Wednesday, January 3, 2018

மன்னிப்பாயா ?

புரிந்தவள் தான் என்
காதலியாய் வர நினைத்திருந்தேன்

ஓர் பார்வையில் பிடித்தவளையும்
என்னை அவள் புரிந்துகொள்ள
காத்திருந்தேன்

சின்னதாய் வளர்ந்த பழக்கம்
தினமும் பேசுவதே  வழக்கம்
என மாறி

பகிர்ந்து கொண்ட எண்ணங்கள்தான்
ஏராளம் என எண்ணி கொண்டேன்

பரஸ்பரம் பிடித்த விஷயங்கள் தெரிந்ததும்
தெரிந்ததை மற்றவர் உணர அதை
வழக்கத்தில் கொண்டேன்

உடை மாற்றினேன்  , உணவு மாற்றினேன்
நிறம் மாறும் பஞ்சோந்தி போல்
அவளின் மனம் கவர மாறினேன்

என்னை புரிந்தவளாய் அவள்
மாறியதாய்  எண்ணி
திருமணமும் செய்து கொண்டேன்

வாழ்க்கையில் ஆசை மறைந்து
நிறம் மாறி , நிஜம் பேச எத்தனிக்கையில்
முள் குத்தியது நெஞ்சில்

ஒற்றை ரோஜா போல் இருந்தவள் -பேசிய
ஒற்றை வார்த்தையில்
இன்று மலர் மறைந்து முள் கொண்ட
செடி என ஆனாள்

கற்ற மொழி எல்லாம் கூனி குறுகும்
வகையில் வார்த்தைகள்
வீசப்பட்டன ஏவுகணையாய்

புறப்பட்டு சென்று விட்டாள் தன்
பிறந்த வீடு நோக்கி

தனிமையில் அமர்ந்திருக்க
தெளிந்த நீரோடை  போல் ஆனேன்
புரிந்தது எனக்கு
என்னை புரிந்தவளை
நான் புரிந்துகொள்ளவே இல்லை என

மணம் புரிந்தவளின்
மனம் புரிந்து கொண்டால்  -வாழ்வில்
மணம் வீசும் என அறிந்து
மண்டியிட்டு அவளிடம் கேட்கிறேன்
மன்னிப்பாயா ?

No comments: