Thursday, December 28, 2017

பட்டாம்பூச்சி



அழகான மாலை வேளையில்
பள்ளி முடிந்து வந்து வீட்டின்
முற்றத்தில் அமர்ந்த வேளையில்
என் மடியில் வந்தமர்ந்த
அழகான உயிர் நீ

வண்ணம் பல கொண்டிருக்கிறாய்
நீ பல மனங்கள்
கொள்ளை கொண்டிருக்கிறாய்

சிறகு விரித்து  நீ பறக்கையில்
உன் பின்னே பறக்குமே  என்
இரு கண்கள்

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும்
என் கைகளில் உன் வண்ணங்கள்

பேசாமலே என் மனதில்
ஒட்டிக்கொண்ட சிறு கள்ளி நீ

பட்டம் போல் என் மனது உன் பின்னால்
பறப்பதால் தானோ
உன் பெயர்
பட்டாம்பூச்சி


Tuesday, December 26, 2017

கவிதைக்கொரு கவிதை

தினமும்
கண் விழிக்கும் முன்னே 
விழித்துக்கொள்ளும் உன் நினைவு

உன்னை படைத்த பிரம்மன்
மயங்கிருப்பான்
உன்னை போல இன்னொருத்தி
படைக்க
தயங்கிருப்பான்

எனை கண்டதும் என்னவள்
கொள்ளும் நாணத்திற்கு இணையான
கவிதையும் உண்டோ
இப்புவியில்

புல்வெளியில் படரும் பனிநீர் போல
என் மனதில் படர்ந்திருக்கும்
உனக்கான காதல்

கண்ணில் மை வைத்தாய்
என்னை அதில் விழ வைத்தாய்

முத்தி போன என் காதலால்
உன் மூக்குத்தி கூட நட்சித்திரமாய்
தெரியுதடி

உன் கால் கொலுசின் ஓசைதான்
நான் கேட்ட சிம்பொனி

ஒரு முறை பார்த்தாலே
இதயம் துடிக்கிறது
பார்க்காமல் சென்றாலோ
இதயம் படபடக்கிறது

அழகே உனக்காக அழகாய் ஒரு
கவிதை எழுதி உன்னை படிக்க சொன்னேன்
கவிதைக்கே என் கவிதை பிடிக்குமோ

பணம்

பணம் கையில் இருந்தால் அந்தரத்தில்
தான் பறக்க தோன்றும் -அது அந்த
பணத்தின் குற்றமா ?
இல்லை பணம்வைத்தவனின்
குணத்தின் குற்றமா ?

சின்னஞ்சிறு வயதில் அப்பா தரும்
தினசெலவு  ஐந்து ரூபாயில்
இலந்தை பழவும் ,
பேர் சொன்னாலே எச்சில் ஊரும்
நெல்லிக்காயில்  உப்பும் சிறிது மிளகுபொடியுமிட்டு
நண்பர்களுடன் பகிர்ந்துண்ட நாட்கள்

"எப்போதோ கிடைக்கும் பலாக்காயை விட
இப்போது கிடைக்கும் களாக்காய் மேல் என
வாங்கி தின்ற புளிப்பும் இனிப்பும் கொண்ட
களாக்காய் "

மிச்சம் சிறுது சிறுது பிடித்து தம்பிக்கு பிடித்த
பால் ஐஸ் வாங்கி தந்த மன நிறைவு

இன்று பணம் நிறைய கொடுத்து
பீட்சாக்களும் பர்கர்களும் சாப்பிடுகையில்
வருவதில்லை

வீட்டில் அஞ்சறை பெட்டியிலும்
அஞ்சாறு சின்ன பெட்டியிலும்
அம்மா மறைத்து வைத்து
தேவையான சமயத்தில் வெளிவரும்
அலாவுதீன் பூதம் போல
காத்திட்ட அந்த பணத்திற்கு இணை

வங்கி லாக்கரிலும் ,
மெத்தைக்கு அடியிலும்
தண்ணீர் தொட்டியிலும் சேர்த்து வைத்திருக்கும்
பணம் ஈடாகுமோ ?

அளவாய் இருந்தால்
ஆனந்த களிப்பையும்
அதிகம் இருந்தால்
அச்சத்தில் தவிப்பையும்
தரும் இந்த பணம்

அது பணத்தின் குணமல்ல
அது வைத்திருக்கும் மனிதனின்
குணம்

அளவோடு வைத்திரு
வளமோடு வாழ்ந்திரு ...


Friday, December 22, 2017

அவள் !

நண்பனின் கல்யாணம் 
புறப்பட்டு அவன் வீடு சென்றேன் 
கல்யாண வீடு கேட்கவும் வேண்டுமோ 
ஆண்களும், பெண்களும் , குழந்தைகளும் 
அவரவர் வேலைகளில் மும்முரமாய் இருந்தனர் 

என்னை மட்டும் யாரோ ஒளிந்திருந்து 
பார்ப்பதாய்  உள்ளுணர்வு உணர்த்தியது 

சில ப்ரியதனங்களுக்கு பிறகு திரும்பி  
கண்டுவிட்டேன் அந்த இரு விழி அம்பை 
கண்டதும் ஏனோ உனக்கு நாணம்
ஓடி மறைந்து கொண்டாய் 

உன் தோழிகளிடத்தில் எதோ பேசி சிரிக்கிறாய் 
உன் சிரிப்பில் சிறை கொண்டது என் மனம் 

மிக சிறந்த இசை அன்று நான் கேட்ட 
உன் கால் கொலுசின் ஓசைதான் என்பேன் 

தைரியமிக்க நான் அன்று கோழையாகி போனேன் 
உன்னிடம் பேச முடியாமல்

தொலைபேசி எண் காகிதத்தில் எழுதி 
உன் தோழியிடம் கொடுத்து உ ன்னிடம் 
கொடுக்க சொன்னேன் 

வாங்கியதாய் தோழி சொன்னாள் அதன்பின் 
உன்னை பார்க்கவில்லை 

என் தொலைபேசி அழைக்கும் போதெல்லாம் 
ஆவலுடுன் எடுக்கிறேன் அது நீயாக இருப்பாயோ என 

அழைத்து ஒரு வார்த்தை சொல்லிவிடு 
காதல் விதை விதைத்து , கல்யாணம் எனும் 
அறுவடை செய்யவோம் 
காத்திருக்கிறேன் 

வானம் பார்த்து காத்திருக்கும் பயிர் போல 

நண்பா ,

சின்ன சின்னதாய் சேகரித்து
வளர்த்த நட்பு

பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதாமல்
நானிருக்க
எழுதியதை ஆசிரியரிடம்
காண்பிக்காமல் என்னோடு
முட்டிபோட்டு துணை நின்றவன்

உணவு இடைவேளையில்
இரு வீட்டு  உணவையும் ஒன்றாக்கி
என்னோடு பகிர்ந்துண்டவன்

விளையாட்டாய் செய்யும்
குறும்புக்கெல்லாம் திட்டம் தீட்டி
என்னோடு செயல்வடிவம் தந்தவன்

ஜாதி, மதம், பேதமெல்லாம்
கடந்து என்றும் என்னுடன்
துணை நின்றவன்

தொலைபேசியும் , கணினியும்
எட்டா கனியாய் இருந்த காலத்தில்
என்றும் என்னுடன் இருந்தவன்

பெற்றோருக்கு வேலை மாற்றலாகி
பள்ளியும் நீ விட்டு ஏதோ ஒரு ஊருக்கு
நீ சென்றதாய் நினைவு

இன்று பள்ளியில் படித்த பாடத்தை விட
பள்ளியில் உன்னுடன் கழித்த நாட்கள்
தான் என்றும் என் நினைவில்

தொலைதூரம் நீ இருந்தாலும்
நண்பா ,
என்றும் உன் நினைவுகள்
என் அருகில் இருக்கும்
மலரும் நினைவுகளாய் ..


Thursday, December 21, 2017

இயற்கையாய் !

என் வீட்டு பக்கத்தில் இருந்தது
மரம் இரண்டு
பேர் தெரியா மரம் ஒன்று
மாமரம் என்ற பேர் கொண்ட மற்றொன்று

யார் விதைத்த விதையில் மலர்ந்ததென்று
யாருக்கும் அறியேன்

வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்
பள்ளி சென்று திரும்புகையில்  யாரையோ
தொலைத்து தேடும் குயிலின் ஓசை
எனக்கு ஒரு வரவேற்பு கவிதை

பேர் தெரியா மரத்தில் இருந்தது
என் தந்தை கட்டி தந்த ஊஞ்சல்
தோழர்களுடன் கொஞ்சி அதில் விளையாடிய
நாட்கள் இன்னும் நிற்காமல் ஆடுகிறது
என் நெஞ்சில்

அதனால் அதற்கு பெயர் வைத்தேன்  ஊஞ்சல்மரம்,
இதுவும் காய் காய்க்கும், பழுக்கும் , தரையில் விழுந்து
அழுகும் தீண்டுவார் யாருமிலர்

பக்கத்தில் மாமரம் , இலை வேண்டி பலர் , காய் வேண்டி பலர்
கனி வேண்டி பலர் காத்திருக்கலாயினர்

ஓர் மாலை தொலைக்காட்சியில் எல்லை தாண்டியதாய்
சுடபட்ட மீனவர் செய்தி

ஆனால் இந்த மாமரம் தன் கிளையை பரப்பிஇருந்தது
ஊஞ்சல் மரத்தின் மேல்.  அதற்காய்  சண்டையிட்டதாய்
நினைவில்லை

இரவில் சூறாவளி காற்று வீசியது பயந்து அம்மாவின்
அரவணைப்பில் உறங்கி காலையில் கண் விழித்து பார்க்கையில்
 ஊஞ்சல் மரம் வேருடன் தரையில் இருந்தும்
அதன் கிளைகள் மாமரத்தை விழாமல் தாங்கிருந்தது ..

வெள்ளம் வந்தபோது நம்மை பேர் தெரியா
அன்பு உள்ளங்கள் காத்தது போல

மரம் இருந்த சுவடு அகற்றப்பட்டது சில நாட்களில்
அதே இடத்தில் மீண்டும் துளிர்விட்டது  செடி
இயற்கை அழித்ததை இயற்கை உருவாக்குகிறது

மனிதா ,இயற்கையை இயற்கை அழிக்கும் நீ
அதை உருவாக்குவது எப்போது ?

Wednesday, December 20, 2017

தனிமை

தனிமை உணர தொடங்கிய நேரம்
கண்ணில் கண்ணீர் ஊறிய நேரம்

வார்த்தை எல்லாம் ஊமையாகிய வேளை
என் இதயம் பிரிந்து சென்ற வேளை

காதலி  பிரிந்தவலி தாங்கிக்கொள்வேன்
ஆனால்
தோழி, நீ பிரிந்தவலி தாங்கும் சக்தியிலையடி

மூன்றாமன் நம் நட்பின் குறுக்கே வந்தால்
குழி தோண்டி மூடி விட முடியுமோ நட்பை ?

நம் உதடுகள் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளாமல்
இருக்கலாம்
ஆனால்
என்றும் உன் நினைவுகள் என்னிடம்
பேசிக்கொண்டுதானிருக்கின்றது

உனை பிரிந்து நான் வாடுவதை கண்டு
சிலர் சொல்கிறார்கள் நமக்குள் காதல் இருந்ததாம்
தோழி எப்படி புரியவைப்பேன்
நம் நட்பின் மேல் நமக்கிருந்த காதலை ?!

நீ மீண்டும் வருவாய் என என்றும் எட்டி பார்க்கும்
என் கண்களின் ஓரத்தில்
கண்ணீர்த்துளி ...

Friday, December 15, 2017

கொய்து விடு

காலையில் பூத்த தாமரையே
எனை  பார்த்ததும் ஆனதென்ன செந்தாமரையே

இரவில் மலரும் அல்லி பூ  நீ,
உன்னை நினைத்தாலே மனதில் ஏனோ தித்திப்பு

அன்றளர்ந்த தாமரை போல உன் சிரிப்புக்கு
சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பே ஈடு

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
பூக்குமாம் குறிஞ்சி
உன்னுடன் இருக்கையில் என் மனமோ
குற்றால நீர்வீழ்ச்சி

நிலவு உன்னை கண்டதும் வெட்கம் கொண்டதோ
அதனால் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆனதோ

உன்னை வானவில் என்றேன்
அதனால் தானோ விரைவில் மறைந்து என்னை
மறந்து போனாய்

நம்மை எவன் பிரிந்திருந்தாலும்
அந்த எமனே பிரிந்திருந்தாலும்
நான் கவலை கொண்டிருக்க மாட்டேன்

ஊமை கண்ட கனவு போல்
யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றேன்

மழை கானா பயிர் போல தவிக்கின்றேன்
ஓகி புயல் போலாயினும் என்னை
மொத்தமாய் கொய்து விடு

காதல் ..

உலகமறியா வயதில்
உலகமாய் இருந்த
தாயின் மேல்
காதல்

தவிழ தொடங்கியதும்
காணும் பொருளின்மேல் எல்லாம்
காதல்

நடக்க தொடங்கியதும் 
எட்டும் பொருளுக்கெல்லாம் 
காதல் 

பள்ளி பருவத்தில் 
பென்சில் தந்த பள்ளித்தோழியின் மேல் 
காதல் 

விடலை பருவத்தில்
விளையாட்டாய் 
காதல் 

கல்லூரி வாழ்க்கையில் 
கானால் நீராய் ஒரு 
காதல் 

வேலைக்கு  சேர்ந்ததும் 
பணத்தின் மேல் 
காதல் 

கல்யாண வயதில் 
மனைவியின் மேல் 
காதல் 

குழந்தை பிறந்ததும் 
பிள்ளையின் மேல் 
காதல் 

பிள்ளையின் படிப்பு 
வேலை, திருமணம் 
எதிலும் பிடிப்பில்லாமல்
எல்லாவற்றின் மேலும்
பிடிப்பில்லாமல் ஒரு 
காதல்

சாய்வு  நாற்காலியில்
சாய்ந்து ஒட்காருகையில்
காலனுக்கு வருமோ என்மீது
காதல் ..

Monday, December 11, 2017

துணை உண்டோ !?


இயற்கைக்கு என்ன கோபமோ
அவ்வப்போது சீறி கொல்கிறது  மனிதனை

ஏழை விவசாயியும், மீனவனும்
இயற்கையே  உன்னை நம்பி இருப்பவர்கள்
உன்னை தொழுபவர்கள்

தினம் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது அவன் குடும்பம்
ஒருவேலை உணவு உண்ணவே

கடலுக்கு சென்ற கணவன் வீடு திருப்புவானோ என
உறக்கம் தொலைத்து காத்திருப்பாள் அவன் வரவை
எதிர்நோக்கி கரையில் அவன் மனைவி

சீற்றம் மிக்க கடல் அலை அவனை உள்ளிழுத்து விடுமோ
இல்லை
தமிழ் மீனவன் தானே என கடலில் எல்லை வகுத்த
மிருக்கத்தின் துப்பாக்கிக்கு இறையாவானோ ?

நித்தம் நித்தம் இயற்கையை நம்பி வாழ்பவன் அவன்
செயற்கையாய் பல தடைகள் உருவாக்குபவர் மத்தியில்
இயற்கையே உனக்கும் ஏன் அவன் மேல் கோபம்

"ஓகி"  புயலாய் வந்து ஓங்கி அடித்திருக்கிறாய்
உன்னால் எப்போதும் அதிகம் பாதிக்கபடுவது
அவர்களே

மீனவர்களின் உயிரை விட பெரியது இடைதேர்தல்
என வாக்காளர் பெயர் பட்டியல் சரி பார்க்க செல்லும்
அரசியல்வாதிகள் இருக்கும் இந்நாட்டில்

இறந்தவர்களின் பெயர் பட்டியலில் தன் உறவுகளின்
பெயர் இருக்கா என பார்க்கும் அவலம் மீனவனுக்கு

இதோ இந்தஇன்னல்களுக்கிடையேயும் பணம்
பார்க்க நினைக்கும் ஈன பிறவிகளும் உண்டு

அதே சமயம் உதவ ஜாதி, மத, இன  வேறுபாடின்றி
உதவிகரம் நீட்டிய நல் உள்ளங்களும் உண்டு மறுப்பதிற்கில்லை

முல்லைக்கு தேர் தந்தவன் பாரி
மயிலுக்கு போர்வை தந்தவன் பேகன் போல
இன்னும் இடர் வந்தால் உதவும் பெயர் சொல்லா வள்ளல்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்

பல மாதமாக தலைவிதியை எண்ணி தலைநகரில்
போராடும் ஏழை விவசாயின் செய்திகூட
100 வது நாள் ஓடும் சினிமாவின் கேளிக்கை செய்தி
போலவே கடக்கிறது

400 பேரின் மரணமும் நம்மை ஒரு நிமிட செய்தியாகவே
கடப்பது வேதனை.

இயற்கையை செயற்கையால் வெல்ல நினைக்கும்
மனிதனுக்கு இயற்கை அவ்வப்போது சினம் கொண்டு
பாடம் எடுக்கிறது

மண்ணை தெய்வமாக நினைக்கும் விவசாயியையும்
கடலை தெய்வமாக நினைக்கும் மீனவனையும்
காக்க இயற்கையே உன்னை விட
துணை உண்டோ !!!

விளையாட்டு

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

அழகாய் கூடி விளையாட சொன்னவன்
நம் மகாகவி சுப்ரமணிய பாரதியார்

விளையாடிய பருவங்கள் 
மனதில் அழியாத சின்னங்கள் 

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய 
நாட்கள்

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி
விதம் விதமாய் விளையாட்டுக்கள்
ஆடிய நாட்கள்

"மண் குழப்பி வீடு கட்டி" விளையாடி 
அதில் நாம் நம் உறவினர்களுடன் வசிக்க 
சொல்லி கொடுத்த விளையாட்டுக்கள் 

வாழ்வில் பல ஏற்றம் இரக்கம் இருக்கும் என 
சொல்லித்தந்த "பரமபதம்" விளையாட்டு 

பெண்கள் விளையாட சீர்வரிசையிலும் 
இடம் பிடித்த முன்னோர் கொடுத்த 
"பல்லாங்குழி" விளையாட்டு

சைக்கிளில் கால் எட்டாத போதும்
"குரங்கு பெடல்" போட்டு ஒட்டிய நாட்கள்

வாழ்வில் தடைகள் வந்தால் தகர்த்தெறிய
கற்றுதந்த நம் "தாயம்" விளையாட்டு

மூச்சு பயிற்சியும் உடல் ஆரோக்கியதையும்
சொல்லி தந்த "சடுகுடு" விளையாட்டு

வீரத்தையும் விலங்கின் மேல் தான் கொண்ட
பாசத்தையும் உலகுக்கு எடுத்து சொன்ன
"ஜல்லிக்கட்டு" விளையாட்டு

எத்தனையெத்தனை விளையாட்டுக்கள்
முன்னோர் விட்டு சென்ற பொக்கிஷங்கள்

உடலும், மனதும் ஆரோக்கியமாய் இருக்க
விளையாடிய விளையாட்டுக்கள்
இன்றைய சந்ததியும் விளையாடுகிறது
தன் கைபேசியிலும், கணினியிலும்,

மாற்றுங்கள் வீதியில் விளையாட
கற்றுத்தாருங்கள் ஆரோக்கியமான
சந்ததிகள் உருவாக ...

என் ஒரு தலை காதல்

நட்பாய் இருக்க தான் விரும்புகிறேன்
நட்பில் இருக்க தான் விரும்புகிறேன்

ஆசை என்னை அடக்க நோகிறேன்
காதல் என்னை நசுக்க வாடுகிறேன்

நட்பில் காதல் பூ பூக்க
தண்ணீர் என்று ஊற்றினேனோ ?!
காதல் சொல்லி நட்பை இன்று
நான் இழப்பேனோ ?!

புரிந்துணர்வது நமக்குள் உண்டு தான்
இந்த காதல் உணர்வை புரியவைக்க
தமிழில் வார்த்தை இன்றி தவிக்கிறேன் நான்


எத்தனையோ கதைகள் மணிக்கணக்கில்
பேசியிருக்கிறேன் உன்னிடம் நான் ...
இந்த ஒற்றை சொல் சொல்ல
தவிக்கிறேன் நான் ....

என்
மனதுக்குள் இந்த காதல் சாகுமோ
இல்லை
உன்
மனதுக்குள் வேரூன்றி முளைக்குமோ ?!

உன்னை தீண்டிய காற்று
என்னையும் தீண்டி செல்கிறது என்ற
நினைப்பில்  முடியுமோ
என் ஒரு தலை காதல்

Sunday, December 10, 2017

முதிர்கன்னி

எல்லோர் போலவும் தான் நான் பிறந்தேன்
தாயின் வயிற்றில் பத்து மாதம் கிடந்தது

அவளை அதிகம் துன்புறுத்தாமல் சுகமாய்
சுகபிரசவமாய் தான் பிறந்தேன்

தம்பியுடனும், தங்கையுடனும்
சிரித்து , பேசி, படித்து , விளையாடி
சின்ன சின்ன சண்டைகளிட்டு
கழிந்தது என் சிறுவயது பருவம்

கன்னி வயதை எட்டியவுடன்
எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள்
பறந்தது,

காதலன் குதிரை மீதமர்ந்து
என்னை கவர்ந்து செல்வதாய்
கனவும் வந்தது

கல்லூரியில் என்னுடன் அன்பாய் பழகியவன்
காதலிப்பதாய் சொன்னவுடன்  வெட்கி
தலைகுனிந்து வீட்டுக்குஓடி வந்தேன்

என் நாணம் எல்லாம் என் தலையணை அறியும்

அவனுடன் பேசி பேசி கதைகள் அனைத்தும்
தீர்ந்ததோ நானறியேன்

பேச்சை நிறுத்திவிட்டான்  என் கல்லூரி காதல்
கானல் நீர் போல ஆனது

பெண் பார்க்க தொடங்கும் நேரம் என்
கண்களில் கண்ணீரும் வற்றியிருந்தது

பெற்றோர்  சொல்லும் மாப்பிள்ளை
வந்து கரம் பிடிக்க காத்திருந்தேன்

பெண் பார்க்க வர சொன்னேன் பிடித்ததாய் வரன் சொல்ல
நாணம் வர மறுத்தது
சென்றவர்கள் தோஷம் ஒன்றுண்டு என்று சொல்ல போக
பிடித்தவளும் பிடிக்காமல் போன மர்மமென்னவோ நானறியேன்

தடங்கல்கள் பல வந்ததும் தங்கைக்கும் தடையாவேனோ ?!
என எண்ணி அவளுக்கு மணமுடிக்கப்பட்டது

அக்கா என அழைத்தவனும் வாழ்க்கையை எனக்காக
தொலைப்பது நியாயமாகுமோ ?! மணமுடிந்தது அவனுக்கும்

என்னதான் சுகபிரசவத்தில் பெற்றாலும்
என் தாயின் வாழ்வில் என் நினைப்பில் நோயுற்றாள்

எப்போது எப்போது அவன் வருவானோ
என காத்திருக்க  எட்டி பாத்தது
காதோரம் நரை

பெட்றோர் மனம்வாட ,உற்றோர் வசைபாட
விருந்துக்கும் வர வேண்டாம் என ஒதுக்க
நான் செய்த பாவமென்னவோ ?

ராமன் வர வேண்டவில்லை
ராவணன் வந்தால் மறுப்பில்லை

பற்றி எரியும் ஆசைகளில் நீர் ஊற்றி
கொண்டிருக்கிறேன்

தாலி யில் என் பேர் எழுத மறந்தவன்
யாரோ !?

சுகமாய் பிறந்தவள் வாழ்வின் சுகம்
மறந்து காத்திருக்கிறேன்

Sunday, December 3, 2017

இயற்கையின் இசை !

இசையோடு பிறக்கிறோம்
இசையோடு வளருகிறோம்
இசையோடு பயணிக்கிறோம்
மரணத்துக்கு பிறகும் இசை இசைத்துக்கொண்டிருக்கிறது

என் சந்தோஷமும் துக்கமும்
என்னுடன் பகிர்ந்துகொள்வது
என் இசை

மறந்தும் உன்னை கேட்காமல்
நான் இருப்பதில்லை
எங்கும் நீ இருக்கிறாய்

விடியலை நோக்கி புறப்பட கூவும்
சேவலின் ஒலியும்
இசைதான்

இருப்பதாய் மற்றவர்களுடன்
பகிர்ந்துண்ண கரையும்
காக்கையின் ஒலியும்
இசைதான்

பிரிந்தவரை எண்ணி எண்ணி வாடி
பாடும் குயிலின் ஏக்க ஒலியும்
இசைதான்

அழகான மாலையில்
நளினமாடி வீசும் மரங்களின்
குளிர்காற்றும்
இசைதான்

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ரசிக்க
அடை மழையும் இசைதான்

நதிநீரின் அசைவுகளிலும்
கடக்கிறது மனதில் அமைதியாய்
இசை

ஜாதி, மதம், இனம், மொழி தாண்டி
நம்மை ரசிக்க வைப்பது
இசை

உலகில்
இயற்கையை விட சிறந்த இசையை
இசைப்பவனும் உண்டோ ?

இயற்கையை ரசிப்போம்
இசையை ரசிப்போம்
வா தோழா !!