Friday, March 2, 2018

புறா



ஒரு நாள் இரவு
வீட்டில் எல்லாரும்
அமர்ந்து தொலைக்காட்சி
கண்டுகளித்திருந்த நேரம்

வாசலில் ஒரு ஒலி கேட்டு
சென்று பார்த்தால் -அங்கு
பூனையிடம் இருந்து
தன்னை காக்க போராடிய
ஒரு அடிபட்ட புறா

அதை பிடித்து சிறுது
என் அம்மாவின் மருந்து
இட்டு துணி எடுத்து கட்டிட்டாள்

வேடன் தான் அம்பெய்தானோ
இல்லை
ஆடவன் தான் கல் எறிந்தானோ

கேள்விகள்ஆயிரம் இருந்தும்
யாரிடம் தான் கேட்பது

அடுத்த நாள் முதல்
பயிரும், பொட்டுகடலையும்
அதற்கு உண்ண  கொடுப்பதே
என் வேலையாயிற்று

பழக பழக
அடுக்களைக்குள்ளும்
அதன் சாம்ராஜ்ஜியம்

பள்ளி முடிந்து வீடு வந்ததும்
பேசிக்கொண்டிருப்பேன்
அதை அடைத்து வைப்பதில்லை

ஒரு நாள் வீட்டில் அனைவரும்
வெளியில் சென்று திரும்புகையில்
காணவில்லை

எங்கு சென்றதோ ? என்ன ஆனதோ ?
கவலையில் கரைந்தோடின
பல நாட்கள்

இதோ இன்று மழை சாரலில்
ஒதுங்கிய ஒரு ஜோடி புறா
என் வீட்டு ஜன்னலில்

நீண்ட நாள் பிரிந்த
நண்பனை கண்டா உணர்வு

பொட்டுக்கடலை எடுக்க
ஓடுகிறேன் ..
அடுக்களைக்கு
.....


No comments: