Thursday, April 26, 2018

ஆண் பெண் நட்பு !

முதல் சந்திப்பு
புன்முறுவலுடன்
தான் தொடங்கியது

தேவைக்கு மட்டும்
பேசுவதில் ஆரம்பித்து
பின் தேவையே உன்னுடன்
பேசுவது என
வளர்ந்தது

எந்த நிமிடம் நமக்குள்
நட்பு
நுழைந்தது தெரியவில்லை

தாயிடம் பகிராததும்
நமக்குள் பகிர்ந்தோம்

சில நாள்
செல்ல சண்டைகளிட்டோம்
சில நாள்
செல்லமாய் கோபித்துகொண்டோம்

தாயிக்கு  பின்
நான் சொல்லாமலும்
என் உணர்வறிந்தவள் நீ

எனக்கு காய்ச்சலென்றால்
சொல்லாமல் மருந்தோடு
என் முன் நிற்பாய்
உனக்கு வலி என்றால்
அதிகம் வலிப்பதென்னவோ
எனக்கு தான்

ஆண் பெண் நட்பிற்கு
ஊர் சொல்லியது
ஆயிரம் கதைகள்
தப்பவில்லை நம் நட்பும்

தெளிந்த நீரோடை போல்
சென்ற நம் நட்பில் கல்லெறிந்து
கொண்டிருந்தது நம் சுற்றம்

அக்கா என்றோ தங்கை என்றோ
அழைத்தால் ஏற்கும் இச்சமூகம்
தோழி என்றால் மூன்றாம் கண்
கொண்டு பார்ப்பது ஏனோ ?

வீரநடை போடும் நம் நட்பில்
விரசம் விதைத்து விரிசல்
ஏற்படுத்த நினைக்கும் சிலர்

தோழி
எனக்கொரு ஆசை

காலன்
நெருங்கும் வரை
நம்மை சுற்றி உறவுகள்
பல இருந்தாலும்,
இன்பங்களையும்
துன்பங்களையும்
பகிர தோள் கொடுக்கும்
தோழன் தோழியாய்
நம் நட்பு  என்றும்
இருக்க ஆசை


Tuesday, April 17, 2018

"செவிலி"

பெற்றெடுத்து
அன்பாய் பார்த்து கொள்பவள்
தாய்
நம்மை
பெற்றெடுத்தவளையும்
அன்பாய் பார்த்துக்கொள்பவள்
"செவிலி"

பிணி வந்து
அருகில் இருப்பவரே
முகம்  சுளிப்பினும்
முகம் மலர
பணிவிடை செய்பவள்
"செவிலி"

அறுவை சிகிச்சை ஆயினும்
ஆறாத நோயாயினும்
ஆறுதலுக்கு உடன் இருப்பவள்
"செவிலி"

பொறுமைக்கு
உவமை இவள்
போல் நான் கண்டதில்லை

நேரம் காலம் பாராது
தாய் போல நம் நலனில்
அக்கறை கொள்வதால்
உறவாய்
சகோதரி என்றே
அழைக்கிறோம்

பிணி கொள்ளும்
நேரத்தில்
நான் கண்ட தெய்வம்
"செவிலி "

Friday, April 13, 2018

ஆசிஃபா

அன்று
என் எட்டு வயதில்
நண்பர்களுடன்
விளையாடிய விளையாட்டுக்கள்
தான் மனதில் அழியாத நினைவுகளாய்
இன்றுவரை இருக்கிறது

இன்று
எட்டு வயதில்
மதவெறி பிடித்த சில
நர மாமிச தின்னிகளுக்கு
இறையானாள் ஆசிஃபா
அதற்கு முன் நிர்பயா 
தினமும் பெயர் மட்டும் 
மாறி கொண்டு 

இறைவனை படைத்தவன் 
எவன்?
படைத்தவன் இறந்திருப்பான் 
படைக்கபட்ட இறைவன் 
உறங்கிருக்க கூடும் 

அரசியலுக்காய்,பணத்துக்காய் 
இறைவனுக்கு அரிதாரம் பூசி 
இறைவனை கண்டு அஞ்ச வைத்து 
வெற்றி பெற நினைக்கும் மூடர் கூட்டங்கள் 

குழந்தையையும் பெண்களையும் 
தெய்வத்திற்கு இணையாக 
வணங்க சொல்லித்தந்த 
மதங்கள் எங்கே?

கடவுள் இருக்கிறார் என்று 
நம்பும் கோவிலிலேயே 
இந்த ஈன செயல் நடந்தது 
கொடூரத்தின் உச்சம் 

விலங்குகளை காக்க சட்டம்
போட்ட நாம்
இந்த கயவர்களை தப்பிக்க
சட்டத்தின் ஓட்டையை
அடைத்து

இனி ஒரு விதி செய்வோம்


பிரிவு !

அரட்டை அரங்கத்தில்
இணையத்தின் உதவியுடன்
இணைந்த உறவு

எதனை பகிர்ந்து கொண்டோம்
நினைவில்லை
ஆனால் இங்கு சோகம் மட்டும்
வாழ்க்கை இல்லை என
உணர்த்தியது முதலில்

எப்படி இருக்கிறாய் ?
சாப்பிட்டாயா? என ஓரிரு வார்த்தைகள்
போதுமானது

அதை கேட்க நீ வரும் வரை
காத்திருப்பதும்
சுகமாகிற்று

அடிக்கடி பார்க்கின்றவரை
நேசிக்க முடியாது
அதுபோல்
நேசிக்கின்ற ஒருவரை
அடிக்கடி பார்க்கின்ற
பாக்கியம் கிடைப்பதும்
வரமே

முடிவிலா பாதை என நினைக்கையில்
பாதையின் முடிவில் தென்பட்ட  மதில்சுவர்

இன்று தினம் பார்த்தும்
பாரா முகம்
இது வரமா இல்லை சாபமா ?!

இந்த பிரிவுக்கு தான்
என் மேல் எத்தனை
பிரியம்...


Monday, April 9, 2018

தாய்மொழி

தாய், அவள் வயிற்றில் இருந்து
வெளிவந்து தொப்புள் கொடி
வெட்டப்பட்டதும் தொடங்கியது
என் தமிழ்தாயிடுனான என் உறவு

தாய் சொல்லிக்கொடுத்ததாலோ
என்னவோ தமிழ்த்தாய் என்றே
விளிப்பர்

"அம்மா, அப்பா, அண்ணன், அக்காவுடன்
"ஆ"னந்தமாய் ஆடி கழித்தேன்
"இ"சை துணை கொண்டு ,
"ஈ"கையரசன் கதையை
"உ"ணர்வாய் சொல்லி  உலகத்தை அறியவைத்து
"ஊ"க்கம் கொடுத்து
"எ"ட்டுதிக்கும்
"ஏ"ழைகள் ஏராளம் என புரிய வைத்து
"ஐ"யம்கொள்ளாமல்
"ஒ"ழுக்கமாய் ஒற்றுமையாய் இருந்தால்
"ஓ"ர் நாள் உலகம் உன் வசபடும் ஆனால்
"ஒள"வியம் மட்டும் என்றும் பேசாதே என்றாள்
        என் தாய்

பிற மொழி கற்போம் தவறில்லை
தாய்மொழி மறந்தால் நம் உயிரில்லை


Friday, April 6, 2018

மறக்காதீர் !

தீப்பெட்டி இல்லாமல் தான்
பற்றிகொண்டது
எனக்கு

விரட்ட விரட்ட
மீண்டும் மீண்டும்
வருகிறது

மறக்க நினைத்தாலும்
மறைக்க முடியாமல்
தவிக்கிறேன்

ஒரு நாள் என்றால்
சகித்துகொள்வேன்
தினமும் முப்பொழுதும் வந்தால் !
என் செய்வேன் நான் ?

இன்றோ நாளையோ
என்று விடியுமோ
எனக்கு

வசதியாய் இல்லாவிடினும்
இது மட்டும் என்னிடம்
அளவுக்கு அதிகமாய்
இருக்கிறது

பக்கத்துக்கு வீட்டுக்கு சென்ற
என் தாய் வாங்கிவரும்
மிச்சமாய் அவர்களின் உணவு
என் உச்சி முதல் பாதம் வரை
குளிர்விக்கும்

உணவை வீணாக்கும் முன்
என்னை போன்றோர்
ருசிக்காக அல்ல
பசிக்காக காத்திருப்பதை
மறக்காதீர்

Monday, April 2, 2018

நானிருக்கிறேன்

பெண்கள்
அழகாய் இருப்பதாலோ
ஆண்கள்
அமிலத்தை ஊற்ற நினைக்கிறார்கள்

தன்னை
நேசித்தவர்களை எல்லாம்
காதலிக்க வேண்டுமென்றால்
ஒரு பெண்ணுக்கு
எத்தனை ஆயுள் வேண்டிடுமோ

பூமியை தாய் என சொன்னதாலோ
அவளை தோண்டி அமிலம் எடுக்க
நினைக்கிறார்கள்

குடிக்க பணம் தராத தாயை
தலையில் கல்லிட்டு
கொள்ளும் இக்காலத்தில்
எதை செய்ய தயங்குவர்

செல்லமாய் கொஞ்சிடும்
பிராயத்தில் வஞ்சமாய்
நடந்திடும் சில மூடர் கூட்டங்கள்

புத்தக பை சுமையென நினைபோர்
மத்தியில் குடும்ப சுமையும்
சுமக்கும் பெண்கள்

இவையெல்லாம் கண்டதாலோ
நட்பென்னும் பூ எடுத்து
தென்றல்  காற்றென அருகில்
சென்றாலும்
அனல் காற்றென
ஆர்பரிக்கிறார்கள்

விடிந்தும் பூக்காத
செடி நீ
என் கண்ணீரில் தான்
பூப்பாய் எனில்
உனக்காய் அழவும்
நானிருக்கிறேன்

***********