Monday, January 29, 2018

நானிருப்பேன்


என்றும் போல் 

அன்றும் சூரியன் 

கிழக்கே தான் உதித்தது 


ஆனால் அன்று 

என்றும் போல் 

இல்லை எனக்கு 


இனிமையாய் கேட்ட 

கொலுசொலி என்னை 

திரும்பி பார்க்க வைத்தது 


கண்டது தேவதை என 

நான் உணரும்முன் 

கணக்கின்றி காதல் 

விதைகளை வீசி சென்று விட்டாள் 


திரும்ப உனை  காண
கள்ளேறிய காளையாய் நான் 
உன் அவிழ்த்துவிடப்பட்ட 
கேசத்தில் அலைக்கழிந்து  
சுற்றிக்கொண்டிருகிறேன் 

என்
 எழுதுகோலும் 
உன் பெயரை கவிதையாய் 
எழுத காத்திருக்கிறது 

இருண்டிருந்த வீதியில் 

மின்மினி வெளிச்சம் போல 

என் வாழ்வில் வந்தவள்


என் மூச்சுகாற்று தினம் 

உன் பெயரையே

உச்சரித்து கொண்டிருக்கும் 


சொல்லவியலா சோகங்கள் 

மறக்க செய்யும் வித்தை 

மழலைக்கு பின் இம்மண்ணில் 

என்னவளின் சிரிப்புக்கு மட்டுமே உண்டு 


உலகின் எந்த திசைக்கு 

நீ பறந்தாலும் அன்பே 

காற்றடைப்பட்ட பலூனாய் 

உன்னுடன் கை கோர்த்து 

பயணிக்க நானிருப்பேன்  

Tuesday, January 23, 2018

என் காதல் !

என் காதல்
மலர் போல்
என்றேன்

மலர்ந்த மலர்
ஒருநாள் வாடிவிடும்
என அறியாமல்

என் காதலியை
மனம் கொத்தி பறவை
என்றேன்
தினம் என் மனதை
கொத்தி காய படுத்துவாள்
என அறியாமல்

அவளை மீன் என்றேன்
தண்ணீர் இன்றி
கரையில்
தத்தளிக்கும்
மீனாக நானாவேன்
என அறியாமல்

இதயத்தில்
ரோஜாவாய்
அவளை வைத்தேன்
ஏனோ
முட்களாய் மட்டும்
என்னை குத்துகிறாள்

மின் விசிறிகளின்
கூர்மூக்குகளும்
குத்தீட்டியாய்
என்னை சுற்றியே
சுழலுகிறது

பேரன்பிலே
நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகளை
நான் தேட

கற்பனையில்
காதலி உன் கரம் பிடித்து
கனியாத காதலை எண்ணி

தினம் தினம் எழுத்துக்களில்
நாம் சங்கமிக்கும்
தருணம் மட்டும்
மிச்சம்

புரிந்தது கொள்ளும் வரை

எழுதுகோல் எடுத்து
எழுத நினைத்த போது
யோசித்தேன்

எழுதுவது
ஓரிருவரி  கவிதையா ?
இல்லை
ஒருபக்க கவிதையா ?

எழுதுவது
படித்து புன்னகைக்கவா
இல்லை
பிறர் படித்து
அழுது கொண்டிருக்கவா

எழுதுவது

என் வாழ்க்கையையா
இல்லை
பிறர்
வாழ்க்கையையா

எழுதுவது
படிப்பவர்
பொருளறியவா?
இல்லை

வெறும் வார்த்தை
மட்டும் படித்து
கடந்து செல்லவா ?

புரியாதொன்றை
புரிந்தது கொள்ளும் வரை

இடைவெளி விட்டு
நிற்கிறது
என் எழுதுகோலும்
காகிதமும்

எறும்பு !

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ ஒழுக்கத்தின்
உதாரணம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ உழைப்பின்
சிகரம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ சேமிப்பதில்
எடுத்துக்காட்டு

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ முயற்சியின்
முன்னுதாரணம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ உன் துணை மேல்
அன்பானவன்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
ஆனால்
அறியவிரும்புகிறேன்
உன்னை இப்படி
வாழ கற்றுத்தந்தது
யாரோ !?

எதுவாயினும்
உன்னை கொல்ல
விருப்பமில்லை


Sunday, January 21, 2018

அடடே புகைப்படம்,


அடடே,
பார்த்ததும் பிடித்துவிடும்
புகைப்படம்

எடுத்தவனுக்கு
கலையின் அழகு
தெரிந்திருக்கிறது

ஆயிரமாயிரம்  பேர்
விரும்பும் ஒரு புகைப்படம்

ஆனால் ?!
மனிதநேயம்
அவனிடத்தில் வற்றி
போயிருக்கவேண்டும்

இன்றைய அவல நிலை
இது
சாலையோர விபத்தை
படம் பிடித்து
நண்பர்கள் குழுவிற்கு
அனுப்பும் நாம்

சாக கிடப்பவனுக்கு
திருவூர்தி அழைக்க தாமதிப்பது 
அவனை கொல்வதற்கு சமம் 
என அறிவோமோ ?!

அப்புகைப்படத்தை பார்க்கும்
ஒவ்வொருவருக்கும்
அச்சிறுகுழந்தை
உணர்த்திக்கொண்டே இருக்கும்
உதவி என்பது யாதென்று

அதை எடுத்தவன்
மட்டும்
விதி விலக்கோ ?!

இதை தான் எம்வள்ளுவன்
அழகாய் சொன்னான்

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பதும் அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் என்பதும் அல்ல
உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது

உதவி செய்ய அறிவு தேவை இல்லை 
இதயம் இருந்தால் போதும் 

வாருங்கள் காலத்தே உதவுவோம் !

Friday, January 19, 2018

அங்கீகாரம்!

ஆண் பிள்ளை என நான் பிறந்தேன்
அப்படியே வளர்ந்தேன்

உடல்கூறின் மாற்றத்தால்
என் இனம் நான் மறந்தேன்

பெண்ணின் நடையும் உடையும்
என்னை ஈர்த்தது அதை பின்பற்ற என்
உடல் துடித்தது
உறவுகளில் விரிசல் வெடித்தது

ஆண் அல்ல நான், பெண் அல்ல நான்
இச்சமூகம் என்னை உதறியது

என்னுடன் பழகிய நண்பர்களும்
என்னை பெற்றவர்களும் என்னை
விசித்திரமாய் எண்ணினர்

வகுப்பறையில் தனியாய்
ஓரங்கட்டப்பட்டேன்
உறவுகளின் நிழல் கூட என் மீது பட தயங்க
கூனி குறுகி நின்றேன்

ஊடகத்தில் ரோஸும், பத்மினி பிரகாசும்  ,
லட்சிமிநாராயணனும், கல்கி சுப்ரமணியனும்
வென்றெடுத்த வெற்றி ஏன் எல்லாருக்கும்
எட்டா  கனியாகவே இருக்கிறது ?

அர்த்தநாரீஸ்வரர் என கோயில் சென்று
வணங்கும் மக்கள்
நேரில் எங்களை கண்டால் ஏனோ வெறுக்கிறார்கள்

வேண்டி வாங்கி வந்த வரம் அல்ல இது
வேதனை தினம் தின்னும் விதி இது

வழியில் இனிஒருமுறை எங்களை கண்டால்
பேசாவிட்டாலும்,
முகம் சுளிக்காமலேனும் இருந்தால்
அதுவே எங்களுக்கான உங்கள்
அங்கீகாரம் என கொள்வோமே

திருநங்கை எனை
உங்கள் தங்கை என
கொள்வீரோ?

Thursday, January 4, 2018

குழந்தையின் சிரிப்பு !

அழாமல் நீ பிறந்த நேரம்
ஒரு கணம் நாங்கள் அழுத
 நேரம்

மறுகணம் நீ அழ தொடங்கினாய்
உன் அழுகை கண்டு நாங்கள்
மகிழ்ந்த
நேரம்

பத்து மாதம் தவமிருந்து -உன் தாய்
உறக்கம் தொலைத்து , ஆசைகள் மறைத்து
உனக்காக உன் நினைவில் தன் நினைவை
தொலைந்தாள்

வந்தும்,  நீ அவள் உறக்கம் பிடிக்கும் வேளை
பசித்ததென அலறிடுவாய்

சில நேரம் எதற்காக உன் அலறல்
என உறக்கம் தொலைத்து
கவனித்திடுவோம் உனை ..

தேடி தேடி தேர்ந்தெடுப்பேன்
உனக்கான ஓர் பெயரை

தேவதை என் வீட்டில் வந்ததென
பொய் நான் சொல்லவில்லை

எத்தனை எத்தனை வலிகள்
வெளியில் நான் பெற்றாலும்
வீடு வந்து உன் ஒரு
சிரிப்பில் மறந்து பறந்து விடுகிறதே !

கவலைகளை மறக்க செய்பவன்
இறைவன் எனில்
என் கவலைகளை தன் சிரிப்பால்
மறக்க செய்யும் உன்னை
என்ன பெயரிட்டு அழைப்பேன்

கவலைகளை மறக்க செய்யும்
மருந்து குழந்தையின் சிரிப்பை தவிர
வேறொன்றும் உண்டோ ?

Wednesday, January 3, 2018

மன்னிப்பாயா ?

புரிந்தவள் தான் என்
காதலியாய் வர நினைத்திருந்தேன்

ஓர் பார்வையில் பிடித்தவளையும்
என்னை அவள் புரிந்துகொள்ள
காத்திருந்தேன்

சின்னதாய் வளர்ந்த பழக்கம்
தினமும் பேசுவதே  வழக்கம்
என மாறி

பகிர்ந்து கொண்ட எண்ணங்கள்தான்
ஏராளம் என எண்ணி கொண்டேன்

பரஸ்பரம் பிடித்த விஷயங்கள் தெரிந்ததும்
தெரிந்ததை மற்றவர் உணர அதை
வழக்கத்தில் கொண்டேன்

உடை மாற்றினேன்  , உணவு மாற்றினேன்
நிறம் மாறும் பஞ்சோந்தி போல்
அவளின் மனம் கவர மாறினேன்

என்னை புரிந்தவளாய் அவள்
மாறியதாய்  எண்ணி
திருமணமும் செய்து கொண்டேன்

வாழ்க்கையில் ஆசை மறைந்து
நிறம் மாறி , நிஜம் பேச எத்தனிக்கையில்
முள் குத்தியது நெஞ்சில்

ஒற்றை ரோஜா போல் இருந்தவள் -பேசிய
ஒற்றை வார்த்தையில்
இன்று மலர் மறைந்து முள் கொண்ட
செடி என ஆனாள்

கற்ற மொழி எல்லாம் கூனி குறுகும்
வகையில் வார்த்தைகள்
வீசப்பட்டன ஏவுகணையாய்

புறப்பட்டு சென்று விட்டாள் தன்
பிறந்த வீடு நோக்கி

தனிமையில் அமர்ந்திருக்க
தெளிந்த நீரோடை  போல் ஆனேன்
புரிந்தது எனக்கு
என்னை புரிந்தவளை
நான் புரிந்துகொள்ளவே இல்லை என

மணம் புரிந்தவளின்
மனம் புரிந்து கொண்டால்  -வாழ்வில்
மணம் வீசும் என அறிந்து
மண்டியிட்டு அவளிடம் கேட்கிறேன்
மன்னிப்பாயா ?

Tuesday, January 2, 2018

எனக்கொரு பெயருண்டு (மலடி )

வீட்டில்
பெண்பிள்ளை பிறந்ததும்
இன்னார்க்குஎன்று முடிவு செய்யப்பட்ட
எழுதாதஒப்பந்தம் போட்டுவிடும் உறவுகளில்
என் வீடும் தப்பவில்லை

மாமன் மகனா? அத்தை மகனா ?
எனக்கான தேர்வு உரிமை
அதிகபட்சம் இவ்வளவே

கல்லூரி காதலும்
கரை சேராது என தெரிந்தே
மனதினுள் பூட்டிவைத்தேன்

ஆடம்பரமாய் திருமணம் முடித்து
அருந்ததி பார்த்ததாய் பொய்யும்
சொல்லி  பள்ளியறை நோக்கி
பயணமும் தொடங்கியது

அழகான பெண் ஒன்று , ஆஸ்திக்கு ஆண் ஒன்று
ஆசைக்கு தான் அணையும் உண்டோ ஒன்று ?!

மூன்றுமாதத்தில் தொடங்கிய விசாரிப்பு
மூழ்காமல் நானிருக்கேனா என ?
தான் மூச்சுவிட மறந்தாலும்
நான் மூர்ச்சை ஆகும் வரை
தொடரும் விசாரிப்பி

ஊர் வசைபாட
பெற்றோர் மனம் வாட

யார்க்குற்றம் என அறியாதும்
அது பெண் குற்றம் என கொண்டு
மருந்தாலும் மாறாத பேச்சால்
வசையடி  நான் கொண்டேன்

புழு, பூச்சியும் இவள் வயற்றில்
வாராது என ஊர் சொல்ல
புது மனைவி தேடும்
என் கணவன் என்ன நான் சொல்ல ...?

பெண்ணாய் பிறந்தது தான்
நான் செய்த தவறோ ?
இல்லை
கல்லூரி காதலை மனதில்
பூட்டிவைத்தது தவறோ ?
பார்க்காத அருந்ததியை
பார்த்ததை சொன்னது தான் தவறோ ?
நானறியேன்

ஆண்பிள்ளை பிறந்தால் ஒரு பெயர்
பெண்பிள்ளை பிறந்தால் இன்னொரு பெயர்
தேடி தேடி தேர்வு செய்து வைத்திருந்தேன்

ஆனால்
ஊரெல்லாம் எனக்கொரு பெயர்
மூன்றெழுதில்  வைத்தது நானறியேன்
"மலடி "