Sunday, December 30, 2018

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதிதாய் ஒரு ஜனனம்
புது வருடம் என பெயரிட்டு
அழைத்தேன்

எல்லா வருடமும்
மூடிய புத்தகம் போல்
பொக்கிஷத்தை
தன்னுள்
புதைத்து கொண்டு தான்
பிறக்கிறது

புதிதாய்
கற்க நினைத்தால்
திறந்து படியுங்கள்

இல்லையெனில்
ஆயிரமாயிரம் கருத்துக்கள்
உள்ளிருப்பினும்
தூசிபடிந்து
கண்களுக்கு தெரியாமல்
இதுவும் கடந்து போகலாம்

கடந்த  வருடம்
கொடுத்த வலிகளும்
அனுபவங்களும்
சந்தோஷ நினைவுகளும்
புது வருடத்திற்கு
எடுத்து செல்வோம்
நம்மை செதுக்க
அவை உதவலாம்

வாழ்த்த நாட்கள்
மீண்டும் வரப்போவதில்லை
ஆனால்
வரும் நாட்கள்
நேசத்துடனும்
பாசத்துடனும் வாழ்ந்து
நல்ல நினைவுகளை
தரட்டும்


எல்லாருக்கும் என் இதயம் கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

Friday, December 28, 2018

தொல்லை !

பகலில் உன்னை நினைக்காமல்
இருக்கமுடிவதில்லை
இரவிலோ
என்னை நெருங்காமல்
நீ இருப்பதில்லை

இரவு முழுவதும்
என் தூக்கத்தை
சூறையாடுகிறாய்

நீ முத்தம் இடுகையில்
ஏனோ
என் ரத்தம் உறிஞ்சுவதாய்
உணர்கிறேன்

நீ பெண்
நான் ஆண்
இருந்தும்
இந்த சமூகம்
நம்மை தவறாய்
நினைக்காது

உன்னுடன்
இரவை கழித்தால்
மரணம் கூட என்னை
நெருங்கலாம்

நீ இல்லா
இரவை கடக்கவே
என் மனது துடிக்கிறது

உன்னை பிரிய
செய்த சூழ்ச்சியெல்லாம்
முறியடிக்கிறாய்

என்ன செய்ய என
யோசனையில்
என் பகல் கடக்கிறது

யாரவது தெரிந்தால்
யோசனை
சொல்லுங்களேன்
இந்த கொசு தொல்லை
தாங்கலப்பா









Friday, December 21, 2018

என் ஆவல் !

சிலந்தி வலையில்
சிக்குண்ட வண்டு போல
பல நட்புகளில்
சிக்குண்டு கிடந்திருக்கிறேன்
மீள வழிதெரியாமல்

புறக்கணிப்பின்
சாராம்சம்
அர்த்தமில்லாமல்
கடத்தப்பட்ட பக்கங்களாவும்
இருக்கலாம்
இல்லை
புரட்டப்படாத
பக்கங்களாவும்
இருக்கலாம்

அர்த்தமற்றதாக
கடந்த நட்பினால்
புரட்டப்படாத
பக்கங்களை  நிராகரித்தேன்

நட்பின்பால்
உள்ள ஈர்ப்பால்
மீண்டும் தயக்கத்துடன்
துவங்கினேன்

மெல்ல மெல்ல ஈர்க்க
தொடங்கியது
என்னை தன்பால்

பலகீனங்கள்
பரஸ்பரம்
புரிந்துகொள்ளப்பட்டது

கறுப்போ
சிகப்பா
மாநிறமோ
ஆணோ
பெண்ணோ
பேதங்களற்ற
ஒர் நட்பு
கிடைத்தது

முடிவிலா
தொடர்கதையாய்
தொடரவேண்டும்
என்பதே
இப்போது
 என் ஆவல்


Thursday, December 20, 2018

சுவாரசிய நிமிடங்கள்

ஒவ்வொரு நாளிலும்
கொஞ்சம் இனிமையான
நிமிடத்தை சேமித்து வையுங்கள்

உடல்நலமில்லா வேளையில்
உண்ணும் கஷாயத்தில் கூட
மதுரம் சேர்ப்பது போல்

உங்கள் கஷ்டங்களுக்கு இடையில்
புன்னகைக்கு சிறு இடம் ஒதுக்குங்கள்

யாருமில்ல வேளையில்
சாய்வு நாற்காலியில்
அமர்ந்து யோசிக்கையில்
தேனீர் இல்லா கோப்பை
என்ன சுவாரசியத்தை
தந்துவிட போகிறது ?

பிரிந்து போன காதலோ
கடந்து போன நட்போ
முறிந்து போன உறவோ
அசைபோடுகையில்
அந்நேரம் தூவிவிட்ட
இனிமை நினைவுகள்
தரக்கூடும்
உங்களுக்கு
சிறந்ததொரு
சுவாரசிய நிமிடங்கள்




மன்னிப்பு!

மன்னிப்பு
யாரிடம் கேட்பது ?

எட்டி எட்டி உதைத்து
பல பல நாள் அவள்
தூக்கம் கெடுத்தும், பின்
உடல் கிழித்து
வெளியில் வந்தும்,
இன்னல்கள் பல தந்தும்
என் பசி, என் நலம்
என மட்டும் சிந்தித்திருக்கும்
தாயிடமா ?

தான் காணா உலகத்தை
தோள் மேல் வைத்து
எனக்கு காட்டி
தான் சிறுவயதில் பட்ட
இன்னல்கள் எல்லாம்
தன்  மகன் காணாதிருக்க
தன் சுகத்தை மறைத்து
உழைக்கும்
தந்தையிடமா ?

வகுப்பு அறையில்
ஜன்னலோரம் பார்த்து
விளையாட்டாய்
நாட்களை கடத்தியும்
அணைத்து பிள்ளைக்கும்
தன் பிள்ளைபோல்
பாடம் நடத்திய
ஆசிரியர்கா ?

பார்த்த மாத்திரத்தில்
பிடித்தது என சொல்லி
தாலி வாங்கி
எனக்கு பிடித்ததை
தனக்கு பிடித்ததாய் மாற்றி
சுகம் துக்கம் கலந்து
எனக்குள் சரிபாதி
கலந்திட்ட என்
துணைவியிடமா ?

நட்பெனும் வட்டத்தில்
சில வஞ்சகர்களை
நட்பென்று ஏமாந்ததால்
பின் நட்பென்று
வருபவர்களை கண்டால்
சஞ்சலத்தில்
சந்தேக கண்கொண்டு கண்டு
விலகிய நட்பிடமா ?

சாலையில் யாரோ
தவறவிட்டு சென்ற
காகிதம் 
வண்டியின் சக்கரத்திலும்
நடப்போர் கால்பாதத்திலும்
பட்டு கிழிந்தும்
மழை வர நனைந்து
மக்கி மண்ணில் மறைந்து
போவது போல

உணர்ந்தேன்
எவரையும் அவர் அவர்
இயல்பில் ஏற்றுக்கொள்ளுதலே
வாழ்க்கை
உணர்த்தும் பாடம் என

Sunday, December 16, 2018

மனிதம்

விசித்திரமாய் தான் இருக்கிறது
ஐந்தறிவிற்கு உள்ள அன்பு
சில நேரம் ஆறறிவிற்கு
இல்லாததை காண்கையில்

நல்லவரென
சொல்லித்திரியும்
நீங்கள்
பொய் முகமூடியிட்டு
வழிநெடுக
அலைந்துகொண்டிருக்கிறீர்கள்

இதுவும் ஒரு பிம்பமாய்
ஒரு புகைப்படமாய்
ஒரு நிமிடத்தில்
உங்கள் மனதை கடந்து விடும்

நீங்கள் உதவுவீர்
என காத்திருந்தால்
ஆழியலை கூட
கரையை கடந்திருக்கும்

மற்றவர்களுக்காக
சிலுவையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
குறைந்தபட்சம்
மற்றவர்களின்
பாதைக்கு முள்ளாகமலாவது
இருக்க முயற்சியுங்கள்

மனம்
மரத்துப்போவதே
மனிதம் மரித்து போவதற்கு
தொடக்கம்

கண்மூடி
இருளென்று பயக்கும்
மனிதா,
கண் திறந்து பார்
உலகம் உனக்கானது

Monday, December 10, 2018

இதுவும் கடந்து போகும் !

 இதுவும் கடந்து போகும்

என் தாய்,
தந்தையை விட்டு
எங்கள் கை பிடித்து
வீட்டை கடந்து போகையில்
இதுவும் கடந்து போக வேண்டிவரும்
என நினைத்திருக்கவில்லை

கொஞ்சி மகிழ்ந்து
இருந்த பெற்றோர்
பிரிய காரணம்
நான் அறிந்திலேன்

இறகுகளை உதிர்த்து
பறக்கும் பறவை போல்
எங்களை பிரிந்து பறக்க
நினைக்கும் இவர்களின்
தூரம்தான்
நானறியேன்

சிலநேரம்
சுயநலமான முடிவுகளில்
சிறு தவறுகளில்
சிக்குண்டிருக்கும்
அவிழ்க்கமுடியாத
பெருங்குற்றங்களின்
முடிச்சுகள்

குழந்தைகளின்
அன்பை உதறி
நீங்கள் சொல்லும்
காரணங்கள் யாவும்
ரணங்களாய் காயப்படுத்தும்
வாழ்நாள் முழுவதும்
என்பதை அறிவீரோ ?

புலன்விசாரணையாய்
காலமெல்லாம்
இச்சமூகம் கேட்கும்
கேள்விக்கணைகளை
இதயத்தில்
உங்களுடன் நாங்களும்
தாங்கிதான் வாழவேண்டுமோ ?!

உறவுகளுக்குள்
சுவர்கள் எழுப்பி
சிநேகம் வளர்த்திட
முயலும் பெற்றோர்

துக்கம் பீறிட்டு வரும்
எங்கள் அழுகை சத்தம்
சாத்தானுக்கு பெரும்சிரிப்பை
வரவைத்திருக்குமெனில்
நாங்கள் கடவுளென
நினைக்கும் உங்கள்
உணர்வு
நானறியேன்

விசித்திரமான விஷயங்களை
செய்வதே வாழ்க்கையின்
வேடிக்கையாய் போனது
மனிதர்களுக்கு ...
இது
நாங்கள் வாங்கி வந்த
வரமா இல்லை சாபமா ?


Thursday, December 6, 2018

சிரிக்கும் புத்தன் சிலை !



வறுமை
பாய் போட்டு
படுத்திருக்கும்
வீட்டில்
ஒருவன்

யாரோ சொன்னார் என
ஆசை கொண்டு
வாங்கி வந்தான்
சின்ன சிறிய
சிரிக்கும் புத்தன்
சிலை

அவர் சிரிப்பை கண்டால்
வறுமை மாறும் செழுமை
பொங்கும் என நினைத்து
தினம் தினம் கண்விழித்தான்
சிலையின் முன்

நாட்கள் செல்ல செல்ல
சிரிக்கும் புத்தன் சிலையும்
அழுவதாகவே
தோன்றுகிறது
அவனுக்கு

புரியாமல் யோசித்தான்
இது புத்தனின் குற்றமா ?
இல்லை
இவன் ஆசையின்
குற்றமா ?


Tuesday, December 4, 2018

மழை !

அதோ கார்மேகங்கள்
வானத்தை சூழ்ந்துகொண்டிருக்கிறது
இதோ தும்பிகள் ரீங்காரம்
என் காதில் விழுகிறது

சில்லென்று மழை துளிகள்
மண்ணை நனைக்கிறது

மண்ணின் வாசனை
மெல்ல மேல் எழும்புகிறது

இடியின் சத்தம்
என்னை அதிர்ச்சியுடன்
ஆச்சரியபடுத்துகிறது

இதோ நனைய நான்
ஆசை கொண்டு
வெளியில் வருகிறேன்

கால் தடுக்கி
மழை நீரில் விழுகிறேன்
நண்பன் தோளில் தட்டி
எழுப்புகிறான்

விழித்தேன்
வறண்டபூமியில்
கனவிலேனும்
மழையை ரசிக்க விடாமல்
எழுப்பிய நண்பனை
திட்டியபடி

Monday, December 3, 2018


அப்பட்டமான சுயநலத்தில்
உறவுகளை பகையென
கொள்ளும் இவ்வுலகில்

மற்ற ஜீவராசிகளை
ஜீவனுள்ளதாக
மனதில் கொள்ளவே
மனதில்லை
இம்மனிதனுக்கு

சிட்டுக்குருவிகளின்
கீச் கீச் சத்தத்தை
தன் கீச்சுகளின் மூலம்
பதிவிட்டு மனநிறைவு
கொள்கிறான்

தன் ஜனன காரணத்தையே
அறியா மானிடன்
பிற உயிரன்களின் பிறப்பின்
ரகசியம் எவ்வாறு
அறிவான் ?

நமது சுகவாசி
வாழ்வியலில்
மறுத்து மரித்து
போகிறது
அக்கறையும்
அன்பும்

உயிரில்லா
தொலைபேசியையும்
மடிக்கணினியையும்
கையிலும், மடியிலும்
தவழ விடும் நாம்
கொஞ்ச நேரம்
சிந்திப்போம்
உயிருள்ள ஜீவராசிகளை பற்றி

நாம் சிந்தும்
நீரும்,
உன்கையில் சிதறும்
சில பருக்கை சோறும்
போதும் அவை பசி ஆற

ஒற்றுமையாய் அமர்ந்து
உண்பதை காண்கயில்
உணர்த்துகிறது
இது படம் அல்ல
பாடமென ....

Saturday, December 1, 2018

தேடுகிறேன் !

முகமூடி பார்த்து
பழகிடும் காலத்தில்
அது அகற்றப்படும் நேரம்
இதயம் அதை
தாங்கும் திராணியின்றி
நிகழப்படுகின்றன
நட்பின் மரணம்

கானல் நீர் போல
வெறும் பொய் வார்த்தைகளால்
கட்டி வைத்த பிம்பம் ஒன்று
உண்மையின் நிழலில்
சாய்ந்து விழுகிறது

பறக்கும் நேரம் பறவை அறியாமல்
உதிர்ந்து போகும் இறகினை போல்
சிலநேரம்
தெரியாமல் காயப்படுத்தும்
நட்பில்
காயம்பட்டதும் அறியாமல்
அஸ்தமனமாகிறது
நட்பு

தாயின் கருவறையிலுருந்து
வெளிவர துடித்து
பின், ஒருநாள்
தாயின் கருவரையிலேயே
இருந்திருக்கலாமோ
என்று என்னும் நேரம்
வாழ்வின் விளிம்பில்
நிற்கும் நேரம்

பொக்கிஷம் என
சேமித்து வைத்தேன்
மண்பானையில்
அது
ஓட்டையாகி
வீணாகி போனதை
நானறிந்திலேன்

இரவின் நிசப்தத்தில்
என் மனதில் எழும்
பேரலை சப்தத்தை
யாரறிவாரோ ?

அன்பின்
புதைகுழியில்
சிக்குண்டு தேடுகிறேன்
பிம்பமில்லா அன்பு
எங்குண்டு  என ?!



அன்பு

அழும் குழந்தைக்கு
ஊமை தாய் எப்படி
ஆரிராரோ தாலாட்டு பாடி
தூங்க வைத்திடுவாள் ?

உலகம் காண முடியா தாய்
எப்படி தன்  குழந்தைக்கு
நிலவை காட்டி
சோறூட்டிடுவாள் ?

காது கேட்கா தாய்
எப்படி
இடி இடிக்கும் பொழுதில்
தன் குழந்தையின்
காதை மூடிடுவாள் ?

நினைக்க நினைக்க
நித்தம் ஒரு கவலை
மனமெங்கும்
குழப்பம்

யார் செய்த தவறென
யார் மீது பழி போட

தாய் சேய் பந்தம்
பற்றி சிந்தித்தது
என் மனம்

வெளிச்சத்தில்
கண்மூடி இருக்க
யாரும் அறியாது என எண்ணி
பாலை ருசித்திடும்
பூனை போல

எல்லாம் சரியாய் இருந்தும்
இதெற்கெல்லாம் காரணம்
அன்பு ஒன்றென
அறியாமல் வளர்கிறோம்

அன்புக்காக ஏங்கும் ஒரு கூட்டம்
ஒருபுறம் அனாதை இல்லத்தில்
அன்பை காட்ட ஆளில்லாமல்
ஒரு கூட்டம் முதியோர் இல்லத்தில்

முரண்பட்ட இதயங்களை
படைப்பதே இறைவனின்
வேலையாயிற்றோ ?

இரவின் மடியில்
சாய்ந்திருக்கும் நேரம்
கைபேசியின் ஒளியால்
ஒளிர்ப்பிக்காமல்
கொஞ்சம் தாயின் மடியில்
தலை சாய்த்து கேளுங்கள்
உங்களிடம் சொல்ல
அவள் சேர்த்துவைத்திருக்கும்
அன்பின் பொக்கிஷ கதைகளை

காலம் கடந்தபின்
ஏங்கி
கிடைக்காமல்
நிற்கதியாய் நிற்கையில்
வருந்தி பயனில்லை

அன்பு,
அது காற்றுக்கும்
இலைகளைக்கும்
இடையில் இருக்கும் பந்தம் போல
உணரத்தான் முடியுமெனில்
உணருங்கள்
உணர்த்துங்கள்
தோழர்களே !

Wednesday, November 21, 2018

பிரிவு



பிரிவு
வாழ்க்கையில்
விரும்பாவிடினும் வரும் ஒரு 
நிகழ்வு 

வாலிபனானதும் பிரிகிறோம் 
நம் குழந்தை பருவத்தை 

கல்லூரிக்கு சென்றதும் 
பிரிகிறோம் 
நம் பள்ளிநாட்களை 

வேலைக்கு  சென்றதும் 
பிரிக்கிறோம் 
நம் கல்லூரி நாட்களை 

கல்யாணம் ஆனதும் 
பிரிகிறோம் 
சில நட்பு வட்டத்தை 

வயோதிகரானதும் 
பிரிகிறோம் 
நம் வாலிப பருவத்தை 

பிரிவு 
ஒரு நல்ல அத்தியாயத்தின் 
தொடக்கம் எனில் 
பிரிவை நேசிப்போம் 



Saturday, November 10, 2018



முதல் நாள் பாரத்தோம் அன்றே அறிமுகம் ஆனோம்..!

இரண்டாம் நாள் அன்பில் கலந்தோம்..!


மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!


நாளுக்கு நாள் கதைகள் பேசி.!


கேலியிலே பொழுதை கழித்தோம்..!


கிண்டல் செய்து சீன்டி பார்ப்போம்..!


அடிக்கடி சண்டை வரும்..!

ஆனால் பேசாமல் ஒரு நாள் கடந்தது இல்லை !


வாரம் முழுவதும் அலுவலக வேலை 
ஓர் நாள் உன்னுடன் வீட்டிலிருக்க ஆசை  எனக்கு !

வாரம் முழுவதும் வீட்டு  வேலை 
ஓர் நாள் என்னுடன்  இவ்வுலகை ரசிக்க ஆசை உனக்கு !

சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் விளையாட்டாய் 
கடந்தது  நம் காதல் முன் !

மாலை மட்டும் மாற்றி கொள்ளவில்லை



நம் சுகம் துக்கம் இரண்டையும் தான் மாற்றி கொண்டோம்

நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும்
ஒன்றுதான் , இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும் கரை சேரும் வரை.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல!! சிறிய சிறிய சந்தோஷங்களையும் ரசித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை...!!

நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்
என் விரல்களின் இடைவெளி உன் விரல்கள் கோர்க்க
காத்திருக்கிறது அன்பே வா!

நா முத்துக்குமார்



எனக்கொரு கவலை 
இருந்தது கண்ணதாசன் வாழ்ந்த 
நாட்களில் நானில்லயே என்று 

இயல்பான வரிகளில் இதயத்தை 
தொடமுடிந்தவன் யார் என எண்ணுகையில் 
ஓர் நாள் காதில் ஒலித்தது ஒரு பாடல் 

"எனக்குப்பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே"
பிடித்து தான் போனது பாடல் வரிகள் 

"நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்"

உன் பாடல்கள் கேட்டபின் என் மன நிலையும் இது தான் 

"நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் 
வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் "

பல வருடங்களுக்கு என் தொலைபேசியை 
அழைத்தால் இந்த பாடல் தான் ஒலித்தன 
இதற்காகவே அழைத்தவர்களும் ஏராளம் 

"அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் 
நமது கதையை காலமும் சொல்லும்"
சொல்லிக்கொண்டு தான் இருக்கும் உன் புகழ் 
காலம் உள்ளவரை நண்பா 


"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"

என்று கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைக்கும் 
ஒரு பாடல் உண்டெனில் அது இது தான் என் தந்தையின் 
தியாகம் கண்முன் நிழலாடும் 

பெற்ற பிள்ளைக்காக "ஆனந்த யாழை மீட்டி எங்கள் நெஞ்சில்
வண்ணம் தீட்டினாய்"
இந்த மண்ணில் இதுபோல் யாரும் வாழ்ந்ததில்லை 
என யோசிக்க வாய்த்த பாடல் வரிகள் 

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை  ஒன்னும் இல்லை

தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போனது 
உன் உயிரை சீக்கிரம் எடுத்து 

ஒரு வண்ணத்து பூச்சி என் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது


கண்ணதாசனுக்கு பிறகு எனக்கொரு நா முத்துக்குமார்
என் பிள்ளைக்கு யார் ? விடைதெரியா கேள்வியில் நான்


வாழவிடு ...





இதோ கொடிய இரவின் மடியில்
எறிந்துகொண்டிருக்கிறது
என் உடன்பிறவா சகோதர சகோதரிகளின்
உடல்

ஆணவத்தில் ஆடும் ஒரு சில
அதிகாரவர்க்கத்தின் அட்டூழியம்
அடக்கத்தான் யாருமில்லை

பூக்கள் சூழ்ந்து மனம் வீசிக்கொண்டிருந்த
எங்கள் தோட்டம் இன்று பிணவாடையில்
குளித்துக்கொண்டிருக்கிறது

பல நாள் ஊண் உறக்கமின்றி
எங்கள் மண் மேலே,
சிறுக சிறுக சேமித்து ஆசையாய்
என் தந்தை எங்களுக்காய்
கட்டிய வீட்டினுள் வசிக்க முடியாமல்
மண் தோண்டி மண்ணுக்கடியில்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

இங்கு
குழந்தைகளுக்கு விளையாட
எரியாமல் போன உறவுகளின்
கை கால்கள் மட்டும் மிச்சம்

இது விஞ்ஞானத்தின் வளர்ச்சியா ?
மானங்கெட்ட சில மனிதர்களின் 
சூழ்ச்சியா ?

இயற்கையை அழித்து 

விவசாயத்தை அழித்து 
மனிதர்களை அழித்து 
பிணத்தையா தின்ன போகிறீர்கள் ?!

பச்சிளம் குழந்தையும் 

போர் என கொள்ளும் 
மிருகங்களே !?

என் உறவுகளில் 

குண்டுகள் பாய்ந்தபோதும் 
உன் குருதியின் வண்ணம்தனை 
காணவில்லையோ ?

எப்பொழுதேனும் பறக்கும்
விமானத்தை அதிசயமாய்
அண்ணாந்து பார்த்த காலம்போய்

இன்று
அனுதினமும் வீட்டின்மேல்
பறக்கும் போர்விமானத்தை
அச்சத்துடன் பார்க்கிறோம்
என்று எங்கள் மேல் குண்டுகளை
பாய்ச்சுமோ என..

குமுறல்களை முறையிட
கோவிலுக்கு சென்றால்
சிலையை காணவில்லை
தேவாலயத்தில் இருந்தவரையும்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
பள்ளிவாசலும் திறக்கப்படாமல் இருக்க 
எங்குதான் செல்ல...

காண்போரிடம் எல்லாம் 

பகிர்ந்து கொள்ள ரணங்கள் 
மட்டும்நிரம்பிய  எங்கள் உள்ளம் 

என் தாய்நாடு உயிரினும் பெரிதென்று 

வேறெங்கும் ஓடாமல் 
தாய்மண்ணின் ம(அ)டியில் 
மரணம் தழுவும் வரை வாழுவோம் 

உன் குருதி தாகம் தீருமாயின்

கொஞ்சம் எங்களையும்
வாழவிடு ...

சுற்றிகொண்டிருக்கிறேன்


சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
என்னை சுற்றிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளிலிருந்து மீள
வழி தெரியாமல்


சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
நாம் சென்ற இடமெல்லாம்
வியாபித்திருக்கும்
உன் நினைவுகளை
அழிக்க முடியாமல்

சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
என்னை நீ பிரிந்த காரணத்தை
கண்டறிய முடியாமல்

சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
தனியாக சிரிப்பதற்கும்
தனியாக அழுவதற்கும்
தனியாக பேசுவதற்கும்
தனியாக வாழ்வதற்கும்
பழக்கபடுத்திக்கொண்டிருக்கும்
என்னை பைத்தியம் என்பவர்களுக்கு
என்ன பதில் சொல்வது என
தெரியாமல்

சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
நிலவும் சூரியனும் ஓர் நாள்
சந்தித்து கொள்ளலாம்
நீயும் நானும் என்று சந்திப்போம்
என தெரியாமல்
சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்


என் காதல்



பலநாள் இரவில் என் தூக்கத்தை
ஆக்ரமித்தவள் நீயே

என் காதலை சொல்ல எத்தனித்து
வார்த்தை வர மறுத்து என்னை நானே
வெறுத்த நாட்கள் ஏராளம்

காதல் சொல்ல வாங்கிய மலர் கூட
மனம் மாறி மணம் வீச தவறலாம்
ஆனால் என் காதல் என்றும் மாறாதே

என் மௌனம் சொல்லாத காதலை
என் வார்த்தைகள் தான் சொல்லிடுமோ

ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகடல்
போன்றதல்ல என் காதல்
பொக்கிஷம் பல உடன் இருந்தும்
அமைதியாய் இருக்கும் நடுக்கடல் போல
என் காதல்

தொலைபேசி அழைப்பு ஒலிக்கும் போதெல்லாம்
உன் முகம் வந்து வந்து போகிறது

அரட்டை அரங்கத்தில் ஓசை இல்லா பல குரல் கேட்பினும்
உன்னிடம் இருந்து வரும் ஒரு குறுந்செய்திக்கு
காத்திருப்பதே சுகமாகி போனதெனுக்கு

என் இதயத்தை உன்னிடம் கொடுத்துவிட்டேன்
அன்பே என்று நீ
என் இதயத்தில் இருப்பதை என்று நீ அறிவாயோ ?!

என் காதல் அது நீ உணரும் வரை
சுகமான வலி மட்டும் மிச்சம் !

வண்ணமல்ல இது !



பாரத தாய்
அவளிடம்  இன்று
புதியதாய் ஒரு வண்ணம்
கண்டேன்

இவ்வண்ணம்
வறுமையின்
வண்ணமல்ல

மங்கை அவள்
நெற்றியை
அலங்கரித்த
வண்ணமுமல்ல

கன்னி அவள்
கைகளை
மருதாணியிட்டு
வரவைத்த
வண்ணமல்ல

பிறந்ததும்
தொப்புள்கொடி
வெட்டியதும்
வந்த வண்ணமல்ல

பெண் குழந்தை
என தெரிந்தும்
கள்ளிப்பால்
கொடுக்காமல்
வளர்த்தெடுத்த
பெற்றோரின்
மனது விரும்பிய
வண்ணமல்ல

கணவனை
தெய்வம் என கொண்டு
அவன் இறந்தால் உடன் கட்டை
ஏறியதும் வந்த வண்ணமல்ல

இது
அபாயத்தின்
வண்ணம்

பிஞ்சு உடலை
பஞ்சு என கொண்டு
பிய்த்தெறிந்ததும்
தெளித்த குருதியின்
வண்ணம் இது

இது வண்ணம் என
கொண்டாடும்
பேதைகளின்
வன்மம்
எதை கொண்டு இதை
களைய போகிறோம்

கள்ளிப்பாலுக்கு
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்
உன் சாதிக்கு இரையாக்க
பார்த்தீர்
தப்பித்தாள்
உன்னை மாய காதல் வலையில்
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்
உடன்கட்டை ஏற்ற  நினைத்தீர்
தப்பித்தாள்

தப்பி பிறந்தவள்
வாழ்வதே தப்பு தானோ ?

யார் இதற்கு காரணம்
சட்டமா ? இந்த நாடா ?
இல்லை இந்த நாட்டின்
அரசியல்வாதியா ?

இல்லை
மாற்றம் உருவாக
வேண்டும்
மக்களாகிய
நம்மிடமிருந்து

பெண்மையை போற்றுவோம்
தாயை போற்றுவோம்
தாய் நாட்டை போற்றுவோம்


பெண்



பெண்னை ஒரு தெய்வமாக வணங்கும் நாடே
பெண்ணை ஓட ஓட துரத்துகிறதே .

அன்று  பெண்களை போற்றிய கைகள்
இன்று  ஆனதேனோ அவளை சூறையாடும்  கைதிகள் 

உயிரை படைக்கும் சக்தி பெண்ணிடமே உள்ளது 
அவளை அழித்தால் அழியும் உலகு முடிவு உன்னிடமே உள்ளது 

அன்புக்கு இலக்கணம் அம்மா
அவள் அன்பையே இழிவாக்குவது தகுமா

அச்சத்தின் விளிம்பில் இருக்கிறாள் பெண் 
அவளை காப்பாற்ற வேண்டிய நாடோ சதியின் பின்

வீதியில் காலடி எடுத்துவைக்க தயங்குகிறாள் 
அவள் வாழ்க்கையின் பயத்தை எண்ணி 

சுதந்திரமான குடிமக்கள் இருக்கும் நாட்டிலே 
சுதந்திரம் இல்லையே பெண்களுக்கே

பெண் என்பவள் நாட்டின் கண் 
அவளை இழிவு படுத்தினால் 
நம் வாழ்க்கை மண் 



செவிலியர்


பெற்றெடுத்து உன்னை
அன்பாய் பார்த்துக்கொள்பவள்
தாய்
தான் பார்ப்பவர்கள் எல்லாரையும்
பெற்றெடுத்த தாயின் பாசத்தோடு
அரவணைப்பவர்கள்
செவிலியர்கள்

புனிதமானவள் என்று
தாயை சொல்வோம்
புனித பணியை
தினமும் செய்பவள்
செவிலி

பிணி வந்த நேரத்தில்
வீட்டில் இருப்பவரே
முகம் சுளிக்கும் இக்காலத்தில்
முகம் மலர்ந்து
பணிவிடை செய்ய
ஓடி வருபவள் இவள்

அறுவை சிகிச்சை ஆயினும்
ஆறாத நோயாயினும்
உடன் இருப்பவர்களுக்கு
ஆறுதலாய் இவள்
இருப்பாள்

மருத்துவம் தான்
கணினி துணை கொண்டு
பலமடங்கு வளர்ந்தாலும்
செவிலி இவள் இன்றி
எதுவும் வெற்றி அடையாது

தாய் போல் இவள் நம்மை
அரவணைத்தாலும்
ஏனோ  சகோதரி என்றே
இவளை அழைக்கிறோம்

பொறுமைக்கு நான்
கண்ட உவமை இவள்

நேரம் காலம் பார்க்காது
பொறுப்பாய் புன்னகை சிந்தி
காக்கும் நீயும்
பிணி கொண்ட நேரத்தில்
நான் கண்டா
தெய்வம் தான்
நீதான்

கிறுக்கினேன்

கவிதைகள் படித்தேன் பல
புரிந்தன சில ,
புதிராய் இருந்தன பல
பற்றிக்கொண்டது ஆர்வம்
எழுத சொன்னது மனம்
எழுத நினைத்தேன்
வார்த்தைகள் தேடினேன்
கவிதை எதை பற்றி எழுத ?
தீண்டினேன்
வரவில்லை வரிகள்
உணர்ந்தேன்
என்னுள் கவிஞன்-
இல்லை என்று
இல்லை என்றால்
என்ன உருவாக்கலாம்
என்று செய்தேன்
முயற்சி
கொஞ்சம்
பயிற்சி
தொடங்கினேன்
கிறுக்கினேன்
கவிஞனாய் மாற
செதுக்கினேன்
வார்த்தைகளை


விழித்திடு மனிதா !

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் "
    தமிழ் தாய் வாழ்த்தையும் நீர் கொண்டே தொடங்கினான் 
என் தமிழன் 

வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவர்க்கும் தண்ணீர் 
முதலில்  கொடுத்தே உபசரிப்பான் அவன் 

ஆறுகள் அனைத்துக்கும் தான் உயர்வாய் மதிக்கும் 
பெண்ணின் பெயரையே வைத்தான் அவன் 

ஆற்றில் பார்த்தார் உன்னை என் பாட்டன் 
கிணற்றில் பார்த்தார் உன்னை என் அப்பா 
குழாயில் பார்க்கிறேன் உன்னை  நான் 
குப்பியில் பார்க்கிறான் உன்னை என் மகன்
 எங்கு பார்ப்பானோ உன்னை என் பேரன்

வேடிக்கையாய் தெரிந்தாலும் சந்ததியின் 
அவலம் அறைகிறது என் கன்னத்தில் 

தன் உடல் வியர்வை துளியை கூட உரமாக்கி 
விவசாயம் செய்தான் அவன் 

வானுயர கட்டிடங்கள் கட்டிய மனிதன் 
அழகு பார்த்தான் வானுயர்ந்த அழகான மரங்களை வெட்டி 

வெட்டியது மரம் அல்ல தன் சந்ததியின் 
மரண வாசலின் முதல் படி என அறியாமல் 

தவறி பெய்யும் மழையையும் சேர்த்து வைக்க 
தவறி விட்டோம் 

இனி மிஞ்சி இருப்பது என் கண்களின் ஓரத்தில் 
எட்டி பார்க்கும் கண்ணீர் துளியே 

அது வற்றுவதற்குள் விழித்திடு மனிதா !

நீ இல்லா நாளில் !

என் தனிமை பயணம் தொடர்கிறது... ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்..... ஒவ்வொரு பொழுதும் சோகமாய்...... நீ இல்லாமையால்...

வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது?

கதறி அழவும் முடியாமல் கண்ணீரை அடக்கவும் முடியாமல் கலங்கியபடி வீதியில் நடக்கிறேன் .

அடுத்தமுறையாவது விசாரித்து பிறக்க வேண்டும்... எந்த ஜென்மத்தில்,, நீ மீண்டும் கிடைப்பாயென்று..!

Friday, November 9, 2018

எனக்கு மட்டும் ஏன் இப்படி ?!

எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

பேசி பழகிய உறவுகள்
பேச மறந்த நிகழ்வுகள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

அன்பு காட்டும் தாய்
அக்கறை காட்டும் தந்தை
அரவணைக்க ஒரு சகோ
இருந்தும் தனிமையாய் உணர
எனக்கு மட்டும்
ஏன்இப்படி?

கணவன் என என்னை கொண்ட மனைவி உண்டு
தந்தை என அழைக்க பிள்ளையும் உண்டு
இருந்தும் தனிமரம் என உணர
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

சந்தோஷமாய் பேசி ஆனந்த தேன் கூட்டில்
உலா வரும் வேளைகளில் எல்லாம்
உடன் கல்லெறிந்து கலைக்கும் தருணங்கள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

என் சோகம் என்னை நேசிப்பவர்களை
காயபடுத்தும் என்று அறிந்தே
விலகி செல்ல முயல்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

நட்பென்று பழகிய உறவுகள்
முள்ளென்று குத்தும் வேளை
மரணத்தின் விளிம்பில் நிற்பதாய்
உணர்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

ஆண்மகனாய் பிறந்ததால்
வெளிப்படையாய் அழவும்
திராணி இன்றி உள்ளுக்குள் குமுறுகிறேன்
யாருமே அறியாவண்ணம்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

இறைவா
நான் செய்த தவறை திருத்த
எனக்காக இல்லாவிடினும்
என்னை நேசிக்கும்
சில உறவுகளுக்காக வேணும்
எனக்கொரு ஒரு வாய்ப்பு கொடு


Tuesday, October 30, 2018

தித்திக்கும் தீபாவளி வருது

திக்குக்கு ஒருவராய் இருக்கும் நம்மை
ஒருங்கிணைத்து கொண்டாட வைக்கும்
தித்திக்கும் தீபாவளி வருது

தித்திக்கும் இனிப்பு பலகாரம் செய்து கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது

தீமையெல்லாம் செய்த அரக்கனை வதம் செய்த
இறைவனை போற்றி கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது

நெசவு செய்த நெசவாளியையும்
விவசாயம் செய்த விவசாயியையும்
நினைத்து நினைத்து கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது

உடலெல்லாம் வெடி மருந்து ஆனாலும்
பட்டாசு செய்து விற்று நாம் அதை வெடிக்கையில்
அவன் குடும்பம் ஒரு வேலை உணவு உண்டு கொண்டாட
நம் மனமும்  மகிழ்ந்து கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது

அதிகாலையில் தம் மனம் கவர்ந்த நடிகரின்
படத்தை திரையரங்கில் முதல் காட்சி கண்டு
காளையர்கள்  கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது

உலக தொலைக்காட்சியில் முதல்முறையாக
வீட்டின்  சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை
கன்னியர்கள் அமர்ந்து கண்டுகளிக்க
தித்திக்கும் தீபாவளி வருது

சிறுவர் முதல் முதியவர் வரை
தித்திப்பாய் கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது

               WISH YOU HAPPY DIWALI

Monday, October 22, 2018

பாரமில்லை !


என்றும் போல் 
அன்றும் சூரியன் 
கிழக்கே தான் உதித்தது 

அழகு கண்டு , அந்தஸ்து கண்டு 
காதல் கொள்ளும் இவ்வுலகில் 
அன்பை கண்டு காதல் கொண்டாள் அவள் 

கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொண்டு

வீட்டில் வறுமை இருந்தும் என்றும்  
அன்பை வறுமை இன்றி வழங்கும்
என் மனைவி

சின்னஞ்சிறிய எறும்புக்கும் உழைப்பு தேவை படும்போது
நம் கனவை நினைவாக்க

நமக்கும் தேவை தானே யோசி 
என உழைக்க வைத்தவள் அவள் 

உளி பட்ட கல்லில் தான் 

உருவத்தை காண முடியும் கடின உழைப்பு  இருந்தால் தான் 
உயர்வை அடைய முடியும் !
என்னும் தாரகமந்திரம் என் தலையணை 
மந்திரமாய் தினம் உணர்த்துபவள் இவள் 

தீவாளி வரும் நேரம் என் குழந்தை 

கேட்ட இனிப்பு மிட்டாயும் , 
என் மனைவிக்கு உடுக்க 
கிழியாத ஒரு சேலையும் வாங்க வேண்டும் 

என் இதயத்தில் இவர்களை  சுமக்கையில் 

என் தலையில் சுமக்கும் எதுவும் 
எனக்கு பாரமில்லை

Monday, October 8, 2018

எதிர்பார்ப்பு!














எல்லா பெண்ணையும் போல் தான்
என்கனவும் சிறகடித்து பறந்தது
கன்னி பெண் வயதில்

மன்னனின் மகளும் அல்ல
அரண்மனை இளவரசியும் அல்ல
அது என் தவறும் அல்ல

தினம் உழைத்து தின கூலி வாங்கி
தினம் தினம் செத்து  பிழைக்கும்
நாடோடியாய் வாழ்வது தான்
நான் வாங்கி வந்த வரமா ?

எந்த கவலையும் இல்லை
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
இந்த சூரியன் மட்டும் தினம்
உதிக்க வேண்டும் என்பதை தவிர

வெள்ளரி பிஞ்சுகளை கூடையில் விற்று
கிடைத்த காசு என் மடியில் உண்டு
என் கை பிடித்து நடக்கும்  என் குட்டி
மகள் உடன் உண்டு

ஒரு  வாரமாய் பெய்த மழையில்
பசி மறந்து தண்ணீரே மருந்தென்று
இருந்தோம்
மழையில் காணாமல் போன சூரியனும்
இதோ இன்று தான் உதித்திருந்தான்


இன்று என் மகளுக்கும், கணவனுக்கும்
பிடித்த உணவு சமைத்து
இரவு வரும் நிலவின் ஒளியில் அமர்ந்து
சாப்பிட வேண்டும்

கட்டாந்தரையில் பாய் விரித்து
மகளுக்கு நிலவை காட்டி
தாலாட்டு பாடிட
மகளும்,, என்  கணவனும்
என் மடியில் தூங்கிட வேண்டும்

இன்பம் என்றும்  இது போதும்
இரவு இது நீண்டிட வேண்டும் என்று தான்
இதோ
இந்த சூரியனை கூடைக்குள் இட்டு
ஒளித்து வைக்க இடம் தேடி ஓடுகிறேன்


நீங்களும் சொல்லிடாதீங்க
சூரியனை காணாளனு பிராது
ஏதும் குடுத்திடாதீங்க


Friday, October 5, 2018

சகோதரிக்கு

மன வேதனையில்
அரட்டை அடிக்காமல்
ஒதுங்கியிருந்த நான்

மீண்டும் அரட்டை அரங்கத்தில்
வந்தநாள்
ஒரு வார்த்தை பேசாமல்
நான் இருந்தபோதும்
கண்டுகொண்டாய் என்னை
நான்யாரென

யாருடனும் பேசாமல் இருக்க எண்ணி தான் வந்தேன்
உன் கலகல பேச்சு அதை மாற்றியது

எதையும் பேசிக்கொண்டதில்லை அதிகமாய்
இருந்தும் ஏதோ ஜென்மத்தில் மிச்சம் வைத்த உறவு போல் தோன்ற
தங்கை என அழைத்தேன். நீயும் அண்ணா
என ஏற்றுக்கொண்டாய்

பல நாட்கள்
உன் உறவை பிரித்திடுவேனோ
என பயந்தே பேசாமல் இருந்ததுண்டு

நேசித்து நெருங்கி பழகும் எதையும்
நம்மிடம் இருந்து பிரித்து பார்ப்பதே
இறைவனின் விளையாட்டாய் போனதால்

கேட்ட செய்தி கெட்ட  செய்தி ஆயினும்
எதுவும் செய்யமுடியாமல் ஊமையாகி
ஒடுங்கி போனேன்

வார்த்தை ஏதும் வரவில்லை
கண்ணீர்மட்டும் விதிவிலக்காய்

சகோதரி,
உன் ரத்தபந்த சொந்த சகோதரனாய் இல்லாவிடினும்
உன் அழைப்புக்கு செவிசாய்க்கும்
உன் அன்பு சகோதரனின் பிரதிபலிப்பாய்
உன் அண்ணன் என்றும் நானிருக்கிறேன்.



Thursday, August 16, 2018

என் காதல் தேவதை
















இந்த கடல்தாண்டி நீ  இருந்த பொழுதில்
என் இதயத்தில் இடம் பிடித்தவள் நீ

பார்த்துக்கொண்டதில்லை நாம்
இணையம் வழி இணைந்த உறவு
இது

தனிமையே துணை என இருந்தவனை
உன் நினைவுகளே துணை என
மாற்றியவள் நீ

தென்றல் காற்று மெல்ல வந்து
சில்லென்று தொடுகிறது
உன்னை நினைக்கையில்

மென்மையான உன் உரையாடல்
இரவில் ராஜாவின் மெலடி கேட்ட
இன்பம் தரும்

உன்னுடன் செல்ல செல்ல
சண்டைகளிட்ட போதெல்லாம்
இந்த கடல் அலையிடம் தான் வந்து
என் சோகம் பகிர்வேன்

என் சோகமெல்லாம் உள்வாங்கி
மன அமைதியை திருப்பித்தரும்
மீண்டும் உன்னிடம் பேச வைக்கும்

உன்னை பார்க்காத அந்நாட்களில்
இந்த நிலவை காண்பேன் அது
காணாத உன்முகத்தை பிரதிபலிக்கும்

இதோ
கடல்தாண்டி வந்து உன் கரம்
பிடித்தேன்

விரல்களின் இடைவெளியில்
உன் விரல்கோர்த்து
கடற்கரை மணலில் நம் கால்தடம்
பதித்து அமர்கிறோம்

உன் உதடு சிரித்தாலும்
உன் மனதின் சஞ்சலம்
நானறிவேன் அன்பே
பெற்றோரை பிரிந்து
கடல்தாண்டி என் கரம் பிடித்து வந்த
உன் சோகம்

சீறிப்பாய்ந்து வந்த கடல் அலை
நம் அருகே  வந்து பவ்வியமாய் கால் வருட
உனக்கும் சொல்லியிருக்கும் ஒரு சேதி
இருக பற்றிய உன் கைகள் எனக்கும் உணர்த்தியது அதை

இயற்கை என்னும் தேவதைகளுடன்
என் கைகள் பற்றிய என் காதல் தேவதை
என் வாழ்க்கைக்கு  அழகாய்
வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறது