
நாங்கள் கடவுளென
நினைக்கும் உங்கள்
உணர்வு
நானறியேன்

விசித்திரமான விஷயங்களை
செய்வதே வாழ்க்கையின்
வேடிக்கையாய் போனது
மனிதர்களுக்கு ...
இது
நாங்கள் வாங்கி வந்த
வரமா இல்லை சாபமா ?


No comments: