Monday, July 8, 2019

சிக்குண்டு தான் கிடக்கிறது என் இதயம்

இரு இதயங்கள்
சிக்குண்டு
கிடப்பதே
காதல்
எனில்

உன் சாயலை
உணர்த்தும் எதுவும்
உன்னிடம் சிக்குண்ட
காதலை
உணர்த்திக்கொண்டிருக்கும்
எனக்கு

சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
சிக்குண்ட காரணம்
தெரியுமுன்
பிரிவென்பது
உயிர்பிரியும் வலி தரும்

காதலிக்கையில்
உன் மௌனம் கூட
புரிந்தது எனக்கு
இன்றோ

இனி
பேசிப்பயனில்லை என்று
மௌனமான உன்
நிசப்தத்தின் அர்த்தம்
தெரியாமல்
திக்கு தெரியாமல்
அலைகிறேன்

இவ்வளவு தான்
காதல் என்று
உணர்ந்தாயோ

இல்லை
இது காதல் அல்ல
என்று
உணர்ந்தாயோ

அன்பின்
தீவிரத்தை
உணர்த்திவிட்டு
செல்கிறாய்

நடுநிசியில்
உறக்கம்
கலைகிறேன்
பின்பு
கனவில் உன்னை
தொலைத்ததாய்
வருந்துகிறேன்
விழித்ததை எண்ணி

எத்தனை யோசித்தும்
பிடிபடாத ரகசியம்
நான் கண்டது
கனவா ?
இல்லை
உன்னை நினைத்து
வாழும் வாழ்க்கை
தான் கனவா?


எதுவாயினும்
உன்னிடம்
சிக்குண்டு
தான்
கிடக்கிறது
என் இதயம் !!!

Little Heart

சின்னஞ்சிறு வயது
மனதில்
எண்ணிலடங்கா ஆசை

எப்படி கேட்பது
கேட்டால் சம்மதம்
கிடைக்குமோ

இதயம்
வேகமாய்
படபட
என்று அடிக்கிறது

வானில் தெரியும்
மேகங்கள் எல்லாம்
இதயம் வடிவில்
தெரிகிறது
இது மனப்பிழையா
இல்லை
ஆசையின் மோகமோ

பார்க்கும் திசை எங்கும்
இதயம் வடிவில்
தெரிகிறது
சாவிக்கொத்து முதல்
சாய்ந்து அமர்ந்திருக்கும்
நாற்காலி வரை

பார்ப்பதெல்லாம்
மஞ்சளாய் தெரியுமாம்
மஞ்சல்காமாலை
நோய் உள்ளவனுக்கு

இதுவும் ஒரு வகை நோயோ ?

இன்று
எப்படியும் கேட்டுவிட வேண்டும்
அடுக்களையில் வேலையாய்
இருந்த
அம்மாவிடம் கெஞ்சி சொன்னேன்
விஷயத்தை

சரி
அப்பாவிடம் சொல்லாதே
என்று
கடுகு டப்பாவில் இருந்து
எடுத்து தந்தாள் 10 ரூபாய்

குஷியாய்
ஓடினேன்
அருகில் இருக்கும்
அண்ணாச்சி கடைக்கு

நெடுநாள்
ஆசை கொண்ட
இதய வடிவ
"Little Hearts" biscuit
வாங்க

Wednesday, July 3, 2019

மட்டைப்பந்து !



இந்த நாள் எப்போ வருமோ
என்று தான் காத்திருந்தேன்

இன்று
வீட்டில் அம்மா இல்லை
விருப்பம் போல
மட்டைப்பந்து
விளையாடலாம்

யோசிக்கும்போதே
ஆனந்தம் ஒட்டிக்கொள்கிறது

பக்கத்துக்கு வீட்டிலிருக்கும்
என் நண்பனையும்
அழைத்தேன்

ஒரு அணி தேர்வு செய்து
டாஸ் போடப்பட்டது
அதிர்ஷ்டமான நாள்
நான் வென்றேன்

முதலில்
நாங்கள் விளையாடுவதாய்
தேர்வு செய்து
நானே முதலில் இறங்குவதாய்
முடிவு செய்தேன்

எவ்வளவு நாட்கள்
ஆயிற்று விளையாடி
இந்த அம்மா ஏனோ
என்னை விளையாடவே
விடமாட்டேன்கிறாள்

சரி
மட்டையை பிடித்து
நிற்க
எதிரணியின் பந்துவீச்சாளர்
ஓடி வருகிறார் முதல் பந்தை எறிய

விளையாடி ரொம்ப
நாட்களாகிவிட்டதால்
கைகள் நடுங்கியது
ரன் அடிக்கமுடியவில்லை

சுற்றமும் என்னையே
பார்ப்பதாய்
உணர்ந்தேன்

ஐந்து பந்தும்
வீணடித்தேன்
கடைசி பந்து
வேகமாய் எறியபட்ட பந்து
என்னைநோக்கி வர

மட்டையை சுழற்றினேன்
பந்து மேலே சென்றது
4 ஆ 6 ஆ
இல்லை
எல்லை கோட்டை
நெருங்கும் நேரம்
பிடித்து விடுவானோ
குழப்பத்தில் இருக்க

முதுகில் "டப் " என்று
ஒரு அடி
பின்னால் திரும்பினால்
நிற்பது
என் அம்மா

" டேய் எத்தனை முறை
சொல்லிருக்கேன்
என் தொலைபேசி எடுத்து
விளையாடாதே என்று"
நீயாவது புத்திமதி சொல்லக்கூடாதா
உன் நண்பனுக்கு என்று
நண்பனுக்கும்  சேர்ந்தே கிடைத்தது
என் அம்மாவின் திட்டு

இனி எப்போ வருமோ
இது போல ஒரு நாள்
காத்திருக்கிறேன் 

Friday, June 28, 2019

மனிதனின் நிறம்


மனிதனின் நிறம்
என்றும் தண்ணீரை போல

இருக்கும் இடத்திரிக்கேற்ப
தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி
போல

சூழ்நிலைக்கேற்ப
தன் குணத்தை
மாற்றிக்கொள்வான்

தோலின் நிறம்
அவன் சுபாவத்தை
பிரதிபலிப்பதில்லை
இருந்தும்

வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்லமாட்டான்
என காலம் காலமாய்
நம்பி
பொய் பரப்பி வருகின்றனர்

கண் உள்வாங்கும்
ஒளியினூடே கடத்த படும்
நிறம்
சில நேரம் காட்சிப்பிழை
ஆகலாம்

மரபியல் சுழற்சியில்
பாரம்பரிய மாற்றத்தில்
உண்டாகும் நிறம்கொண்டு
எடைபோடாதே

பழக
தொடங்குகையில்
தோன்றும் நிறம்
பழகிய பின்
நிறமறியதாய் தோன்றலாம்

மனித
மனங்களுக்குள்
இருக்கும்
மிருகமும், மனிதமும்
அவனை
வெளிப்படுத்தும்
அகோரமாகவும்
அழகாகவும்

நிர்வாணமான
குழந்தையை
காணும் கண் கொண்டு
பார்க்க பழகி கொள்
அது உன்னில் கடத்துவது
சஞ்சலமற்ற
புன்னகை மட்டுமே

வெளி நிறம்
ஒரு மாயை
உள் நிறம் காண்
மகிழ்வாய்
வாழ்வாய்



மனதின் தவிப்பு



கண்ணும்  கண்ணும் கண்டதும்
காதல் மொழி கற்று கொள்ள
தொடங்கினேன்

கைகளில் கைகள் கோர்த்த
சமயம் காதல் புரிய
தொடங்கினேன்

பரஸ்பரம்
நிறமோ
மதமோ
வித்தியாசப்படுத்தி பார்க்கும்
திராணியின்றி
காதல் வளர்க்க
தொடங்கினேன்

உன்னை காணா
ஒவ்வொரு நொடியும்
நீ அழைப்பதாய்
தலைக்குள்
ஒரு குரல்

மனதின்
தவிப்பு
யாரிடம் சொல்ல

கண்ணுக்குள்
எப்போதும்
உன் உருவம்
புன்னகை
பூத்திடும்

பிரியாத
உன்னுடன்
பிரியத்துடன்
இவ்வுலகை
சுற்றி
ரசித்திட வேண்டும்

இருள் மெல்ல மெல்ல கண்ணுக்கு
பழகி காட்சி விரிவது போல
ஏதோ ஒரு இசை மெல்ல மெல்ல
தொடங்கி அருகில் சத்தமாய்
கேட்க தொடங்கும் நேரம்

உன் கண்களில்

தெரிந்த மிரட்சியில்
பதற்றமடைந்து
கண் விழித்து
பார்க்கிறேன்

தொலைபேசி

அழைப்பு
தொடுதிரையில்
சிரித்தபடி
உன்
புகைப்படம்

சுரீரென
உரைத்தது
உன் பிரிவு
வலி தாங்க
பழகுவதே
வாழ்க்கையின்
மிகசிறந்த
பாடம்




                                               ஒற்றை ஆலமரம்

யார் விதைத்த விதையில்
உதித்ததோ நானறியேன்
ஆனால்
சுட்டெரிக்கும் சூரியனின்
வெயிலில் இருந்து
தினம் எங்களை
காப்பாற்றும்

குடும்ப அட்டையில்
சேர்க்காத
குடும்பத்து உறுப்பினர் போல
வாழ்வியலில்
விசாலமாய்
கலந்திருக்கும்

விழுதுகள் பரப்பி
வேறூன்றி
படர்ந்திருக்கும்
அரும்மருந்தாய்
தன்னையே அர்பணித்திருக்கும்

பஞ்சாயத்து பல
கண்டிருக்கும்
சந்தைகள் பல
கூடியிருக்கும்
வாலிப வயதினரின்
ரகசியம் பல
தன்னுள்  கொண்டிருக்கும்

தலைமுறை
பல கண்டிருக்கும்
தன்னுள் பல
பேர் அறியா
ஜீவராசிக்களுக்கும்
அடைக்கலம்
கொடுத்திருக்கும்

ஊஞ்சலாட
விழுதுகள்
கொடுத்த மரம்
மரங்கொத்தி
கொத்துகையில்
வலிக்கவில்லை

மனிதா,

வெட்ட
நீ
கோடாளி கொண்டு
வருகையில்
ஏனோ
விழுதுகள்
மரத்தின்
கண்ணீர்  துளிகள்
போல தெரிகிறது

வெயிலில் நின்று
வெட்டுகையில்
இளைப்பாற
எங்கு செல்வாய் நீ
யோசித்ததுண்டா  ?

வரும்
சந்ததிக்கு
என்ன சொல்வேன்

பலன் பல தந்த
மரத்தை அழித்தோம்
சாலை எனும் ஒரு
பலன் பெற
என்றா ?!

மரத்தின்
அருமை தெரியாமல்
சாலையின் பெருமை
சொல்லும்
மூடனிடம்
என்ன சொல்ல

மழை நீர்
வேண்டினும்
வெட்டாமலிரு

நீங்காத
நினைவுகள்
தந்து
எங்கள் ஊருக்கு
என்றும்
முகவரியாய்
இருக்கும்

ஒற்றை ஆலமரம் ..

வாழ்க்கை


வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது

நம்முள்
ஒட்டிக்கொள்ளும்
உறவாய் உயிராய்
சில மனிதர்கள்

சிலரோ
நம்முள் ஒட்டிக்கொண்டிருக்கும்
உயிரை ,
கரும்பு சாறு
பிழியும் இயந்திரத்தில்
சிக்குண்டு வெளியே வரும்
சக்கை போல்  பிழிந்து எடுக்கவே
உடன் இருப்பார்
அவருக்கொரு
பெயருண்டு
முதலாளி

ஒரு சான் வாயிருக்காகவும்
சுயம் காப்பாற்றிக்கொள்ளவும்
வளைந்து  வளைந்து
கொடுத்து
முதுகெலும்பும்
வளைந்தே போயிற்று
நிமிர்ந்து நிற்க திராணியின்றி

சில நேரம் தோன்றும்
கோபமும் எரிச்சலும்,
பற்றி எரியும்
உணர்வின் கொந்தளிப்புகளும்
என்னை நம்பி வீட்டிலுருக்கும்
உறவுகளின் பசியின் கொடுமையை
எண்ணிப்பார்க்கையில்
அணைந்துவிடுகிறது
நீரூற்றாமல்

நிமிடத்தில்
வீழ்ந்து
துகள் துகளாய்
உடைந்து போய்விடும்
வாழ்விது என தெரிந்தும்

அடக்குமுறையின்
அடையாளங்கள்
அழிந்து போகும்வரை

வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது

Monday, April 8, 2019

கருப்பு என் நிறமிது !

வாங்கி வந்த வரமல்ல இது
ஜனனத்தில் வந்த வண்ணமிது

வண்ணங்களை ரசிக்க
கற்று கொடுத்தோர்
இவ்வண்ணத்தை வெறுக்க
கற்றுக்கொடுத்ததென்ன

துன்பத்தின் நிறமல்ல இது
என்னை போன்றோரின்
மன துக்கத்தை மறைக்கும்
நிறமிது

அப்பழுக்கற்ற என் மனதின்
நிறமல்ல இது
ஆனால் 
மனதில் ஐயப்பனை தரிசிக்க அணிந்த 
என் உடையின் நிறமிது

எல்லாரும் பயப்படும்
இருளல்ல என் நிறம்
வெளிச்சமுண்டு மறவாதே
என உணர்த்தும் நிறமிது

நட்பு கூட
நிறம்மாறி பிரியலாம்
ஆனால்
என்றும் பிரியாமல்
நிழல் போல
உன் உடன்வரும்
நிறமிது

என் மனதின் நிறமல்ல  இது
என் இனத்தின் நிறமிது


Saturday, March 30, 2019

இதுவும் கடந்து போகும் !

வாய்ப்பு கிடைத்தால்
மனிதன் மிருகமாவான்
என அறியாமல்
வாழ்ந்து வந்த
வாழ்வு

முகமூடியிட்டு
நல்லவனென
சுற்றித்திருந்திருந்த
வேளையில்
திருடனுக்கு தேள்
கொட்டியதுபோல்
நிகழ்வுகள்

தற்காலிக உணர்வின்
கொந்தளிப்பில் 
இழந்தவைகளின்
கணக்கை ஆராய்ந்து
அழுது் புலம்பாமல்

பொய்யான பிம்பத்தை
இறுக பற்றிக்கொண்டு
தன்னிலை 
மறந்தவேளையில்
செய்த பிழையில்
சுயமறிய
உதவியோர்க்கு
நன்றி

காயப்படுத்தும்
எண்ணமில்லை
காயப்பட்டிருந்தால்
நிபந்தனையின்றி
மன்னிப்பு கேட்பதில்
எனக்கு தயக்கமுமில்லை

என்றும்
மெய்யான
அன்பின்
பயணத்தில்
நெருஞ்சிமுள்ளாய்
என்னை
கண்டிருந்தால்
தூக்கியெறிந்திடுங்கள்

ஏனெனில்

வாழ்வில்
இதுவும் கடந்து போகும்

Wednesday, March 20, 2019

திசையறியா பறவை




சிறகு இருந்தும்
பறக்கும் திசை
அறியாமல்
திக்குத்தெரியாமல்
நிற்கிறேன் நான்

காடாய், மரங்கள்
சூழ்ந்து இருந்த
இடங்கள்




மனிதனின் வளர்ச்சியில்
இன்று
பாலைவனமாய்

கிளைகளில்
கூடுகட்டி
குயிலுக்கும்
அடைக்கலம் குடுத்து
வாழ்ந்த காலங்கள்
அழகானது

என்னை அழைத்து
குழந்தைக்கு சோறூட்டிய
தாய்மார்கள்
இன்று தொலைபேசியில்
தொலைந்த என்னை
தேடிக்கொண்டிருக்கிறார்கள்

அமாவாசை நாளில்
முன்னோர்கள் என எண்ணி
சோறு வைப்பான்
மனிதன்
இருப்பின் அடையாளமாய்
ஆறுதலான ஒரு நாள்
என் வாழ்வில்

பின்வரும் நாட்களில்
என்னை பற்றி கவலை பட
நேரமில்லை அவனுக்கு

வானுயர்ந்த கட்டிடங்கள் மேல்
ரசனை கொண்டு
வானுயர பறக்கும்
பறவையின் மேல்
பற்றற்று இருக்கும்
மனிதா

மழை பொழியும்
நாள் என
அழகாய்
கற்பனையில்
கானல் நீர் கண்டு
வாழ்ந்திடும்
மனிதா
உன்னை காண்கயில்

சிறகு இருந்தும்
பறக்கும் திசை
அறியாமல்
திக்குத்தெரியாமல்
நிற்கிறேன் நான்


Friday, March 15, 2019

ஓர் உறவு !

என் மன எண்ணங்களை
பகிர்ந்துகொள்ள 
ஓர் உறவு

என் சந்தோஷ தருணங்களை
என்னுடன் கொண்டாட 
ஓர் உறவு

துக்கமான சமயங்களில் என் கண்ணீர்
எட்டி பார்க்கும் சமயத்தில் என்னை ஆறுதல்
படுத்தும்
ஓர் உறவு 

வாழ்வில் விழும் நேரத்தில் 
விழாமல் தோள் கொடுக்கும்
 ஓர்  உறவு 

ரகசியங்களை பகிர்ந்து கொள்ள ஒரு உறவு
நம்மிடையே மனம் கசந்த சமயத்திலும்
ரகசியம் கசியாமல் காப்பாற்றும் 
ஓர் உறவு

வார்த்தைகள் கொண்டு பேசாவிடினும்
என் மௌனத்தின் மொழி அறிந்த
ஓர் உறவு

சின்ன சின்ன சண்டைகளிட்ட போதிலும் 
சிணுங்காமல் சிநேகிதமாய் தொடரும்
ஓர் உறவு

பரஸ்பரம் பார்த்துக்கொண்டதில்லை எனினும் 
தினம் தினம் நினைத்துக்கொண்டிருக்கும் 
ஓர் உறவு 

என்ன பெயரிட்டு அழைப்பினும் 
நித்தம் நித்தம் என்னுடன் 
தொடர்ந்திட வேண்டும்
உன் உறவு ...


Wednesday, March 6, 2019

தேவையில்லை !

தேவையில்லை
உன் பெயர் தேவையில்லை
உன் இனம் தேவையில்லை
உன் நிறம் தேவையில்லை
உன் பணம் தேவையில்லை
உன் நட்பு ஒன்று  போதுமென்றேன்

இவை யாவும் தேவையில்லையெனில்
நட்பே வேண்டாமென்று
உதறிவிட்டு சொல்கிறாய்

நிமிடத்தில் துகள் துகளாய்
உடைந்து போனேன் நான்

பிரியத்தின் தோல்வி வலி
புரியப்படாமல் போகையில்
மனம் மரத்து போகிறது
மீண்டுமொருமுறை

உதிர்ந்த
சிறகுகளை விட்டு
இருக்கும் சிறகை வைத்து
பறக்க முயற்சிக்கிறேன்

தனிமை பயணம் ஆதலால்
எல்லை ஏதும்
தேவையில்லை





Monday, March 4, 2019

யானை !

புழுதிபறக்கும்
நிலத்தில்
பிளிறும் ஓசை
கேட்டால்
சுற்றி இருப்பவனுக்கு
குலை நடுங்கும்

பிணம் தின்னி கழுகுகள்
வட்டமிட தொடங்கிவிடும்

கடும்பகையோ
பேராசையோ
பெருங்கனவோ
போர் என்று வந்துவிட்டான்

நிமிடத்தில்
முடிந்துவிடும் வாழ்விது
என அறியா மானிடன்

கையில் வாள் இருப்பினும்
என் முன் வர தயங்குகிறான்
அவனை கொல்ல
விருப்பமில்லை
எனக்கும்

இருந்தும்

என்மேல் அமர்ந்திருக்கும்
என் அரசன்,
எனக்கு உணவு கொடுத்த
என் ஊர் மக்கள்
என் கிராமம் , என் நாடு
துண்டாடப்படுகையில்
சினம் என்னை ஆட்கொள்கிறது

போரில்
எங்கிருந்தோ
ஒருவன்
அம்பெய்கிறான்,

பின்னாலிருந்து
ஈட்டிக்கொண்டு
என்னை தாக்குகிறான்
இன்னொருவன்

வலி இருந்தும் 
கையில் சிக்கும்
எதிரிநாட்டு வீரனை
காற்றில் பறக்கவிட்டு
ஓடுகிறேன்

போர் முடிந்து
என் மன்னவன்
வெற்றிபெற வேண்டுமென

வெற்றி பெற்று
கோட்டையினுள்
செல்ல
மன்னவன் மேல்
மலர்தூவி
வாழ்த்தும்
மங்கையர்
நாணம் காண
வேணும்மென்ற
கனவோடு

பொன்னிற
நெற்றிப்பட்டமனிந்த
துதிக்கை வீசி
பெருங்காதுகள் கொண்ட
எனக்கொரு
பெயருண்டு

அன்புக்கு கட்டுப்பட்டு
அடங்கிநிற்கும்
வேறெதற்கும்
அடங்காத
திமிர்கொண்ட
"பட்டத்துயானை"


Thursday, February 28, 2019

நட்பாய் நீ !


சின்ன சின்ன சண்டையில்
சிறுக சிறுக சேமித்தோம்
நமக்கான உறவை

என் தாய் தான்
உலகமென்று
நினைத்திருந்த வேளையில்
எனக்கொரு இன்னொருமொரு
தாயானாய்
நீ

பரஸ்பரம் பகிர்ந்துகொண்டது
எதுவும் நினைவில்லை
என் நினைவே நீயாகி போனதால்

எனக்கு காய்ச்சல் வந்த
வேளையில் உனக்கு
உடல் சுட்டிருக்குமோ
மருந்தோடு  என் வாசலில்
நீ

சாலையில்
அழகிய  பெண்ணை
கண்டால் என் கண்
போகும் பார்வையின்
பின்னால் உன் பார்வை
சிரித்துக்கொண்டே
டேய் ...ம்.. ம்.. என்பாய்
நீ

நம் மனம் மட்டும் அல்ல
நம் வீட்டு வறுமையும்
நம்மை போல
பிரியாமல் சேர்ந்தே
இருக்கிறது

இரவானலும்
என்னுடன் பயணிப்பதையே
விரும்பியது உன் மனம்

ஆண், பெண்
என்பதை தவிர
நமக்குள் வேற்றுமை
நான் கண்டிலேன்

கோயிலானாலும்
தேவாலயமானாலும்
சேர்ந்தே சென்று
பிரார்த்திப்போம்
மற்றவர் நலம் காண

ஒன்றாய் அமர்ந்து
வேடிக்கையாய் பேசி
சிரிக்கையிலும்
ஒன்றாய்  அமர்ந்து
உண்ணும்போதும்
ஒன்றாய் பயணிக்கையிலும்
ஊர் சொன்னது
காதலர் என்று

எப்படி சொல்வேன்
அவர்களுக்கு
காதல் ஓர் உணர்வு தான்
ஆனால்
எங்களுடையது
உயர்வான உறவான
நட்பென்று

விதி செய்த சதி
கண் காணா தூரத்தில்
நீ
உன் நினைவுகள் மட்டும்
என்றும் என்னருகில்

தேவதை நீ
நிஜம் என்று
நிழலை பறித்து
செல்கிறாய்

உன் நினைவுகளுடன்
காகிதத்தில் நிரப்பப்படாத
வலிகளுடன்
உன்னுடன்  நட்பாய்
கைகோர்க்க
காத்திருக்கிறேன்

Thursday, February 21, 2019

எனக்கொரு கனவு !

சிறுவயதில் தாயை காக்க
வீட்டை காக்க என  படித்து
வளர்ந்து  வந்தேன்
எல்லாரையும்போல்,

காலசுழற்சியில்
தாய்நாடு மீது பாசம் வந்தது

உடல்வருத்தி பயிற்சிகொண்டு
இராணுவத்தில் இணைந்தேன்

தாய், தந்தை, சகோதரன் ,
உறவுகள் எல்லாம் விட்டு
புது உறவு கொண்டு
எல்லை காக்க
கடமைப்பட்டேன்

வருடமொருமுறை
சொந்தம் காண
உறவுகள் சூழ
சில நாட்கள்

வாலிப வயது எட்டியதால்
பெண் பார்க்கும் படலம்

கண் காணா எல்லையில்
இருக்கும் எனக்கு
பெண் கிடைக்க
என் தாயோ
வேண்டாத சாமியில்லை

தேடி தேடி
கண்டுபிடித்தாள்
தேவதை என ஒருத்தியை

என் மனம் அவளை
மணம் முடிக்க
தயங்கியது

காவலுக்கு
செல்லும் எனக்கு
ஒவ்வொரு விடியலும்
ஒரு புது பிறப்பு தான்

தினமும்
நான் செல்லும் பாதை யாவும்
என்றோ ஒருநாள்
மயானத்துக்கு செல்லும்
பாதையாகலாம்

தனித்திருத்தலின்
சுகம் பழகிய எனக்கு
தற்காலிக அன்பின்
மேல் மோகம் அற்று கிடந்தேன்

அவளுக்கோ நாட்டுக்கு
சேவை  செய்யும் என்மீது
அன்பு பிறந்தது
மணம் முடித்தேன்
அன்புமகன் பிறந்தான்

பிறந்து ஒரு வருடம் ஆனா பின்
குழந்தை காண விடுப்பு கிடைத்து
ஊர் வந்து அவனை கையில் ஏந்த
என் கண்ணில் கண்ணீர் அவன் கன்னம்
நனைத்தது

சின்னஞ்சிறு கொஞ்சலும்
என் மார்பில் எட்டி உதைக்கும்
அவன்
சின்னஞ்சிறு பாதங்களும்
பல பல ஆண்டுகள்
வாழ ஆசை கொண்டேன்
அந்நிமிடம் அவனுடன்

விடுப்பு முடிந்த நிமிடம்
மனம் மரத்து போனது
அவனை பிரிவது குழைந்தைமேல்
காட்டும் எனது குரூரம் என
உணர்ந்தேன்

பற்றியெரியும் ஒரு
பெருந்தனலின் பாதையில்
மற்றுமொரு இரவு பயணம்
தொடங்கியது

இந்நாள் விடியாமல் இருந்திருக்கலாம்
என நினைக்கையில்
திடீரென
உடன் பயணித்தவரின்
வெடித்து தெறித்த
சதைகளின் பிசுபிசுப்பு
என் உடலெங்கும்
ஆக்கிரமிக்க

கன நொடியில்
என் சுயம் மறந்தேன்
முடிவென்பது
என் மனம் நினைத்ததல்ல
மணம் முடித்தபின் நினைத்ததுமல்ல

சாத்தானின் அகோர பசியில்
இரையாகி போனோம்
கேட்டிருந்தால் நிமிர்ந்து நின்று
மார்பு பிளந்து உண் என்றிருப்பேன்
என் தாய்நாடு காக்க

அன்பின் நினைவுகளில்
சிக்குண்டு கிடந்த வேளையில்
இருளில் கோழை என
என் கனவு தகர்த்த உன்னை
என்ன பெயரிட்டு அழைக்க

மீண்டும் பிறக்க
ஆசை
என் கனவு மெய்ப்பட 

Wednesday, February 6, 2019

வா என் தேவதையே !

நிலத்தை  போர்த்தி அழகாக்கும்
பச்சைபசேல் வயல்வெளி போல்
அவள் மேனியை மேலும் அழகாக்கி
பச்சை தாவணி போர்த்தி
நடந்து வந்தாள்
தேவதை என

அவளை தீண்டிய தென்றல் காற்று
என்னையும்  தீண்டி இன்பம்
பகிர்ந்துகொண்டது

பௌர்ணமி முழு நிலவு போல்
அவள் முகம் அதில்
ஜொலிக்கும் நட்சத்திரம் போல்
அவள்  மூக்குத்தி

தமிழை உச்சரிக்கும் அவள் இதழில்
தும்பை பூவின் இனிப்பு

அருகில் வந்து
அவள் கேட்டது எதுவும்
நினைவில்லை
சிரித்தோம் ஏனோ
அறியவில்லை

நீ கடந்து வந்த பாதையெங்கும்
உன் கூந்தல் உதிர்த்த
பூக்களெல்லாம்
வாடி மடிந்தன
உனை  பிரிந்த
ஏக்கத்தில்

உன் கால் கொலுசின்
ஒலிகள் உணர்த்தியது
என் மனதில்,
காதல் வருகையின்
சமிக்ஞ்சைகள்

தனிமை இனிமை
என இருந்தேன்
அவள் ஒரு நொடி
பிரிவையும்
சகித்துக்கொள்ள
முடியாமல்
திணறும்
இக்கணம் வரை

உன்னை எண்ணி
வண்ண வண்ண
கனவுகளில்
சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது
என் மனம்

தாயின் கருவறைக்குள்
சுகமாய் இருளில்
இருக்கும் குழந்தை போல்

உன் நினைவுகளில்
நான் தினம் தினம் வாழ்கிறேன்

இதோ
இன்று
ஒற்றை ரோஜாவை
கையில் வைத்து
காதல் சொல்ல-
அதை நீ ஏற்பாயோ
என அறிய

வழிமீது விழி வைத்து
உன் வருகைக்காக 
காத்திருக்கிறேன் 

வா என் தேவதையே !

Monday, January 21, 2019

உயிர் !

கறி கடையில்
கூண்டில் அடைபட்டு
மரணத்திருக்காய்
காத்திருக்கும்
கோழி போல்
போகும் இடம்தெரியாமல்
அங்கும் இங்கும்
அலைந்துகொண்டிருக்கிறேன்
கூட்டினுள்

புசிப்பதற்கு
வரிசையில்
காத்திருக்கும்
ஒரு கூட்டம்

என் உயிர்
எடுப்பதில் தான்
என்ன ஒரு
ஆனந்தம்
இவர்களுக்கு


என் மனம் !

இதோ
சண்டையிட்டு
கொண்டுதானிருக்கிறேன்
காரணமில்லாமலே
இருந்தும் என்னை புரிந்து
பிரியாமலிருக்கிறாய்

தனித்திருத்தலை
சௌகர்யமாய்
பழக்கிக்கொண்டேன்
அது
அசௌகரியத்தை
உணர்த்துகிறது போலும்
உனக்கு

ரயிலில்
பயணிக்கையில்
சன்னலில்
பின்னோக்கி ஓடும்
மரங்கள் போல
என்நினைவுகள்
என்றும் கடந்தகால
வலிகளில்
பயணித்துக்கொண்டிருக்கிறது

ஆயிரம்கால் மரவட்டை போல்
குழப்பமில்லாமல்
முன்னேற தடுமாறித்தான்
போகிறேன்
மண்புழுபோல்
மண்ணில் புதையுண்டு
கிடக்கிறேன்

அன்பு
அக்கறை
இதையெல்லாம் தாண்டி
ஈர்க்கப்பட்டதின்
காரணம் நானறியேன்

கனல் போல்
எரியும் என் இதயத்தில்
கானல் நீர் போல் வந்து
அணைத்திடுவாயோ

இதோ
சண்டையிட்டு
கொண்டுதானிருக்கிறேன்
உன்னிடம்