Sunday, August 23, 2020

குழந்தையின் குமுறல்

பத்து மாதம் தான் 

என்னையும் சுமந்து 

பெற்றிருக்க வேண்டும் 

நீ 

 

எல்லா பிள்ளையும் போல 

உன் வயற்றில் உதைத்து 

விளையாடிருக்க வேண்டும் 

நான் 


எல்லா தாயையும் போல 

எனக்காய் உன் ஆசைகளை 

தியாகம் செய்து 

உண்ணும்போதும் உறங்கும்போதும் 

எனக்காய் சிந்தித்து 

என்னை வலியினூடே 

பிரசவித்திருக்க வேண்டும்

நீ 


பிறந்த நாடு முக்கியம் 

என்றுணர்ந்த நீ 

பெற்ற  பிள்ளைக்கு 

உன் பாசம் முக்கியம் 

என்று உணர 

தவறியதேனோ ?


தோள் கொடுப்பான் 

தோழன் சரி தான் 

பெற்ற தாயின் பாசம் 

தர இயலுமோ 

என் யோசித்தாயா 

நீ? 


குழந்தையின் அன்பை உதறி 

நீங்கள் சொல்லும் காரணங்கள் 

எல்லாம் ரணங்களுக்கு 

மருந்தாகாது 


உறவுகளுக்குள் 

சுவர் எழுப்பி 

இறகுகளை உதிர்த்து 

பறக்க சொல்லுகிறீர்கள் 

என்னை 

பறந்திடத்தான் 

இயலுமோ ?


உங்களை நினைத்து 

பீறிட்டு வரும் 

என் அழுகையின்  சத்தம் 

குண்டுகள் தாங்கி பறந்து வரும் 

போர் விமானத்தை விட 

பேரிறைச்சல் கொண்டது 

என அறிவாயா

 நீ?


குற்றமே செய்யாத 

எனக்கு ஏன் 

வாழ்வதே தண்டனையாய் 

தந்தாய் 

நீ ?



No comments: