Saturday, November 10, 2018

வாழவிடு ...





இதோ கொடிய இரவின் மடியில்
எறிந்துகொண்டிருக்கிறது
என் உடன்பிறவா சகோதர சகோதரிகளின்
உடல்

ஆணவத்தில் ஆடும் ஒரு சில
அதிகாரவர்க்கத்தின் அட்டூழியம்
அடக்கத்தான் யாருமில்லை

பூக்கள் சூழ்ந்து மனம் வீசிக்கொண்டிருந்த
எங்கள் தோட்டம் இன்று பிணவாடையில்
குளித்துக்கொண்டிருக்கிறது

பல நாள் ஊண் உறக்கமின்றி
எங்கள் மண் மேலே,
சிறுக சிறுக சேமித்து ஆசையாய்
என் தந்தை எங்களுக்காய்
கட்டிய வீட்டினுள் வசிக்க முடியாமல்
மண் தோண்டி மண்ணுக்கடியில்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

இங்கு
குழந்தைகளுக்கு விளையாட
எரியாமல் போன உறவுகளின்
கை கால்கள் மட்டும் மிச்சம்

இது விஞ்ஞானத்தின் வளர்ச்சியா ?
மானங்கெட்ட சில மனிதர்களின் 
சூழ்ச்சியா ?

இயற்கையை அழித்து 

விவசாயத்தை அழித்து 
மனிதர்களை அழித்து 
பிணத்தையா தின்ன போகிறீர்கள் ?!

பச்சிளம் குழந்தையும் 

போர் என கொள்ளும் 
மிருகங்களே !?

என் உறவுகளில் 

குண்டுகள் பாய்ந்தபோதும் 
உன் குருதியின் வண்ணம்தனை 
காணவில்லையோ ?

எப்பொழுதேனும் பறக்கும்
விமானத்தை அதிசயமாய்
அண்ணாந்து பார்த்த காலம்போய்

இன்று
அனுதினமும் வீட்டின்மேல்
பறக்கும் போர்விமானத்தை
அச்சத்துடன் பார்க்கிறோம்
என்று எங்கள் மேல் குண்டுகளை
பாய்ச்சுமோ என..

குமுறல்களை முறையிட
கோவிலுக்கு சென்றால்
சிலையை காணவில்லை
தேவாலயத்தில் இருந்தவரையும்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
பள்ளிவாசலும் திறக்கப்படாமல் இருக்க 
எங்குதான் செல்ல...

காண்போரிடம் எல்லாம் 

பகிர்ந்து கொள்ள ரணங்கள் 
மட்டும்நிரம்பிய  எங்கள் உள்ளம் 

என் தாய்நாடு உயிரினும் பெரிதென்று 

வேறெங்கும் ஓடாமல் 
தாய்மண்ணின் ம(அ)டியில் 
மரணம் தழுவும் வரை வாழுவோம் 

உன் குருதி தாகம் தீருமாயின்

கொஞ்சம் எங்களையும்
வாழவிடு ...

No comments: