Tuesday, January 2, 2018

எனக்கொரு பெயருண்டு (மலடி )

வீட்டில்
பெண்பிள்ளை பிறந்ததும்
இன்னார்க்குஎன்று முடிவு செய்யப்பட்ட
எழுதாதஒப்பந்தம் போட்டுவிடும் உறவுகளில்
என் வீடும் தப்பவில்லை

மாமன் மகனா? அத்தை மகனா ?
எனக்கான தேர்வு உரிமை
அதிகபட்சம் இவ்வளவே

கல்லூரி காதலும்
கரை சேராது என தெரிந்தே
மனதினுள் பூட்டிவைத்தேன்

ஆடம்பரமாய் திருமணம் முடித்து
அருந்ததி பார்த்ததாய் பொய்யும்
சொல்லி  பள்ளியறை நோக்கி
பயணமும் தொடங்கியது

அழகான பெண் ஒன்று , ஆஸ்திக்கு ஆண் ஒன்று
ஆசைக்கு தான் அணையும் உண்டோ ஒன்று ?!

மூன்றுமாதத்தில் தொடங்கிய விசாரிப்பு
மூழ்காமல் நானிருக்கேனா என ?
தான் மூச்சுவிட மறந்தாலும்
நான் மூர்ச்சை ஆகும் வரை
தொடரும் விசாரிப்பி

ஊர் வசைபாட
பெற்றோர் மனம் வாட

யார்க்குற்றம் என அறியாதும்
அது பெண் குற்றம் என கொண்டு
மருந்தாலும் மாறாத பேச்சால்
வசையடி  நான் கொண்டேன்

புழு, பூச்சியும் இவள் வயற்றில்
வாராது என ஊர் சொல்ல
புது மனைவி தேடும்
என் கணவன் என்ன நான் சொல்ல ...?

பெண்ணாய் பிறந்தது தான்
நான் செய்த தவறோ ?
இல்லை
கல்லூரி காதலை மனதில்
பூட்டிவைத்தது தவறோ ?
பார்க்காத அருந்ததியை
பார்த்ததை சொன்னது தான் தவறோ ?
நானறியேன்

ஆண்பிள்ளை பிறந்தால் ஒரு பெயர்
பெண்பிள்ளை பிறந்தால் இன்னொரு பெயர்
தேடி தேடி தேர்வு செய்து வைத்திருந்தேன்

ஆனால்
ஊரெல்லாம் எனக்கொரு பெயர்
மூன்றெழுதில்  வைத்தது நானறியேன்
"மலடி " 

No comments: